தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

‘குத்துவிளக்கு’ மண்மணம் வீசிய திரைப்படம்

யாழ்ப்பாண நகரின் நவீன நாகரீகத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு கட்டடங்கள் அங்கு உயர்ந்து நின்றன. ஆறு மாடிகள் கொண்ட வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைத்தூபி என்பன அவற்றில் சிலவாகும். இத்தனை கட்டடங்களையும் நிர்மாணித்தவர் கட்டக் கலைஞரும் கலை அபிமானியுமான வீ.எஸ். துரைராஜா அவர்களாவர். இவர் நிர்மாணித்த அழகுக்கட்டடங்கள் யாழ்நகரில் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து நகரங்களிலும் நிமிர்ந்து நிற்கின்றன.

கட்டடக்கலை, பல்கலைகளுக்கும் தாய்க்கலை என்பார்கள். சித்திரம் சிற்பம் போன்ற பழங்கலைகளுடன் சினிமா என்ற நவீனகலையும் அதனுள் அடங்கும். எனவே, திரைப்படக்கலையிலும் திரு. வீ.எஸ். துரைராஜா ஈடுபாடு கொண்டவராக விளங்கியதில் ஆச்சரியமில்லை.

திரு. துரைராஜாவை நான் ரூபவாஹினியில் பேட்டி கண்டபோது, அவர் சொன்னார். “இலங்கைத் தமிழருக்குத் தனித்துவம் இருக்கிறது. அவர்களின் பேச்சுவழக்கு, பழக்கவழக்கங்கள் வாழ்க்கைமுறைகள் போன்றவை தனித்துவமானவை. இந்த இலங்கைத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக் கலைஞர்களைக் கொண்டே இங்கு ஒரு தமிழ்ப்படம் உருவாக்கக்கூடாதா என்று எண்ணினேன்.

இலங்கைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்பவல்லுனர்கள் போன்றோரை ஒன்றிணைந்து ஒரு உன்னதமான தமிழ்ப்படத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே நிலை கொண்டிருந்தது. அந்த எண்ணத்தின் உருவம்தான் இந்தக் “குத்து விளக்கு” என்று கூறினார் திரு. வி.எஸ். துரைராஜா.

யாழ்ப்பாண மண்ணுக்குரிய ஒரு கதைக் கருவைக் கொண்ட மூலக்கதையை எழுதிவிட்டார். திரைக்கதை வசனம் எழுதும் ஒருவரையும் இயக்குநர் ஒருவரையும் அவர் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது 1971ஆம் ஆண்டு காலப்பகுதி. அப்போது இலங்கையரான பாலுமகேந்திரா இந்தியாவில் திரைப்படம் சம்பந்தமாகப் படித்துவிட்டு இலங்கை வந்தார். அவருடன் தொடர்பு கொண்ட குத்துவிளக்கை இயக்கும் படி கேட்டபொழுது மலையாளப்படமொன்றை இயக்கவேண்டி ஏற்பட்டதால் இந்தியா சென்றுவிட்டார்.

திரைக்கதை வசனங்களை எழுதுவதற்காக சினிமாவில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் ஈழத்து ரெத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை யுபீட்டர்ஸ் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகக் கடமையாற்றியவர். பாடல்கள் இயற்றுவதில் திறமை காட்டினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைக் குருவாகக்கொண்டு பல பாடல்களை இயற்றினார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற படத்தில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று இவர் இயற்றிய பாடல் புகழ்பெற்று விளங்கியது. குத்து விளக்கு திரைப்படத்துக்கான பாடல்களையும் இவரே எழுதினார்.

அன்று திரைப்படத்துறையில் பிரபலம் பெற்று விளங்கிய டபிள்யு.எஸ்.மகேந்திரன் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அச்சுவேலியைச் சேர்ந்த நமசிவாயம் என்னும் இளைஞன் சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்தான். ‘பாராவழலு’ என்ற சிங்களப் படத்தில் நடித்தபோது தனது பெயரினை, ‘ஜெயகாந்’ என்று மாற்றிக்கொண்டான். ‘குத்து விளக்கு’க் கதையில் விவசாயக் குடும்பத்தின் மூத்த மகன் ‘சோமு’ முக்கியப் பாத்திரமாகும். அந்தச் சோமு என்ற பாத்திரம் ஜெயகாந்துக்கு வழங்கப்பட்டது.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பரதநாட்டியத்தில் புகழ்பெற்று விளங்கியவர் செல்வி லீலா நாராயணன். அவர் முகபாவங்களை அழகாகக் காட்டுவார் என்பதால் கதாநாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இளைஞர் ஆனந்தன் பல மேடை நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் கதக்களி நடனத்திலும் தேர்ச்சிபெற்றவர். இவர் கதாநாயகியின் காதலனாகத் தோன்றினார்.

திருமலையில் பிறந்த பி. இந்திராதேவி நாடகத்திலும் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர். ‘வெண்சங்கு’ திரைப்படத்தில் நடித்து அனுபவப்பட்டவர். இவருக்குக் கதாநாயகனின் தாயாரான நாகம்மா பாத்திரம் வழங்கப்பட்டது.

எம்.எஸ். இரத்தினம், பேரம்பலம், திருநாவுக்கரசு, நாகேந்திரன், நடராஜன், பரமானந்தன், ஸ்ரீசங்கர் போன்றோர் மேடைநாடக அனுபவ முள்ளவர்கள். இவர்கள் இப்படத்தின் மற்ற நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

யோகா தில்லைநாதன், சாந்திலேகா, தேவிகா, பேபி பத்மா போன்றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னாளில் ‘மரீக்கார்’ என்று புகழ்பெற்ற எஸ். ராம்தாஸ் முதன் முதலில் நடித்தபடம் ‘குத்துவிளக்குத்தான்’.

1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘குத்துவிளக்கு’ ஆரம்பவிழா நடைபெற்றது. கொழும்பு வீ.எஸ்.ரீ. கட்டடத்தின் மேல் மாடியில் வீ.எஸ்.ரீ. பிலிம்ஸ் ஸ்தாபனத்தாரின் ஸ்ரூடியோவில் விழா ஆரம்பமாகியது. பிரபல தென்னிந்திய நட்சத்திரம் சௌகார் ஜானகி கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணப் பகுதிக்கோயில் குளங்களிலும், வயல் வெளிகளிலும், கொழும்பு, கண்டி, மாங்குளம் போன்ற பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்புகள் இடம்பெற்றன.

நல்லூர் முருகன் கோயில், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவற்றின் திருவிழாக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், திரைப்பட இயக்குநர்களையோ, எழுத்தாளர், பாடலாசிரியர்களையோ, தொழில்நுட்பக்கலைஞர்களையோ இறக்குமதிசெய்யமுடியாது. அவர்களது சேவைகளை எமது திரைப்படங்கள் பெறமுடியாது. அந்த அளவுக்கு இவைகளை இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்தது. இதன் விளைவால் ‘குத்துவிளக்கு’ நூற்றுக்கு நூறு வீதம் இலங்கைத் தயாரிப்பாக விளங்கியது.

குத்துவிளக்கு திரைப்படத்துக்காக மண்ணின் மணத்தை விளக்கும் பாடல் ஒன்றுக்கான கருவை திரு. துரைராஜா நினைத்து வைத்திருந்தார். இவரது கருத்தை வைத்து ஈழத்து ரெத்தினம் அழகான பாடல் ஒன்றை எழுதினார். இப்பாடல் பலராலும் பாராட்டப்பட்டது.

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா

கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அழுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா

ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா

பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா

புத்தகமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

பாடல் வரிகளிடையே பெரியார்கள். கோயில்கள், நதிகள் போன்ற பெயர்கள் வந்தன. அதைப்போலவே படத்தில் அவற்றின் உருவங்கள் தோன்றின. மண்ணின் மணத்தைச் சொல்லி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இந்தப்பாடலின் ஆரம்பத்தில் ‘ஈழம்’ என்ற சொல் இருப்பதால், வானொலியில் ஒலிபரப்பத் தடைவிதிக்கப்பட்டது.

இசை அமைப்பை ஆர். முத்துசாமி ஏற்றுக்கொண்டார். சங்கீதபூசணம் குலசீலநாதன், மீனா மகாதேவன் ஆகியோர் பாடினர். “ஆதிசிவன் பெற்ற” என்ற பாடலை இசை அமைப்பாளரே பாடினார்.

‘கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாட்டியத்தில் அனுபவம் பெற்றவர்கள். ஆனால், இப்படத்தில் ஒரு நாட்டியந்தானும் இடம்பெறவில்லையே’ ஏன் என்று திரு. துரைராஜாவிடம் கேட்டேன்.

‘இப்படத்தைக் கலைஅம்சங்களுடன் சத்தியஜித்ரேயின் பாணியில், தரமான படைப்பாக்குவதே எனது நோக்கமாக இருந்தது. அதனால், அநாவசியமான நடனங்களையும், தெருச்சண்டைகளையும் புகுத்திப் படத்தின் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார் தயாரிப்பாளர்.

நல்ல விளம்பரத்தின்பின் ‘குத்துவிளக்கு’ 24.02.1972இல் திரைக்கு வந்தது. மத்திய கொழும்பு (செல்லமஹால்), தென்கொழும்பு (ஈரோஸ்), யாழ்ப்பாணம் (புதிய வின்ஸர்), திருகோணமலை (நெல்சன்), மட்டக்களப்பு (இம்பீரியஸ்), பதுளை(கிங்ஸ்) ஆகிய ஆறு இடங்களில் திரையிடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் புதிய வின்சர் தியேட்டரில் ‘குத்துவிளக்கு’ படத்தின் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல்நாள் படம் பார்க்க வந்திருந்த ‘ஏகாம்பரம்’ என்ற விவசாயியே குத்துவிளக்கேற்றி முதற்படக் காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த ஏற்பாட்டைத் தயாரிப்பாளர் செய்திருந்தார். ‘இந்த விழாவை ஆரம்பிப்பதற்கு நகர மேயர் அல்லது அமைச்சர்கள் போன்றோரை ஏன் அழைக்கவில்லை’ என்று தயாரிப்பாளரிடம் கேட்டபோது.

‘இத்திரைப்படத்தின் கதை ஒரு விவசாயியின் கதையாகும். எனவே, இத்திரைப்பட விழாவின் ஆரம்பத்தை ஒரு விவசாயியின் மூலம் ஆரம்பித்து வைக்க விரும்பினேன்’ என்று கூறினார்.

1975ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் வர்த்தகப் பிரிவில் ‘குத்துவிளக்கும்’ திரையிடப்பட்டது. இப்படம் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் பல பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்நீச்சல்போட்டு தனித்து நின்று ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற ரீதியில் திரு.வீ.எஸ். துரைராஜா அவர்களின் பெயரும் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிடவேண்டிய பெயராகும்.

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக