தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 9, 2013

சபை நடுவே திரௌபதி கதறிய அந்த கணமே ஏன் கிருஷ்ணர் வரவில்லை? தாமதம் ஏற்பட்டது ஏன்?

சபை நடுவே திரௌபதி கதறிய அந்த கணமே ஏன் கிருஷ்ணர் வரவில்லை? தாமதம் ஏற்பட்டது ஏன்?

கௌரவர் சபையில் நூற்றுக்கனக்கானோர் நடுவே திரௌபதி துகிலுரியப்பட்ட சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அந்த சம்பவமும் அதற்க்கு பின் நிகழ்ந்தவைகளும் நமக்கு உணர்த்தும் பாடங்கள், நீதிகள் அநேகம் அநேகம்.

தன்னை துகிலுரியப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் திரௌபதி துச்சாதனன் தன்னை நெருங்குவதற்கு முன்பு சபையில் அங்கும் இங்கும் ஓடுகிறாள். அங்குள்ள பெரியோர்களிடம் தன்னை காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். துரியோதனின் கொடுங்கோன்மைக்கு முன்னர் எவருக்கும் தர்மத்தை எடுத்துரைக்க துணிவிருக்கவில்லை.

“துவாரகாபுரி வாசா…..கிருஷ்ணா… காப்பாற்று…. அபயம்…. அபயம்…” என்று அலறுகிறாள். அப்போதும் ஒன்றும் நடந்துவிடவில்லை. துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் இவளை பார்த்து சிரிக்க, துச்சாதனன் மெல்ல எக்காளமாக ஒரு சிரிப்பு சிரித்த படி நெருங்குகிறான். அவளது சேலையின் தலைப்பை பிடித்து இழுக்க, செய்வதறியாது தவிக்கும் திரௌபதி, இருபுறமும் கைகளை வைத்து தனது மானத்தை மறைத்துக்கொள்கிறாள்.

“கிருஷ்ணா… காப்பாற்று…. உனக்கு இரக்கமில்லையா? நான் கூப்பிடுவது உனக்கு கேட்கவில்லையா? …. கிருஷ்ணா…..” இவள் கதற கதற கௌரவர்களின் சிரிப்பு சப்தம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. துச்சாதனன் துரியோதனனை பார்க்க, “ம்ம்ம்… என்ன தயக்கம்? உருவு அவள் சேலையை” என்று துரியோதனன் கண் ஜாடையிலேயே ஒப்புதல் அளிக்க…. ஏற்கனவே மானத்தை இழந்து நிற்பவளை கழுவிலேற்றும் விதமாக திரௌபதியின் சேலையை மள மள வென உருவ ஆரம்பிக்கிறான் துச்சாதனன். அதுவரை தனது சுயபலத்தை நம்பி, தனது மானத்தை இரு கைகளாலும் மறைத்துக்கொண்டு நின்ற திரௌபதி பின்னர் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி “கிருஷ்ணா.. நீயே அபயம்…. விட்டேன் இரு கைக வேந்தர் சபை நடுவே….” என்று முழுமையாக சரணடைகிறாள். நின்ற நிலையிலேயே ஆழ்ந்த மயக்கத்துக்கு சென்றுவிடுகிறாள்.

இதற்கும் மேல் பகவான் சும்மாயிருப்பானா? அப்போது தான் நடக்கிறது அந்த அதிசயம்!

துச்சாதனன் சேலையை இழுக்க இழுக்க அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கு மேல் இழுக்க முடியாது ஒரு கட்டத்தில் துச்சாதனன் களைப்படைந்துவிடுகிறான். திரௌபதியை மானபங்கம் செய்யும் கௌரவர்களின் திட்டம் கடைசியில் பிசுபிசுத்துவிடுகிறது.

அன்று மாலை கிருஷ்ணரை சந்திக்கும் திரௌபதி, “அச்சுதா…. இதற்கு முன்பு எனக்கு ஒரு சிறிய பிரச்னை என்றபோது ஓடி வந்தாயே…. ஆனால் இம்முறை அத்துணை பேர் முன்னிலையிலும் உன் பக்தை கதறிய அந்த கணமே ஏன் நீ வரவில்லை ? மிகவும் தாமதம் செய்துவிட்டாயே…. கருணைக் கடலுக்கு இது அடுக்குமா?” என்று கேட்க்கிறாள்.

அதற்க்கு பகவான், “பாஞ்சாலி…. இதற்கு முன்பு நீ என்னை அழைத்தபோது ‘இதயக் கமல வாசா சீக்கிரம் வா….’ என்று அழைத்தாய். உன் இதயத்திலேயே இருந்தபடியால் உடனே வந்துவிட்டேன். ஆனால் இம்முறை “துவாரகாபுரி வாசா என்றல்லவா அழைத்துவிட்டாய்…. நான் துவாரகையிலிருந்து கிளம்பி வர சற்று நேரமாகிவிட்டது. மேலும், சபையில் நீ முதலில் உன் பலத்தை அல்லவா நம்பியிருந்தாய். அதனால் தானே உன் கைகளை குறுக்கே மறைத்துக்கொண்டு நின்றாய். எப்போது நீ இருகைகளையும் தூக்கி ‘அபயம்’ என்று என்னை முழுமையாக சரணடைந்தாயோ அந்தக் கணமே நாம் உன்னை காப்பாற்றிவிட்டோம்” என்றார்.

இதை கேட்கும் திரௌபதி , “கிருஷ்ணா… என்னை மன்னித்துவிடு கிருஷ்ணா” என்று பகவானின் கால்களில் விழுந்துவிடுகிறாள்.

(இப்போதும் இந்த வராலாற்றை படிக்க நேர்ந்தாலோ பார்க்க நேர்ந்தாலோ எவ்வளவு முயன்றாலும் கட்டுபடுத்த முடியாது என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருகிவிடுவதுண்டு!)

சரணாகதி தத்துவத்தை இதை விட எவரும் எளிதாக விளக்கிவிட முடியாது. இதன் அர்த்தம் ‘நாம் நம் பலத்தை நம்பக்கூடாது என்பதல்ல. இறைவனை முழுமையாக நம்பவேண்டும்’ என்பது தான்.

திரௌபதியின் இடத்தில் இருந்து சற்று நினைத்து பாருங்கள். அத்துணை பேர் நடுவே… தனது மானத்தை மறைத்துக் கொண்டிருந்த கைகளை விட்டுவிட்டு மேலே கூப்பி “கிருஷ்ணா….அபயம்’ என்று சொன்னாள் என்றால் அவளுக்கு பகவானின் பேரில் எந்தளவு நம்பிக்கை இருந்திருக்கவேண்டும்? அவன் பாதார விந்தங்களை முழுமையாக சரணடைவோம். அவன் நம்மை பார்க்கும் வரை அவன் கால்களை விடவேக்கூடாது. மேலும் இறைவனை எந்தளவு நாம் நெருக்கமாக நினைக்கிறோமோ அந்தளவு அவன் நமக்கு நெருக்கமாக இருப்பான் என்பதையும் இந்த சம்பவம் மூலம் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

உங்கள் பக்தி தூய்மையாக – நம்பிக்கை அதிகமாக – இருந்தால் அவன் உங்கள் அருகிலேயே இருப்பதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment