தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 அக்டோபர், 2013

புறநானூறு, 201. (இவர் என் மகளிர்)


புறநானூறு, 201. (இவர் என் மகளிர்)
பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை: பாடாண்
துறை: பரிசில் துறை.
==========================

`இவர் யார்?` என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே

தந்தை தோழன்; இவர்என் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு

நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்

யான்தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ, வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல்அருங் குரைய நாடுகிழ வோயே!

அருஞ்சொற்பொருள்:-

செல்லா = தொலையாத
படுதல் = ஒலித்தல்
மா = பெருமை
தடவு = ஓம குண்டம்
புரிசை = மதில்
சேண் = உயர்
உவர்த்தல் = வெறுத்தல்
வேள் = வேளிர் குலத்தைச் சார்ந்தவன்
சேடு = பெருமை
ஆண் = தலைமை
ஒலியல் = தழைக்கை
மால் = உயர்ந்த
உடலுநர் = பகைவர்
உட்கும் = அஞ்சும்
குரை = பெருமை

இதன் பொருள்:-

இவர் யார்?=====> யானே

”இவர்கள் யார்?” என்று கேட்பாயாயின் , இவர்கள் தன்னுடைய ஊர்களையெல்லாம் இரவலர்க்கு அளித்ததோடு மட்டுமல்லாமல், முல்லைகொடிக்குத் தன் தேரையும் அளித்ததால் பெற்ற அழியாப் புகழையும், ஒலிக்கும் மணிகளை அணிந்த யானைகளையும் உடைய பறம்பு நாட்டின் தலைவனாகிய உயர்ந்த பெருமையுடைய பாரியின் மகளிர். நான்

தந்தை=====> யாண்டு

இவர்களின் தந்தையின் தோழன். ஆகவே, இவர்கள் எனக்கு மகளிர் (போன்றவர்கள்). நான் ஒரு அந்தணன்; மற்றும் ஒருபுலவன். நான் இவர்களை அழைத்து வந்தேன். வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக் கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட

நாற்பத்து ஒன்பது=====> மாஅல்

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே!

யான்தர=====> நாடுகிழ வோயே!

வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.

பாடலின் பின்னணி:-

பாரி இறந்தபின், பாரி மகளிரைத் தகுந்தவர்க்கு மணமுடிக்க விரும்பி அவர்களைப் பல குறுநிலமன்னர்களிடம் கபிலர் அழைத்துச் சென்றார். இப்பாடலில், கபிலர் பாரி மகளிரை இருங்கோவேளிடம் அழைத்துச் சென்று, அவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை மணந்துகொள்ளுமாறு கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

பல தமிழறிஞர்கள் பல்வேறு கருத்துகளையும் கற்பனைக் கதைகளையும் இருங்கோவேளின் வரலாற்றுடன் இணைத்துக் கூறியிருப்பதால், இருங்கோவேளின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. இப்பாடலில், “ வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்று கபிலர் கூறியிருப்பதற்குப் பலரும் பலவிதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். விசுவபுராண சாரம் என்னும் தமிழ் நூலையும் தெய்வீக உலா என்னும் நூலையும் ஆதாரமாக வைத்து, இங்கு முனிவன் என்று குறிபிடப்பட்டது சம்புமுனிவனாக இருக்கலாம் என்று டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் கூறுகிறார். இப்பாடலில் “துவரை” என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்த நகரம் என்றும் அந்த நகரத்திலிருந்து அகத்தியர் வேளிர்களைத் தமிழ் நாட்டிற்கு அழைத்து வந்ததாகவும் நச்சினினார்க்கினியார் குறிப்பிடுகிறார்.

மைசூர் அருகே உள்ள துவரை என்னும் நகரத்திலிருந்து ஆட்சி செய்த ஹொய்சள மன்னர்களின் முன்னோன் ஒருவன் சளன் என்ற பெயருடையவன். ஒரு நாள் அவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பொழுது முயல் ஒன்று புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. அவன் அப்புலியைத் தொடர்ந்து சென்றான். அங்கே ஒருமுனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். புலியக் கண்ட அந்த முனிவர், சளனைக் கண்டவுடன், “சளனே, அப்புலியைக் கொல்க” எனக் கட்டளையிட்டார். சளன் தன் வாளை உருவிப் புலியைக் கொன்றான். புலியைக் கொன்றதால் அவன் ஹொய்சளன் என்று அழைக்கப்பட்டான். இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் முனிவரை இந்த முனிவரோடு தொடர்புபடுத்தி, “புலிகடிமால்” என்பது “ஹொய்சளன்’ என்பதின் தமிழ்மொழிபெயர்ப்பு என்று கொண்டு இருங்கோவேளை ஹொய்சள வழியனன் என்று கூறுவாரும் உளர்.

மேலே குறிப்பிடப்பட்ட கற்பனைக் கதைகளைவிட, அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் “வடபால் முனிவன் தடவினுட் தோன்றி” என்பதற்கும் “புலிகடிமால்” என்பதற்கும் அளிக்கும் விளக்கம் பகுத்தறிவுக்கு ஏற்றதாகவும் வரலாற்றுச் சான்றுகளோடு பொருந்துவதாகவும் உள்ளது. அவர் அளிக்கும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எல்லாப் பக்ககங்களிலும் மலைகளால் சூழப்பட்ட இடத்திற்குத் “தடவு” என்று பெயர். தமிழகத்தின் வடமேற்குப்பகுதியில் (தற்போது கர்நாடக மாநிலத்தில்) இருந்த அத்தகைய தடவு ஒன்றில் முனிவன் ஒருவன் வாழ்ந்துவந்ததால் அந்தத் தடவுக்கு ”முனிவன் தடவு” என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். அந்த ”முனிவன் தடவு”ப் பகுதியை ஆண்ட குறுநிலமன்னன், புலிநாடென்று வழங்கப்பட்ட கன்னட நாட்டு வேந்தனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். அல்லது, அந்தத் தடவுப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஆந்திர சாதவாகன வேந்தருள் ஒருவனான புலிமாய் என்பவனை வென்றதால் “புலிகடிமால்” என்ற பட்டம் பெற்றிருக்கலாம். சாதவாகனர்களுடைய ஆட்சி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. அந்நாளில் துவராவதி நகரம் சாதவாகனர்களின் நாட்டில் இருந்தது. சாதவாகன மன்னனை வென்ற இருன்கோவேளின் முன்னோர்கள் துவராவதி என்னும் துவரை நகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்ததை இப்பாடலில் “துவரை யாண்டு நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேள்” என்று குறிப்பிடுகிறார் என்பது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் கருத்துப்படி, வேளிர் குலத்தினர் அக்காலத் தமிழகத்தின் வடமேற்குப் பகுதியில் தொடங்கி பிற்காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் குறுநிலமன்னர்களாக ஆட்சி புரிந்துவந்தனர் என்பது தெரிய வருகிறது. அந்த வேளிர்குலத்தை சார்ந்தவன்தான் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இருங்கோவேள்.

-- ஆசிரியர் பக்கம் --
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக