கச்சத்தீவு உண்மையில் தமிழர்களின் சொத்தா?
நாம் அனைவரும் வாசிக்க பட வேண்டிய பக்கங்கள் !!!
1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.
01 ராமேஸ்வரம்
02 குந்துகால்
03 புனவாசல்
04 முயல் தீவு
05 பூமரிசான் தீவு
06 முல்லைத் தீவு
07 மணல் தீவு
08 வாலித் தீவு (கச்சத் தீவு)
09 அப்பா தீவு
10 நல்ல தண்ணீர் தீவு
11 உப்பு தண்ணீர் தீவு
12 குடுசடி தீவு
ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.
1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.
1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.
1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.
இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.
1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.
டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.
1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.
1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.
1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.
1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம். சிங்களவன் நம் மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கிறான்.
நன்றி: அ. பெரியார் எழுதிய தமிழ்நாட்டு எல்லைப் போராட்டமும், பெயர் மாற்றமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக