இருபத்தி இரண்டு வயதாகும் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தனது திருமணத்தின்போது தனக்கு மேற்கொள்ளப்பட்ட கன்னித்தன்மைப் பரிசோதனையை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருவதாகக் கூறுகிறார்.
மஹாராஷ்டிராவில் உள்ள 'கஞ்சர்பத்' இனக்குழுவினரிடையே நிலவும் அந்த வழக்கம் அனிதாவின் திருமணத்தின்போதும், அவர் 'தூய்மையானவராக' உள்ளாரா என்பதை அறிய நிகழ்த்தப்பட்டது.
கிராமக் குழுவினர் அல்லது மணமக்களின் குடும்பத்தினர் வாடகைக்கு எடுக்கும் ஒரு விடுதி அறையில் முதலிரவுக்காக மணமக்கள் அனுப்பப்படுவர். அப்போது அவர்களுக்கு ஒரு வெண்ணிறத் துணி வழங்கப்படும்.
பாலுறவுகொள்ளும்போது மணப்பெண்ணுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது அந்தத் துணியில் உண்டாகியுள்ள கறை மூலம் கண்டறியப்படும். மணமக்ளுக்கு ரத்தக்கசிவு உண்டாக்கவில்லையெனில் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
மணமக்ளுக்கு அவ்வாறு ரத்தக்கசிவு உண்டாகாததால் திருமண உறவை மணமகன்கள் பலரும் முறித்துக்கொண்டுள்ளனர். அப்பெண்கள் பொது வெளியில் அவமானப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், தங்களுக்கு 'இழிவைத்' தேடித் தந்ததால் சொந்தக் குடும்பத்தினராலேயே கடுமையாகத் தாக்கப்படுவார்கள்.
எனினும், முதல் முறையாக பாலுறவுகொள்ளும்போது பெண்களுக்கு கட்டாயம் ரத்தக்கசிவு உண்டாக வேண்டும் என்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"பாலுறவின்போது ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும். முதல் முறை உறவு கொள்ளும் பெண்களுக்கு ரத்தக்கசிவு உண்டாகும் என்பது ஒரு மூடநம்பிக்கை," என்கிறார் டெல்லியில் உள்ள பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் சோனியா நாயக்.
அனிதாவைப் பொறுத்தவரையில், அந்தச் சோதனை வெற்றியடையாது என்று ஏற்கனவே தெரியும். திருமணதிற்கு முன்னரே தனது கணவருடன் அவர் உறவு கொண்டிருந்தார். ஆனால், அதன் பின்னர் நடந்த சம்பவங்களை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எல்லாம் தெரிந்திருந்ததால், தனது கணவர் தமக்கு ஆதரவாக இருப்பார் என்று அனிதா நினைத்தார். முதலிரவு நடந்து முடிந்தபின் என்ன ஆனது என்று கிராமக் குழுவைச் சேர்ந்தவர்கள் கேட்டபோது, அந்த வெண்ணிறத் துணியைக் காட்டிய அவரது கணவர், அனிதாவைத் தூய்மை அற்றவர் என்று கூறிவிட்டார்.
"எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது வற்புறுத்தலின்பேரில்தான் சுமார் ஆறு மாத காலம் அவருடன் நெருக்கமாக இருந்தேன். நான் தனித்து விடப்பட்டேன். என்னால் அழுவதை நிறுத்த முடியவில்லை," என்று பிபிசியிடம் அனிதா கூறினார்.
காவல்துறை மற்றும் சில சமூக செயல்பாட்டாளர்கள் தலையீட்டால் அனிதாவின் கணவர் அவருடன் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினார்.
எனினும் அத்தம்பதி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஊரார் தடை விதித்தனர். அனிதா கருவுற்றபின்னும் அது யாருடைய குழந்தை என்று அவரது கணவர் அனிதாவைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினார்.
கணவன் வீட்டில் இருந்து வெளியே அனுப்பட்டதால், பச்சிளம் ஆண்குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கே சென்றுவிட்டார் அனிதா. சிக்கல் அத்துடன் நிற்கவில்லை. இப்போது அனிதாவின் தங்கைகளுக்கும் இதனால் வரன் கிடைப்பதில் பிரச்சனை ஆகியுள்ளது.
அனிதா போன்ற துயரக் கதைகள் இனியும் நிகழாமல் இருக்க அதே சமூகத்தைச் சேர்ந்த 25 வயதாகும் விவேக் தமைசேகர் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளார்.
"எனக்கு 12 வயதாக இருந்தபோது ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். அப்போது அந்த மணமகளை அனைவரும் காலணியால் அடிக்கத் தொடங்கினர். அப்போது என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இப்பொது எல்லாம் புரிகிறது," என்கிறார் விவேக்.
இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்ளவுள்ள விவேக் மற்றும் அவர் மணக்க இருக்கும் பெண் ஆகியோர் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கும் சடங்குக்கு தாங்கள் உட்பட மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டனர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பிற ஆண்களும் இந்த விவகாரத்தில் மௌனம் கலைக்க வேண்டும் என்கிறார் விவேக்.
இந்த வழக்கத்துக்கு எதிராக 'stop the V ritual' எனும் வாட்சப் குழுவை விவேக் தொடங்கியுள்ளார். அதில் உள்ள சுமார் 60 உறுப்பினர்களில் பாதிக்கும் மேலானவர்கள் பெண்கள். "பிற்போக்கான இந்த வழக்கத்துக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறோம்," என்கிறார் அவர்.
"அறைக்கு வெளியில் பலரும் அமர்ந்திருக்கும்போது பாலுறவு கொள்வதென்பது புதுமணத் தம்பதிகளின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது. மணமகனுக்கு மதுபானம் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், 'கற்பிக்கிறோம்' எனும் பெயரில் ஆபாசப் படங்களும் காட்டப்படுகின்றதன. அடுத்த நாள் காலையில் மணமகள் தூய்மையாக உள்ளாரா இல்லையா என்பதை அறிய மணமகனிடம் மிகவும் மட்டமான கேள்விகள் கேட்கப்படுகின்றன," என்கிறார் விவேக்.
இந்த வாட்சப் குழுவினருக்கு பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இல்லை. "புனேவில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் அவர்களில் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். தங்கள் கஞ்சர்பத் சமூகத்தை சிறுமைப்படுத்தும் முயற்சிகளை நிறுத்தாவிட்டால் அவர்கள் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்று அவர்களது குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் விவேக் தனது பிரசாரத்தைத் தொடர்ந்து வருகிறார். அவரது செயல்பாடுகள் ஊடக வெளிச்சமும் பெற்று, கன்னித்தன்மைப் பரிசோதனையைப் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது.
இந்த நடைமுறை தற்போது பொது விவாதத்துக்கு உள்ளாகி வருவது இதை முற்றிலும் ஒழிக்க வழிவகுக்கும் என்று அவர் நம்புகிறார்.
- BBC - Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக