தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஜூன், 2013

தமிழிசையின் அடிப்படை நரம்புகள்!!


தமிழிசையின் அடிப்படை நரம்புகள்
===========================
குரல் (இன்றையக் குறியீடு - ச), 
துத்தம் (ரி), 
கைக்கிளை(க), 
உழை (ம),
இளி (ப),
விளரி (த),
தாரம் (நி)..

இதில் துத்தம், கைக்கிளை, உழை, விளரி, தாரம் என்ற ஐந்து சுரங்கள் மெலிந்தும், வலிந்தும் ஒலிக்கக் கூடியவை. இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்த அடிப்படைச் சுரங்கள் (நரம்புகள்) 12

ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2

இந்தப் பன்னிரு நரம்புகளில் 7 நரம்புகள் கொண்டு பண்ணப் படுவது பெரும்பண் எனப்படும். வெறும் ஆறு நரம்புடையன பண்ணியல் எனப்படும். இதே போல ஐந்து நரம்பின, திறம் எனப்படும்; நாலு நரம்பின, திறத்திறம் எனப்படும். தமிழிசையில் இருக்கிற எல்லாப் பண்களுமே 4-ல் இருந்து 7 சுரங்கள் கொண்டவையே. பண்களைச் சங்க காலத்தில் பாலையென்றும் அழைத்தார்கள். இந்தக் காலத்தில் இராகம் என்று அழைக்கிறோம். (அரங்க நாதன் இரங்க நாதன் ஆனது போல, அரத்தம் இரத்தம் ஆனது போல, அராகம் என்ற சொல்லைத்தான் இராகம் என்று தவறாக அழைக்கிறோம்.) அந்தக் காலத்தில் குறிப்பிட்ட பண்களை இசைக்க வேண்டி, விதப்பான (specific) யாழ்களையே (குறிப்பிட்ட தடிமன் (thickness), நீளம், இறுக்கம் (tension) கொண்ட கம்பிகளைச் சேர்த்துச்) செய்தனர். ஒவ்வொரு யாழிலும் ஒரு சில பண்களை மட்டுமே இசைக்க முடியும். நாளாவட்டத்தில் அளவு மிகுந்த பண்களை இசைக்க எண்ணி இன்னும் வளர்ச்சியுற்ற செங்கோட்டு யாழ் (இந்தக் காலத்து வீணை, வீள்>வீளை>வீணை, விண் என்று தெரிக்கும் கம்பி கொண்ட இசைக் கருவி), கோட்டு யாழ் (இந்தக் காலத்து கோட்டு வாத்தியம், இசைக்கலைஞர் இரவிக்கிரணால் சித்ரவீணா என்று வடமொழிப்பெயர் சூட்டப்பட்ட கருவி) சீறியாழ் (somewhat resembling mandolin),பேரியாழ் போன்றவற்றைச் செய்தனர்.

தமிழ் இசையைப் பற்றி அறிய, சங்கம் மருவிய காலத்தில் சிலப்பதிகாரத்திற்கும் பின்னே எழுந்த, சேறை அறிவனார் இயற்றிய, பஞ்ச மரபு இசை நூலைப் படிக்க வேண்டும். இதை அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் உதவியுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் 1993-ல் வெளியிட்டிருக்கிறார்கள். இசைக்கலைச் செல்வர் முனைவர் வீ.ப.கா. சுந்தரனார் இந்த நூலுக்கு நீண்ட விரிவுரை எழுதியிருக்கிறார். இந்த உரையில் குறிப்பிட்ட சில யாழ்கள் (பண்கள்) இவை:

முல்லையாழ் - செம்பாலை - அரிகாம்போதி - கார்-மாலை
ச ரி2 க2 ம1 ப த2 நி1
குறிஞ்சியாழ் - படுமலைபாலை - நடபைரவி - கூதிர்-யாமம் -
ச ரி2 க1 ம1 ப த1 நி1
நெய்தல்யாழ் - செவ்வழிப்பாலை - இருமத்திமத் தோடி - மாலை -
ச ரி1 க1 ம1 ம2 த1 நி1
பாலையாழ் - அரும்பாலை - சங்கராபரணம் - வேனில் -மதியம் -
ச ரி2 க2 ம1 ப த2 நி2
மருதயாழ் - கோடிப்பலை - கரகரப்பிரியா - முன்பனி -காலை -
ச ரி2 க1 ம1 ப த2 நி1
நெய்தல்யாழ் - விளரிப்பாலை - தோடி - மாலை -
ச ரி1 க1 ம1 ப த1 நி1
குரல்புணர் நல்யாழ் - மேற்செம்பாலை - கல்யாணி - இளவேனில் -
ச ரி2 க2 ம2 ப த2 நி2

இங்கே பாலையாழ் என்பது பாலை நிலத்திற்கு உரியது; வேனிற்காலத்திற்கும், நண்பகல் நேரத்திற்கும் உரியது என்று புரிகிறது. ஆனால், செம் பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப் பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என்று எழுதும் போது வரும் பாலை என்ற சொல் எப்படிப் பிறந்தது என்று தான் புரியாமல் இருந்தது. முனைவர் வீ.ப. கா. சுந்தரம் சுரங்களைக் கொண்டு பகுக்கப் பட்ட இசை, எனவே பகல் > பால்> பாலை என்று எழுந்ததாகச் சொற்பிறப்புக் கூறுவார். அது எனக்குப் பல காலமாய் நெருடலாகவே இருந்தது.

மேலே இந்த மூலிகைகள் பொத்தகத்தைப் படித்தவுடன் தான், சொக்கத் தங்கத்தைக் கண்டிருக்கிறோம் என்று விளங்கியது. மறுபடியும் மேலே படியுங்கள்; பாலை மரத்தில் இலைகள் 4-க்குக் குறையாமல் இருந்து 7 -க்கு மிகாமல் இருக்குமாம். தமிழ் இசைப் பண்களிலும், சுரங்கள் 4 - ல் இருந்து 7 -க்குள் தான் இருக்கும்;. இந்த மரத்தின் இலைக் கட்டு வட்டமாக இருக்கும் என்பது போல, பண்களிலும் வட்டமாகச் சுரங்களை பெய்து பண்ணைப் பெயர்த்து எழுதுவதற்கு வட்டப் பாலை முறை என்றே பெயர். இது போல ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை என்றும் மேலும் சில முறைகள் உண்டு. மொத்தத்தில் 15,456 பண்கள் உண்டு என வீ.ப.கா.சுந்தரம் சொல்லுவார். (இந்த எண்கணக்கை ஆய்ந்து பார்க்க முயன்றுகொண்டிருக்கிறேன். இன்னும் புரியவில்லை.)

சங்க காலம், அதற்கு முந்திய காலங்களில் வாழ்ந்த தமிழனின் பார்வை மிக நுணுக்கமாக இருந்திருக்கிறது. இயற்கையைக் கூர்ந்து நோக்கியே தமிழன் இசையை எழுப்பியிருக்கிறான் என்பது பலருக்கும் தெரிந்த கதை. கூடவே, பாலை என்ற பொதுப் பெயரும் கூட இயற்கையில் இருந்து, ஒப்பீட்டு முறையில், அவன் செய்த இசைப் பண்களுக்கும் இடப்பட்டிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது. இன்னும் எத்தனை வியப்பான செய்திகளை நாம் தேட வேண்டும்? நம் இயற்கையறிவு இன்னும் கூட வேண்டும் என்பதை உணருகிறேன். பாலை மரத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அதற்கு வேறு ஏதாவது பெயர் இந்தக் காலத்தில் உண்டா?

நன்றி : தூய தமிழ்ச்சொற்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக