தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 பிப்ரவரி, 2018

பரதனின் தம்பியாகிய பாகுபலி வழியில் சமணம்!


பவுத்தம் ஒரு புறம் இது பரதன் வழி வந்து கொண்டிருக்க
பரதனின் தம்பியாகிய பாகுபலி வழியில் சமணம் தோன்றி விட்டது
பல கோடி ஆண்டுகள் பழமையான, உலகின் மிகப்பெரும் ஒற்றைக்கல் சிற்பத்தின் பின்னணியில் ஒரு வாழ்வியல் நெறி எழுதப்பட்டிருக்குமா? சரவணபெலகோலாவின் மலைகளில் 59 அடி உயரத்திற்கு வானம் எட்ட நின்றுகொண்டிருக்கும் பாகுபலி எனப்படும் கோமதீஸ்வரா சிலை அதற்கு சாட்சியாக நிற்கிறது.
நிஜ பாகுபலியின் கதை!
நீங்கள் சினிமாவில் பார்த்து வியந்த ‘பாகுபலி’யின் உண்மைக் கதை என்றுகூட இதைச் சொல்லலாம்.
இந்தியப் புராணங்கள் கொண்டாடும் அரசன் பரதனின் தம்பிதான் பாகுபலி. தனது வீரத்தால், இந்திய தேசம் முழுக்கப் போரிட்டுக் கைப்பற்றிய பரதனுக்கு இறுதியாக வெல்வதற்கு ஒரேயொரு நாடுதான் இருந்தது.
அது, தென்னிந்தியாவில் தனக்குச் சமமான பலத்துடன் ஆண்டுகொண்டிருக்கும் தம்பி பாகுவின் கோட்டை. தம்பியுடன் போர்புரியப் படையுடன் கிளம்பபினார் பரதன்.
பாகுவோ, `இருவருக்குமிடையிலான உரிமைப் போருக்கு எதற்கு வீரர்களைப் பலியாக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தில் `நாம் இருவர் மட்டும் களத்தில் சந்திப்போமே..!’ எனக் கோரிக்கை விடுத்தார்.
அண்ணனும் தம்பியும் மட்டும் களத்தில் மோதிக்கொண்டார்கள். மல்யுத்தம், நீர்ச்சண்டை… என விரிந்த போட்டியில் பாகுபலியே ஜெயித்தார்.
இருந்தாலும், ராஜ்ஜிய மோகத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பால் நாடு துறந்து, வீடு துறந்து, உடைமை துறந்து, உடை துறந்து விந்தியகிரி மலையின் உச்சிக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டார்.
ஒரு வருடம் முழுக்க அசையாமல் நின்ற கோலத்திலேயே அவர் தவம் மேற்கொண்டதால், அவரைச் சுற்றி இலைகொடிகளும் புற்றுகளும் படர்ந்தன.
அதன் பிறகு, அவர் அப்படியே மாயமாகிவிட்டதாக புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.
அதையும் தாண்டி, சமண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி.
காற்றில் கலந்து மாயமான பாகுபலிக்காக, `சாவண்டராயா’ என்கிற சிற்பக்கலைஞர் பின்னாளில் நிறுவிய சிலைதான் உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிற்பமாக சரவணபெலகோலாவில் உயர்ந்து நிற்கிறது.
`கோமதேஸ்வரா’ என்கிற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. அடைமொழிக்காக அல்லாமல் உண்மையிலேயே வானம் தொடும் உயரத்தில் இருக்கும் அந்தச் சிலைக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமஸ்தகாபிஷேகம் அனைத்து சமணர்கள் ஒருங்கிணைய இந்தாண்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்துவரும் கொண்டாட்டங்களின் முக்கியப் பகுதியான புனித நீராடல் 17-ம் தேதி தொடங்கியது.
வரும் 25-ம் தேதி வரை நிகழும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்வில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் 19-ம் தேதி அன்று இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்கள்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து சுமார் மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறது சரவணபெலகோலா.
எப்போதாவது ரயில்கள் நிற்கும் அந்தக் கிராமத்தின் ரயில் நிலையத்திலிருந்து பார்த்தாலே மலை உச்சியிலிருக்கும் சிலையின் சிரம் மட்டும் சிறிய கல் அளவில் தெரிகிறது. அந்தச் சிலையின் சிறப்பும் அதுதான்.
25 கி.மீ தொலைவு வரை அந்தச் சிலை இருப்பது தென்படும். இந்த சீசன் மட்டும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், கர்நாடக அரசு பெலகோலாவுக்காக இலவசப் பேருந்துகளை இயக்கிக்கொண்டிருக்கிறது.
முதல் நாள் நிகழ்வில் மட்டும் சுமார் 55,000 பேர் வரை கலந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.
பெலகோலா பேருந்து நிலையத்தின் பின்புறம் பாகுவின் விந்தியகிரி மலையும், நிலையத்தின் முன்புறம் பாகுவைச் சந்திக்க வந்த பரதன் தங்கியிருந்த சந்திரகிரி மலையும் இருக்கின்றன.
செங்குத்தாக தலா ஐநூறு படிகள் இரண்டுக்கும் இருக்கின்றன. காலையில் சந்திரகிரியிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பவர்கள், மாலையில் விந்தியகிரி மலையிலிருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம்.
சந்திரகிரியைவிட விந்தியகிரி மலையின் படிக்கட்டுகளின் செங்குத்து அதிகம் என்பதால், அதில் ஏறுவது சற்று கடினமாகவே இருக்கிறது.
மலையின் படிகளில் ஏற முடியாதவர்களுக்காக, விழாவுக்கென்றே தனியாக ‘டோலி’ தூக்குபவர்களை நியமித்திருந்தது கோயில் நிர்வாகக் குழு.
audience_19449`17-ம் தேதி மதியம் 2 மணி அளவில் முதல் புனித நீராடல் நடக்கும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 16-ம் தேதி மாலை சரவணபெலகோலாவின் தெருக்கள், கலையும் கொண்டாட்டமுமாகக் காட்சியளித்தன. பாகுபலியின் ஆளுயர மாதிரி வடிவச் சிலையை மலையைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலமாக எடுத்துவந்தார்கள்.
கர்நாடகாவின் பாரம்பர்ய இசைக்கருவிகளான தம்பட்டை, தக்கீது, நகரா, டோல்குனிதா இசை நடனம் ஆகியவை ஊர்வலத்தில் இசைக்கப்பட்டன. கட்டைக்கூத்துக் கலைஞர்கள், கர்நாடகத்தின் பாரம்பர்யக் கரகாட்டக் கலைஞர்கள்… என ஸ்பானிய கார்னிவல்களை நினைவுபடுத்துவதாக இருந்தது முதல்நாள் கொண்டாட்டம்.
பாகுவைப்போலவே பரதன்!
புனித நீராடலுக்கான தினம் என்பதால், பாகுபலி இருக்கும் மலையைவிட சந்திரகிரிக்கு வரும் கூட்டம் குறைவாக இருந்தது. மௌரியப் பேரரசர்களால் எழுப்பட்ட கோயிலும், பாகுவின் அண்ணனான பரதனின் சிலையும் இந்த மலையில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பாகுபலியைப்போலவே தோற்றமளிக்கிறது பரதனின் சிலை.
முழங்கால் வரை மட்டுமே இருக்கும் இந்தச் சிலை, சந்திரகிரியிலிருந்து விந்தியகிரியிலிருக்கும் பாகுபலியின் சிலையைப் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது.
பாகுபலியிடமிருந்து அரசு அதிகாரங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு மிகவும் குற்றஉணர்வுக்கு ஆளான பரதன், தனது தம்பியைச் சந்திக்க இந்த மலைக்கு வந்து காத்திருந்ததாக அந்தப் பகுதி மக்கள் செவிவழிக் கதையாகச் சொல்கிறார்கள்.
இன்றளவும் தனது தம்பியைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பது போலத்தான் காட்சியளிக்கிறது பரதனின் சிலை.
தங்கம் எனப் பட்டுத் தெறித்த ஒளி!
50,000-க்கும் அதிகமானவர்கள் புனிதநீராடலைக் காணக் குவிந்திருந்தாலும், பாகுபலியைக் காண்பதற்கு மலை உச்சியில் வடிவமைக்கப்பட்டிருந்த மேடை வெறும் 6,000 பேரின் எடையை மட்டுமே தாங்கும் என்பதால், அந்த எண்ணிக்கையில் மட்டுமே மலை உச்சிக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
ஜெயின் சமுதாய மக்களுக்கும் ஆடை, ஆசை என அத்தனையையும் துறந்த சமணத் துறவிகளுக்கும் மட்டுமே முதல்கட்ட நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி தரப்பட்டிருந்தது.
இந்தியா முழுக்க உள்ள 600 சமணத் துறவிகளில் 350 பேர் அங்கே பெலகோலாவில் புனித நீராடல் நடக்கும் இடத்தில் குழுமியிருந்ததாகச் சொன்னார் விழாவுக்கு வந்திருந்த ஒருவர்.
“ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் நின்றபடியே சாப்பிட்டு, ஒருமுறை மட்டுமே நீர் அருந்திவிட்டு உயிர்வாழும் ஆத்மாக்கள் இவர்கள்.
அந்த `பாகுபலி’ போன்ற சித்த அவதாரங்கள் இவர்கள். ஒருவேளை தங்களது சாப்பாட்டில் ஏதாவது ஓர் உயிருள்ள ஜீவன் தென்பட்டுவிட்டால், அந்த உணவை அப்படியே வைத்துவிடுவார்கள்.
அதன் பிறகு அன்று வேறு எதையும் சாப்பிட மாட்டார்கள். ஒரு நாளைக்கு 20 கி.மீட்டர் தூரம் வரை கால்நடையாக நடந்தே கடப்பார்கள்.
இவர்கள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் காண்பதே மிக அரிய விஷயம்’’ என்றார் அவர். மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் உடைகள் உடுத்திய மக்கள் பாகுபலி சிலையின் உச்சிக்குச் சென்று, குடங்களில் சேகரிக்கப்பட்ட நீரை அபிஷேகம் செய்ய, கீழிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் திரளின் குரல் ‘ஜெய் பாகுபலி…’ என ஓங்கி ஒலித்தது.
இந்த ஆரவாரங்களுக்கிடையே, உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிலை நீரால் நனைந்து நின்றது. சூரிய அஸ்தமனம் நெருங்க நெருங்க, மேற்குப் புறத்திலிருந்து சிலையின் ஒரு பக்கம் மட்டும் பட்டுத்தெறித்த சூரிய ஒளி, கிரானைட் கல்லால் ஆன அந்தச் சிலையைத் தங்கச் சிலைபோலப் பிரகாசிக்கச் செய்தது.
நீர், பால், மஞ்சள், சந்தனம் என 1,008 குடங்களிலிருந்த அபிஷேகப் பொருள்கள் அந்தச் சிலைக்கு வார்க்கப்பட்டன.
கீழிருந்து எந்தச் சலனமுமில்லாமல், அமைதியுடன் தங்களின் ஆதிமுதல்வருக்கு அளிக்கப்படும் மரியாதையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சமண சாதுக்கள். அத்தனை உச்சியில், அவ்வளவு மக்கள் திரளுக்கு இடையே பேரமைதி நிலவிக்கிடந்தது. சமண வாழ்வியல் நெறி உணர்த்துவதும் அந்த அமைதியையும் அகிம்சையும்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக