கண்ணதாசன் நிச்சயமாக ஒரு சித்தனாகத்தான் இருந்திருக்கவேண்டும். இறைவன் படைத்த படைப்பில், குறிப்பாக பிறவிப் பயன்களை அவரை விட யாரும் எளிதாக சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தான் வாழ்ந்து காட்டியதையே அனைவருக்கும் மேற்கோள் காட்டியவர். தான் எப்படியெல்லோம் வாழ்ந்தோம் என்பதை விட தன் பணி மற்றவருக்கு எப்படியெல்லாம் சிறப்பு செய்தது, எப்படியெல்லாம் மகிழ்வித்தது என்பதில் கவனம் செலுத்தியவர். யாருக்கும் அஞ்சாதவர் - கடவுளுக்கு கூட அஞ்சியதில்லை.
'திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் திருநீறு பூசுகின்றான்
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர் சொல்லி சீட்டைப் புரட்டுகின்றான்
முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின் முதல்வனை வணங்குகின்றான்
முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் முருகனைக் கூவுகின்றாள்'
'மெய்யான ஞானியும் விதிவிட்ட காற்றிலே விலையாகிப் போவதுண்டு -
விவரமே இல்லாமல் காலத்தின் போக்கிலே வீணர்கள் வாழ்வதுண்டு'
(அவிவேகசிந்தாமணி)
உண்மைதானே. எத்தனையோ நல்லவர்கள் நசிந்து போவதையும் எத்தனையோ வீணர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் கண்கூடாக காண்கிறோமே - இது எப்படி? இதுதான் விதி விட்ட காற்றோ? கவிஞர் அப்படித்தான் சொல்கின்றாரோ?
' மாடு வென்றாலென்ன - மனிதன் வென்றாலென்ன
வல்வினை வெற்றி மயிலே'
கண்ணதாசன் ஆதி சங்கரரின் அறிவாற்றலில் ஆச்சரியப்பட்டு அவர் சுலோகங்களை தமிழ்படுத்தியவர். ஒன்று கனகதாரா தோத்திரம் 'பொன்மழை', 2) பஜகோவிந்தம் 'கோவிந்தனைப் பாடுங்கள்'. இந்த இரண்டு பாடல்களுமே இருவேறு நிலையில் எழுதப்பட்டவை என்பதை பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் மனதில் பல கேள்விகள்.
பிச்சைக்கு நின்ற வீட்டில் பிராமணன் மனைவி வறுமையால் வாடும் நிலையைப் பார்த்து அவளுக்கு உதவி புரியவே எழுந்த பாடல் - கனகதாரா தோத்திரம். செல்வம் அருளும் லக்குமியைப் பார்த்து ஆதிசங்கரர் பாடிய பாடல் - தமிழில் கண்ணதாசனின் எளிய வரிகளைப் பார்ப்போம்:
' மந்திரம் உரைத்தாற் போதும் - மலரடி தொழுதால் போதும்
மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்
இந்திரப் பதவி கூடும் - இகத்திலும் பரங்கொண்டோடும்
இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்'
என ஆரம்பித்து கடைசியில் கீழ்க்கண்டவாறு முடியும்
' இப்பொழு துரைத்த பாடல் எவெரெங்கும் பாடினாலும்
இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் சேரும்
நற்பேரும் பேறும் கிட்டும் நன்னிலை வளரும் என்றும்
நாட்டுக்கே ஒருவராக நாளவர் உயர்வார் உண்மை'
ஆதிசங்கரரின் கருத்து - கண்ணதாசனின் தமிழ் இரண்டுமே அருமை அல்லவா?
சரி.. செல்வம் கேட்டுப் பாடிய ஆதிசங்கரர் ஏன் பஜகோவிந்தம் பாடினார் ? பஜகோவிந்தத்தின் ஆதி தத்துவமே மாயா உலகத்தை உணர்ந்து கொள்வதுதானே. இப்படி இந்த உலகமே மாயை என்றால் செல்வம், வளம், இன்பம், அறிவு, நற்பேர், நன்னிலை இவையெல்லாம் யாருக்காக?
அப்படி பஜகோவிந்தம் என்ன நேர்விதமாக சொல்கிறது? கண்ணதாசனின் தமிழ் நடையின் மூலம் சற்றுப் பார்ப்போமே...திவாகர்..http://
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக