தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 அக்டோபர், 2013

திருமாலின் தசாவதாரம்!


வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர். 

மச்சாவதாரம்: திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.

கூர்மாவதாரம்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்தாரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம்: பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

வாமன அவதாரம்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம்: ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம்

 -- சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக