அகதியாக வாழ்ந்துபார்..! உனக்கும் வலி புரியும்!
பார்வையாளனாக வெளியில் இருந்து
சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு,
எங்கள் அவலமான வாழ்க்கையை
கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும்
சர்வதேச சமூகமே…!
ஒரேயொரு நாள்
நீயும் அகதியாக வாழ்ந்துபார!்
எங்கள் மரணவலி உனக்குப் புரியும்!
குடியிருக்க ஒரு வீடு இல்லாமல்…
படுத்துறங்க ஒரு படுக்கை இல்லாமல்…
வலிகளை பகிர்ந்து கொள்ள உற்றார் உறவுகள் இல்லாமல்…
இடம்பெயர ஒரு ஊர் இல்லாமல்…
கேட்க எந்த நாதியும் இல்லாமல்…
நடைபிணங்களாக…
அங்கங்களை இழந்து சதைப்பிண்டங்களாக…
வழிந்தோடும் குருதியை கட்டுப்படுத்த
ஒரு துளி மருந்து இல்லாமல்…
பசியோடு கதறும் பச்சைக் குழந்தைக்கு
அன்போடு அனைத்து
ஒரு சொட்டுத் துளி பால் பருக்க
மார்பினில் பால்கூட இல்லாமல்…
ஒட்டிய வயிரோடும்,
பட்டினி பசியோடும்
போகும் இடமெல்லாம் துப்பாக்கிச் சன்னங்களும்
எறிகணைக் குண்டுகளும்
ஒவ்வொரு உயிராக ருசித்துக் கொண்டு துரத்த
பாதி உயிர் போனபடி
மீதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
முப்பது வருடங்களுக்கு மேலாக
அகதியாக ஓடியோடி…….
உயிரோடு வாழ்வதற்கு
ஒரு நிரந்தரமான
ஒரு பாதுகாப்பான இடமேதும் இல்லாமல்…
அலைந்து அலைந்து
புதுவிடியலைத் தேடிக்கொண்டிருக்கும்
எங்கள் அகதி வாழ்க்கையை
நீயும் உணர வேண்டுமென்றால்…
ஒரேயொரு நாள்
நீயும் அகதியாக வாழ்ந்து பார்!
எங்கள் மரணவலி உனக்குப் புரியும்!
-வல்வை அகலினியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக