தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 அக்டோபர், 2013

பலா


பலாவின் பிஞ்சுக்காய் கறிகாய் வகையைச் சேர்ந்தது. இதை நறுக்கி வேக வைத்துக் கறிகாயாகச் சாப்பிட்டால் நா வறட்சியைப் போக்கும். பித்தம் குறையும். ஆனால் அதிக அளவில் சாப்பிட பசி மந்தம், வயிற்று வலி உண்டாகும். முற்றிய காய் ஜீரணமாக மிகத் தாமதமாகும். உடலுக்குச் சோர்வும் பெருமூச்சும் ஏற்படுத்தும்.

பழம் நல்ல புஷ்டி, பலம் தரக் கூடியது. சுளையை மட்டும் சாப்பிடும்போது நல்ல மணமும் ருசியும் பெறுகிறோம். சாப்பாட்டின் நடுவே சாப்பிடுவது, நெய், தேன் சேர்த்துச் சாப்பிடுவது, சர்க்கரை, வெல்லம் சேர்த்து பாயசமாக்கிக் கொள்வது, சர்க்கரைப் பாகில் போட்டு வைப்பது போன்றவை நல்லது. மிகத் தாமதமாக ஜீரணமாவதை இவை தடுக்கும்.

கக்குவான் இருமலுக்கு அதன் வேகத்தைக் குறைக்க பலாப் பழத்தின் சுளைகளை நெய் தேன் கலந்து கொடுப்பதுண்டு. நுரையீரல் வறண்டு வறட்டிருமல் மிகவும் பாதிக்கும் வேளையில் இது மிகவும் பயன்படும். பலாச்சுளை அதிகமாகச் சாப்பிட்டதால் ஏற்படும் ஜீரண உபத்திரவம், வாந்தி, பேதி போன்றவை குணமாக,சுளையைச் சுற்றியுள்ள கோதுகளை அனலில் கருக்கி அந்தக் கரியைத் தேன் விட்டு குழப்பிச் சாப்பிட உடனே குணம் தரும். நல்ல குளிர்ச்சியான பழம் என்பதால் பலாப் பழத்தை வெயில் கடுமையாக உள்ள நாட்களில் அளவுடன் சாப்பிடலாம். சிலர் கொட்டையை வறுத்தும் வேக வைத்தும் சாம்பாரில் போட்டும் சாப்பிடுகின்றனர். நல்ல ருசியாக இருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், குத்துவலி போன்றவை ஏற்படலாம்.

நன்றாகப் பழுத்த பலாப் பழத்தின் இனிப்புச் சுவை, குளிர்ச்சி, நெய்ப்பு, பிசுபிசுப்பு போன்ற தன்மையால் தசைகளைக் கொழுத்து வலிவுறச் செய்வதுடன் உடலுக்கு வலிமையைத் தரும். உடலிலுள்ள கழிவுப் பொருட்களை நல்ல முறையில் வெளியேற்றும். மேலும் களைப்பு, ஆயாசம், வறட்சி, உடல் எரிவது போன்ற உணர்ச்சியைப் போக்கி, பித்த வாயு தோஷங்களை ஒழுங்குடன் செயலாற்ற உதவும். வாய், மூக்கு, சிறுநீர், மலம் போன்ற பகுதிகளிலிருந்து ரத்தம் கசியும் உபாதைகளுக்குப் பலாப் பழம் நல்ல குணத்தைத் தருகிறது.

சளித் தொல்லையுள்ளவர்கள் பலாப் பழத்தைச் சாப்பிடக் கூடாது. பலாச் சுளையைப் பிரித்தெடுக்க உதவும் கத்தி, பிரித்தெடுப்பவரின் கைகள் ஆகியவை சுத்தமாக இல்லாமலிருப்பது, வியாபாரத்துக்காக வைத்திருக்கும் இடத்தில் ஈக்கள் பலாப் பழத்தின் மேல் மொய்த்திருப்பது போன்றவற்றால், அந்தப் பலாப் பழத்தைச் சாப்பிடுபவர்களின் ரத்தம் சீர் கேடடைந்து கரப்பான் என்னும் தோல் உபாதை ஏற்படலாம். பலாப் பழத்தின் விதையை வறுத்துப் பொடித்து உப்பு, ஓமம் சேர்த்து வெந்நீருடன் சாப்பிட அதிக பலாச் சுளையைச் சாப்பிட்டதால் ஏற்படும் அஜீரணம், வாந்தி, பேதி போன்ற உபாதைகளைக் குணப்படுத்திவிடலாம். மலையாளத்தில் "சக்கைக்குச் சுக்கு' என்பார்கள். பலாப் பழம் அதிகம் சாப்பிட்டதால் ஏற்படும் வயிற்று உப்புசம், கனம் போன்றவற்றுக்கு சுக்கைச் சீவல் போலச் சீவி, சிறிது சிறிதாகச் சாப்பிட்டால், விரைவில் குணமாகி விடும். பலாப் பழ அல்வாவில் கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்தால் வாசனை,ருசியை அதிகப்படுத்துவதுடன் பலாப் பழத்தினால் அஜீரணம், மப்பு முதலியன ஏற்படாமலும் தடுக்க உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக