தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 அக்டோபர், 2013

எல்லோரையும் அசத்திய சிவகாமியின் சபதம்!

946238_10152437171195752_724489376_n
கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 5 இல்) சோனி அரங்கில் ஆயனரும் சிவகாமியும் முதலாம் மகேந்திர பல்லவரும் அவர் மகன் முதலாம் நரேந்திர பல்லவரும் புலிகேசியும் நாகநந்தியும் அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள். அவையோர் மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் கடைசிவரை அவர்களைக் கண்டு களித்தார்கள்.
ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு கண்முன் விரிந்தன.
மாமல்லபுரம் பல்லவர்கள் சிற்பக்கலைக்கு கட்டியங்கூறி நிற்கிறது. இது 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது. முதலாம் நரேந்திரவர்மனின் இன்னொரு பெயர் மாமல்லன். அவனால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி நிற்கிறது. பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களை கட்டியவர்களும் பல்லவரே. இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேசுவரவர்மனும் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை இராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆடல்கலைக்கு அழகு தேடிக் கொடுத்த ஆயனரின் மகளான சிவகாமி தொடக்க முதல் இறுதிவரை ஆடிக் கொண்டே இருந்தார். அப்பரின் பதிக்கங்களை இசை அமைத்துப் பாடி ஆடியதன் மூலம் கல்கியின் அழியாத காவியத்தை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார்கள்.
திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அரங்கில் கணீரென ஒலித்தது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!
முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள். அவனது உருவ அமைப்புப் பற்றிக் கேட்கிறாள்
அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள். பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.
நாட்டியம், இசை, நாடகம் என்ற மூன்று துறையும் சார்ந்த இளங்கலைஞர்கள், தேர்ந்த கலைஞர்கள் வளரும் கலைஞர்கள் என்று பலரும் பாராட்டத்தக்க முறையில் ஆடியும் பாடியும் நடித்தார்கள்.
மன்னர் நரசிம்ம பல்லவர் அரசி வானமாதேவியிடம் தனது இளமைக் காலத்தில் ஆயன சிற்பியின் மகள் சிவகாமியிடம் கொண்ட காதலை ஒப்புக் கொள்ளும் காட்சியில் தொடங்கி, நரசிம்மர் சிவகாமியின் இளமைக் காலம், புலிகேசியின் சகோதரர் நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல், பரஞ்சோதி புலிகேசியிடம் பிடிபடல், புலிகேசியிடம் சிவகாமி சிறைப்படல், வஜ்ரபாகுவாக மகேந்திர பல்லவர் நடித்துப் புலிகேசியின் படையெடுப்பைக் காலதாமதம் செய்தல், நரசிம்மர் புலிகேசி படையை வெற்றிகொள்ளல் உள்ளிட்ட காட்சிகளுடன் இறுதியாக நரசிம்மர் மணம் முடித்துவிட்டார் என்பதறிந்து சிவகாமி இறைவன் ஏகாம்பரேசுரரையையே கணவனாக ஏற்கும் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக மின்னல் வேகத்தில் வந்து மறைந்தன.
காட்சிகள் நகர்ந்த வேகம் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.
சங்க கால அகப் பொருளை பக்திப் பாடல்களில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் புகுத்தினார்கள். அகப் பொருளில் தலைவன் – தலைவி காதலை தங்களை தலைவியாகவும் இறைவனைத் தலைவியாகவும் மாற்றி அமைத்தார்கள். அதன் மூலம் கலைகளை வெறுத்த சமணமதத்தையும் பவுத்த மதத்தையும் புறம்கண்டனர்.
சிவகாமியின் சபதம் பாரதக் கதையில் திரவுபதியின் சபதத்தையும் இறுதியில் நரசிம்மர் மணம் முடித்துவிட்டார் என்பதறிந்து சிவகாமி இறைவன் ஏகாம்பரேசுரரையையே கணவனாக ஏற்பது சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் வரலாற்றையும் நினைவு படுத்தியது.
சிவகாமியின் சபதம் புதினத்தைப் படித்திராதவர்கள் அதன் சுருக்கத்தையாவது தெரிந்திராதவர்கள் கதையைப் புரிந்துகொள்ள வில்லங்கப்பட்டிருப்பார்கள். சிவகாமியைக் காதலிக்கும் நரசிம்மன் தந்தைக்குப் பின் முடிசூடி பாண்டிய இளவரசி வானமாதேவியை மணம்புரிந்தார்.
மகேந்திரவர்மன், நரசிம்மவர்வன், அப்பர், புலிகேசி வரலாற்றுப் பாத்திரங்கள். சிவகாமி அவரது தந்தையார் ஆயனச் சிற்வி, நாகநந்தினி கல்கியின் கற்பனைப் பாத்திரங்கள்.
சிவகாமியாக நடித்தவரின் ஆடல் மிக நேர்த்தி. அவருக்குத் தோற்றப் பொலிவும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். உடை, காட்சி அமைப்புக்கள், ஒளி, ஒலி எல்லாமே கச்சிதம்!
தமிழர்களது வரலாறு கூறும் இப்படியான நாட்டிய நாடகங்களை எமது இளைய தலைமுறை பார்ப்பதால் நிச்சயம் எமது வரலாறு பற்றிப் பெருமை அடைவார்கள். தமிழர்கள் பேசும் பழம்பெருமை முற்றிலும் உண்மை என்பதை உணர்வார்கள்.
தமிழ்விழாவில் இயல், இசை, நாடகம் என முத்தழும் அரங்கேறினாலும் சிவகாமியின் சபதத்துக்குத்தான் முதல் பரிசு.
இதனை நெறிப்படித்திய மதுரை முரளீதரன் அவரோடு சேர்ந்து ஆடிப்பாடி நடித்த ஏனைய கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். எல்லோரது மனதையும் கொள்ளை கொண்ட இன்னொரு சிறந்த கலைப்படைப்பான தண்ணீர் நடனத்தை இயக்கிய நந்தாவும் இதில் பங்கேற்றிருந்தார். அவருக்கும் பாராட்டுதல்கள். மேலும் வட அமெரிக்கச் சங்கங்களின் பேரவை மற்றும் கனடிய தமிழர் பேரவை ஆகியவற்றின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு இரட்டிப்புப் பாராட்டுக்கள்.
இப்படியான முயற்சியில் இங்குள்ள நடனப்பள்ளிகள் அவற்றின் ஆசிரியர்கள் ஏன் இறங்குவதில்லை? பொன்னியின் செல்வன் கல்கி அவர்களின் இன்னொரு புகழ்பெற்ற வரலாற்றுப் புதினம். சோழப் பேரரசர்கள் முதலாம் இராசராச சோழன் அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழன் இருவரது வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அந்தக் காவியத்தை மேடையேற்றலாமே?
மண்டபங்கள் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். மாமல்லபுரத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட மண்டபங்களும் அய்ந்து இரதங்களும் உண்டு.
மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:
தர்மராச மண்டபம்
மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
வராக மண்டபம்
ஆதிவராக மண்டபம்
ராமானுச மண்டபம்
திரிமூர்த்தி மண்டபம்
கோடிக்கல் மண்டபம்
கோனேரி மண்டபம்
அதிரணசண்ட மண்டபம்
தொடக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்
மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:
பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள் பிடாரி இரதம் வலையன்குட்டை இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்
கணேச இரதம்.
பரஞ்சோதியாரின் காஞ்சி வருகையுடன் இக்கதை தொடங்குகிறது. வழியில் எதிர்படும் சமணர்களினால் காஞ்சியில் ஏற்பட்ட மதமாற்றத்தப் பற்றியும் நாம் அறியலாம். சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரின் தாள்பணிந்து இறைதொண்டாற்ற நினைத்து காஞ்சி வந்தவர் விதிவசத்தால் ஆடலரிசியும் பேரழகியுமான சிவகாமியையும் அவள் தந்தையும் தலைமை சிற்பியுமான ஆயனார் அவர்களையும் மதம்கொண்ட யானையின் பிடியிலிருந்து மீட்கிறார்.
இதனால் ஏற்பட்ட கலவரத்தை முன்னிட்டு பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் தான் அவருக்கு காஞ்சியை நோக்கி சாளுக்ய மன்னன் புலிகேசி படையெடுத்து வருவதும் மன்னர் தன்னை நேரில் பார்த்துத் தன் வீரத்தைப் பாராட்டவே சிறையில் வைத்திருப்பதையும் தெரிந்து கொள்கிறார். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னுடன் காஞ்சி வந்த நாகநந்தி அடிகள் என்னும் புத்த துறவியின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.
ஒரு சுரங்கத்தின் வழியாகக் கோட்டைச் சுவரின் வெளியே அமைந்திருக்கும் ஆயனாரின் குடிசைக்குச் செல்கிறார்கள். தனது மாமாவின் துணையால் ஆயனாரைப் பற்றி நன்கு அறிந்திருந்த பரஞ்சோதி அவரிடம் சீடனாகச் சேர்ந்து சிற்பக்கலையைக் கற்க நினைத்தார். மூலிகை ஓவியங்களில் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆயனர் நாகநந்தியிடம் அஜந்தா குகைகளில் இருக்கும் வண்ண ஓவியங்களைப் பற்றி வினவினார். அதன் பொருட்டு மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள நாகநந்தியின் சிறுகுறிப்பு ஒன்றுடன் விந்திய மலைத்தொடருக்குப் பரஞ்சோதியார் அனுப்பப்படுகிறார்.
பரதத்தில் நன்கு தேர்ச்சிபெற்ற ஆடல் நங்கை சிவகாமியைக் காண, அவள் காதலனும் இளவரசருமான நரசிம்ம பல்லவர் வந்து செல்லும் விபரமறிந்த மன்னர் இதற்கு சம்மதிக்காமல் இருந்தார். அவர் மனதை மாற்றும் பொருட்டு புலிகேசியுடன் போருக்கு செல்லும் நேரத்தில் காஞ்சியைக் காவல் புரியும் பொறுப்பை நரசிம்மரிடம் கொடுத்திருந்தார் மகேந்திர பல்லவ மன்னர்.
விந்திய மலை செல்லும் வழியில் ஓரிரவில் பரஞ்சோதியார், வஜ்ரபாஹு என்ற போர் வீரனைத் தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்தார். நடுநிசியில் பரஞ்சோதியாரிடம் இருந்த கடிதத்தின் விபரத்தை அவர் அறியா வண்ணம் வஜ்ரபாஹு மாற்றியமைத்தான். விடியலில் இருவரும் பிருந்துசென்றனர். அன்று எதிர்வந்த சாளுக்ய படையினரால் பரஞ்சோதியார் கைது செய்யப்பட்டார். பின்பு மன்னர் புலிகேசியிடம் கொண்டு செல்லப்பட்டு அவர் அங்கு விசாரிக்கப்பட்டார். மொழிச் சிக்கல் காரணமாக பரஞ்சோதியார் வஜ்ரபாஹுவினால் விசாரிக்கப் பட்டுக் குற்றமற்றவர் என்று கூறப்பட்டார். வஜ்ரபாஹு கொடுத்த சமிக்கையுடன் அவனுடன் சில படை வீரர்கள் துணையுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தனர். அன்றிரவு மற்ற வீரர்கள் தூங்கும் பொழுது வஜ்ரபாஹு, பரஞ்சோதியாரை அழைத்துக்கொண்டு அவ்விடம் இருந்து தப்பித்துப் பல்லவர் படையிடம் வந்து சேர்ந்தனர். அங்கு வந்த பின்பே தன்னுடன் வந்த வஜ்ரபாஹு மன்னர் மகேந்திரவர்மரே என்று அறிந்தார்.
காஞ்சி முற்றுகை ஏழு மாதங்கள் கழிந்த பின்பு பரஞ்சோதியார் மகேந்திரவர்மரின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு சிறந்த படைத் தலைவனாக இருக்கிறார். சாளுக்யருடன் போர் நெருங்கிவரும் இவ்வேளையில் பரஞ்சோதியார் நாடு திரும்பிக் காஞ்சியில் இளவரசர் நரசிம்மருடன் மிகவும் நட்புடன் இருந்தார். தன் காதலியைச் சந்திக்காமல் நரசிம்மர் படும் வேதனைக்கு, பரஞ்சோதியாரின் நட்பு மருந்தாக இருந்தது. இந்த இக்கட்டான நிலையில் பல்லவ படையின் தலைமை ஒற்றனான சத்ருக்னன் இடமிருந்து, காஞ்சி மீது படையெடுக்க எத்தனித்த துர்வநீதன் என்னும் சிற்றரசன் மீது போர்தொடுக்கும் படி மகேந்திர பல்லவரின் அரசாணை வந்து சேர்ந்தது.
சிவகாமியிடம் சோழ பாண்டிய நாடுகளில் நடனமாடும் பெரிய வாய்ப்பு ஒன்றை வாங்கித் தருவதாகக் கூறிய நாகநந்தி அவள் நன்மதிப்பைப் பெற்றான். போரைப் பற்றி எதுவும் அறியாத ஆயனாரிடம் நடக்க இருக்கும் விபரீதத்தினை எடுத்துரைத்த நாகநந்தி அவர்களைப் புத்த விகார ஒன்றில் தங்க வைத்தான். அங்கிருந்து துர்வீந்தன் மீது நரசிம்ம பல்லவர் படையெடுத்துச் செல்வதைக் கண்ட சிவகாமி அவரிடம் செல்ல நினைக்க, அக்கணம் வஞ்சக எண்ணம் கொண்ட நாகநந்தியால் உடைக்கப்பட்ட ஏரியினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டாள். இதைக் கண்ட நரசிம்மர் அவளையும் ஆயனாரையும் பத்திரமாக மீட்கிறார்.
காஞ்சியின் மதில் சுவரை உடைத்து எறிய நினைத்து அங்கு வந்த புலிகேசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காஞ்சி அவ்வளவு வலிமையுடன் இருந்தது. இதனால் மனம் தளராத புலிகேசி கோட்டையின் வெளியிலே தண்டு இறங்கி பாசறை அமைத்துத் தங்கினான். உணவு தட்டுப்பாட்டின் காரணமாக காஞ்சி விரைவில் வீழும் என்று நினைத்தான் புலிகேசி. ஆனால் அவன் கூற்றைப் பொய்யாக்கும்படி காஞ்சியிடம் தேவைக்கு அதிகமாகவே உணவு இருப்பு இருந்தது. அதற்கு நேர் மாறாக சாளுக்ய படையிடம் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக யானைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக மாறியது.
தோல்வியை ஏற்க விரும்பாத புலிகேசி அமைதி தூது விடுத்துக் காத்திருந்தான். இதைச் சிறிதும் நம்பாத மன்னர் மகேந்திர பல்லவர், நரசிம்மரைத் தெற்கே சென்று பாண்டியனிடம் போர்புரிய அனுப்பிவிட்டுப் பின்பு புலிகேசியை அரண்மனைக்கு அழைத்தார். புலிகேசி இராஜ உபசரிப்பையும் விருந்தோம்பலையும் நன்கு அனுபவித்தான். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க மண்டபப்பட்டிலிருந்து வந்த சிவகாமி தன் நாட்டிய விருந்தால் புலிகேசியை மகிழ்வித்தாள். அவளும் அவள் தந்தையும் கோட்டை வாயில் திறக்கும் வரை காஞ்சியிலே தங்கி இருந்தனர். புலிகேசி விடைபெறுமுன் வஜ்ரபாஹுவாய் வந்தது தாமே என்ற உண்மையை மகேந்திரர் போட்டுடைத்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை காட்டிக்கொள்ளாத புலிகேசி காஞ்சியை விட்டு வெளியேறிய பின்பு தன் படை வீரர்களிடம் கண்ணில் தென்படும் அனைத்தையும் அழிக்குமாறு உத்தரவிட்டான். மற்றும் மகேந்திரவர்மரின் கலைஞர்களின் கைகளைத் துண்டிக்கவும் ஆணையிட்டான்.
நடக்கப்போகும் விபரீதமறியா ஆயனார், சிவகாமியுடன் சுரங்கம் ஒன்றின் வழியாக காஞ்சியை விட்டு வெளியேறி புலிகேசியிடம் மாட்டிக்கொண்டார். புலிகேசியைப் போல் வேடம் புனைந்த நாகநந்தி ஆயநாரை மட்டும் காவலர்களிடமிருந்து மீட்டான் (இவ்விடம் புலிகேசியும் நாகநந்தியும் இரட்டைச் சகோதரர்கள் என்பதை தெரியபடுத்திக்கொள்கிறோம்). புலிகேசியுடன் எதிர்கொண்ட போரில் மகேந்திரவர்மர் பலத்த காயமடைகிறார். மரணப்படுக்கையில் அவர் சாளுக்ய மன்னனுடன் அமைதி உடன்பாடு கொண்டதின் தவற்றை உணர்ந்தார். இக் களங்கத்தைப் போக்க நரசிம்மப் பல்லவரை சாளுக்ய நாடு சென்று சிவகாமியை புலிகேசியின் பிடியிலிருந்து மீட்டுவரும்படி கூறுகிறார்.
சிவகாமி, மற்றக் கைதிகளுடன் வாதாபி கொண்டு செல்லப்பட்டாள். புலிகேசியிடம், தான் சிவகாமியின்பால் காதல் கொண்ட உண்மையை நாகநந்தி தெரிவித்தான். பின்பு புலிகேசி சிவகாமியைப் பார்த்துகொள்வேன் என்று வாக்களித்த பின்பு போர்முனையைத் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறிப் புறப்பட்டான். வாதாபியில் பல்லவரை வென்று வாகை சூடியதாகக் கூறி வெற்றி முழக்கமிட்டான். தன் சபையில் வீற்றிருக்கும் பாரசீக தூதுவர்முன் ஆட மறுத்த சிவகாமியை ஆட வைப்பதற்காகத் தான் பிடித்து வந்த பல்லவ நாட்டினரை சிவகாமியின் முன் கொடுமைப் படுத்தினான்.
இம்முறையை நாளும் பின்பற்றி அவளை ஆடச்செய்தான். இதனால் மனம் வெதும்பிய சிவகாமி சீற்றம் கொண்டு சினத்துடன் ஓர் சபதம் கொண்டாள். தன் காதலர் நரசிம்ம பல்லவர் இவ் வாதாபி நகரத்தைத் தீக்கிரையாக்கித் தன்னை மீட்டுச் செல்லும் வரை தான் அந்நகர் விட்டு வெளியேறுவதில்லை என்று சூளுரைத்தாள். பின்பு ஒருமுறை தன்னை அழைத்துச்செல்ல இரகசியமாய் வந்த நரசிம்மரிடமும் இதையே கூறி உடன் செல்ல மறுத்தாள்.
காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன. புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார். தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர், பாண்டிய இளவரசி வானமாதேவியை மனம்புரிந்திருந்தார். ஆனால் வாதாபியை நோக்கிப் படை எடுப்பதில் அவரது முனைப்புச் சிறிதும் குறையாமல் இருந்தது. இதற்கிடையே புலிகேசிக்கும் நாகநந்திக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் அதிகரித்து இருந்தது. தான் நாட்டைத் துறந்து, பதவியாசையை விட்டுத் துறவறம் புரிந்தது தவறென்று எண்ணினான். இதன் பொருட்டு பல்லவர்கள் படையெடுப்பைப் பற்றித் தெரிந்தும் அவன் அதைக் கூறாமல் மறைத்தான். இவனது எல்லா மனக்குளப்பத்திற்கும், சிவகாமி அவனை மணப்பதற்கு சம்மதிக்காமையே காரணமாகும்.
புலிகேசி அஜந்தாவில் நடைபெறும் கலாசார விழாவிற்குச் சென்றிருந்த வேளையில் பல்லவர் படை வாதாபிக் கோட்டையை சூழ்ந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத வாதாபி பல்லவரிடம் பணிய முனைந்தது. இதற்கிடையில் விபரமறிந்து விரைந்து வந்த புலிகேசியின் படையுடன் கோட்டைக்கு அப்பால் போர் நடந்தது. இதில் மன்னன் புலிகேசி கொல்லப்பட்டான். யாரும் இதை அறியும் முன்பாக நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று அதனைச் சிதையிலிட்டான். பின்பு சுரங்கப் பாதை மூலம் நகரினுள் வந்த நாகநந்தி புலிகேசிபோல் வேடமிட்டு வந்தான். முன்னர் அறிவித்த அடிபணியும் அறிவிப்பையும் நீக்கினான். இதனால் கோபமுற்ற நரசிம்ம பல்லவர் வாதாபியை தீக்கிரையாக்கக் கட்டளையிட்டார்.
இக்கதையின் முடிவாக ஒருகை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்ற காரணத்தினால் உயிருடன் விடப்பட்டான். போரினால் தான் பாவம் செய்ததாக நினைத்த பரஞ்சோதியார் பின் சைவத் துறவியாக மாறினார். நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொரு பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததை எண்ணி மனத்தால் இறந்தாள். பின் தன் பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாக காஞ்சி ஏகாம்பரேசுரரையையே திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள். இக்காட்சியுடன் இக்கதை முடிவடைகிறது.
இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும் அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதை நாயகனாக வருகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.
266507_10152437171670752_207484892_o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக