பொதுவாக இந்த கேதார கௌரி விரதத்துக்கு 21 என்பது மிகவும் உகந்ததாக உள்ளது. உமா தேவி, ஈஸ்வரனை நினைத்து 21 நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த பூஜையின் போது 21 எண்ணிக்கையில் அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, அதிரசம் என பூஜை பொருட்களை வைத்து, கலசம் நிறுத்தி பூஜிப்பார்கள். இந்த பூஜையை இருபத்தோரு நாட்கள் செய்ய வேண்டும். ஆனால், எல்லா பெண்களாலும் 21 நாட்கள் பூஜை செய்ய முடியாததால், இவ்வாறு 21 பொருட்களை வைத்து பூஜிக்கப்படுகிறது.
எனவே அவரவர் வசதிக்கேற்ப 21 நாட்களோ, 9 நாட்களோ, 5 நாட்களோ, 3 நாட்களோ அல்லது ஐப்பசி அமாவாசையான்றோ கேதார கெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் “பாரணம்” செய்து விரதத்தை முடித்தல் வேண்டும்.
தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து "ஓம் நமசிவாய சிவாய நம ஓம்" என்ற மந்திரம் ஜெபித்து, மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள், பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அறுகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம், நைவேத்தியம் செய்து தீபாராதனையான பிறகு, கேதாரீஸ்வரரை ஆவாகனஞ் செய்வர்.
பூஜையில், முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து, எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக் கயிறு சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு) கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், அப்பம் அல்லது சொய்யம், வடை முதலியன நைவேத்தியமாக சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக் கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.
சிலர் வீடுகளிலேயே கலசம் நிறுத்தி இந்த பூஜையை மேற்கொள்வர். சிலர் பூஜைக்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பூஜை பொருட்கள் மற்றும் நோம்பு கயிறை கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கு பூஜித்து வீட்டுக்குக் கொண்டு வருவதும் வழக்கம்.
கணவன் - மனைவி ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை இயன்ற வரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம்.
குறிப்பாக தீபாவளி அன்றோ, அல்லது தீபாவளிக்கு மறுநாளோ இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி தீபாவளி பண்டிகையும், 3ம் தேதி கேதார கௌரி விரதமும் கடைபிடிக்கப்பட உள்ளது.
விரத நாள் அன்று ஈஸ்வரனை வழிபட்டு சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் இந்த கேதார கௌரி விரதத்தை மேற்கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் எந்த வயதினரும், ஆண்களும், பெண்களும் ஈஸ்வரனை நினைத்து இந்த விரதத்தை மேற்கொண்டு வேண்டிய அருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.
http://www.dinamani.com/specials/magalirmani/2013/10/29/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article1862588.ece
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக