தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

பொதிகை மலை - சேர்மராஜின் அற்புத அனுபவம்.!


ஆத்மார்த்மாக செய்யும் எந்த தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். கம்ப்யூட்டரின் உதவியோடு மிக வித்தியாசமாக விளம்பரங்கள் வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

மூச்சுவிட நேரமில்லாத இவரது களப்பணியில் இவர் இளைப்பாறவும்,களைப்பை போக்கிக் கொள்ளவும் அவ்வப்போது செல்வது, மலைப்பிரதேசங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்குதான்.

அப்படிப்பட்ட இடம்தான் அகத்திய மாமுனி எழுந்தருளியிருக்கும் பொதிகைமலை. தமிழக கேரளா மாநிலங்களின் எல்லையில் இருந்தாலும் இப்போதைக்கு கேரளா வழியாகத்தான் செல்ல முடியும்.

பொதிகை மலையின் உச்சியில் உள்ள அகத்தியரை தரிசனம் செய்யவேண்டும் என்றால் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஒன்றரை மணிநேர வாகன பயணத்திற்கு பின், பொதிகை மலைக்கு செல்லும் மலைப்பாதையில் வனத்துறையின் சோதனைச் சாவடியை அடையலாம்.

சோதனைச் சாவடியில் ஒருவருக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய் வீதம் பணம் கட்டிவிட்டு, தங்கள் சொந்த பொறுப்பில் போய்வருவதாகவும், பயணத்தின் போது உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பு என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

நான்கு பேர் கொண்ட குழு என்றால் ஒரு வழிகாட்டியை வனத்துறையே ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறது. அங்கு இருந்து காலையில் கிளம்பினால் சூரியனைக்கூட பார்க்கமுடியாத அடர்ந்த காட்டிற்குள் ஒன்றரை நாள் பயணத்திற்கு பிறகு அகத்தியரை தரிசித்துவிட்டு, மீண்டும் ஒன்றரை நாள் பயணம் செய்து திரும்பவேண்டும்.

அவரவருக்கான உணவுப்பொருள், இரவில் தூங்க தேவைப்படும் போர்வை, மழைவந்தால் பாதுகாத்துக் கொள்ள ரெயின்கோட், அட்டை கடியில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மூக்குப்பொடி, வேப்பெண்ணெய், மற்றும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும், வழியில் யானை போன்ற காட்டினங்களை எதிர்கொண்டும் போய்வரவேண்டும்.

பல இடங்களில் காணப்படும் செங்குத்தான பாறைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கயிறை அல்லது கம்பியை பிடித்துக் கொண்டுதான் ஏற வேண்டும், அதே போல இறங்க வேண்டும், கொஞ்சம் கவனம் தவறினாலோ, கால் பிசகினாலோ பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மீள முடியாத பள்ளத்தில் விழவேண்டியிருக்கும்.

இதை படிக்கும் யாருக்கும் போகத் தைரியம் வராது தயக்கம்தான்வரும் ஆனால் இதைவிட அதிகமாகவே “ரிஸ்க்குகளை’ எதிர்பார்த்து சேர்மராஜ் கிளம்பிவிட்டார், காரணம் தனது ஞானகுருவான அகத்தியரை சந்திக்க போகிறோம் என்று மனதிற்குள் மழைபோல பெய்த சந்தோஷம், இவரது கருத்தையொத்த நண்பர்கள் பதினோரு பேர் சேர்ந்து கொள்ள பயணம் சிறப்பாக அமைந்துவிட்டது.

சிறப்பு என்று சொல்வதைவிட அளவில்லாத மனத்திருப்தி, ஆன்மிக மகிழ்ச்சி, உள்ளத்தினுள் ஒருவகை எழுச்சியை உணர்ந்தோம்.

காரணம் தொட்டு விளையாடும்படியான மேகக்கூட்டம், மூக்கினுள் நுழைந்து அடிவயிறு வரை ஆழப்பாயும் மூலிøக்காற்று, காட்டுக்குள் தூக்கம், கலவை உணவு, இப்படிக்கூட குடிநீருக்கு சுவை இருக்குமா என ஆச்சரியம் தரும் குடிநீர், பளிங்கு போன்ற தண்ணீரைக் கொண்டு வற்றாமல் ஒடும் காட்டாறு, அழகும், சுகமும்தரும் அருவிகள், இப்படி பசுமையும், இயற்கையும் பின்னிப் பிணைந்த அடர்ந்த வனம், விதவிதமான மலர்களின் மணம், ஆகா,ஆகா அது ஒரு அளவில்லாத ஆனந்தம்.

செல்போன் எடுக்காது, வாகன சத்தம் கேட்காது, அவசரமாய் செல்லும் மனிதர்கள் கிடையாது, அரக்கபரக்க சாப்பிட வேண்டியது இருக்காது, நவீனம் என்ற பெயரிலான எந்த எலக்ட்ரானிக் குப்பைகளும் கிடையாது, எங்கு பார்த்தாலும் இயற்கை அன்னை அள்ளித்தந்த பொக்கிஷமே. கைலாஷ் மலைக்கு போனவர் ஒருவர் எங்களுடன் வந்திருந்தார், அவர் இந்த பொதிகை மலையைப் பார்த்துவிட்டு, அதற்கு நிகரான பரவசத்தை, பிரமிப்பை இந்த மலை தனக்கு தருவதாக சொன்னார் என்றால் பாருங்களேன்.

அவ்வளவு கடுமையான மலைப்பாதையிலும் நாங்கள் மறக்காமல் கூடை, கூடையாக கொண்டு சென்ற மலர்களால் ஆராதித்து, தேன் முதல் சந்தனம் வரையிலான பொருட்களால் அபிஷேகம் செய்தபோது, அகத்தியரின் முகத்தில் மின்னல் கீற்றாய் வெளிப்பட்ட புன்னகையை பார்க்க, அந்த மாமுனியை தரிசிக்க, இன்னொரு முறை மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல முறை போய்பார்த்துவரவே ஆசை என்று சிலிர்ப்புடன் கூறி முடித்தார் சேர்மராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக