தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பகாப்பதம் / பகுபதம்


சொல்லிலக்கணம் – 15
பதம் (பதவியல்) - 3
*******************

பகாப்பதம் / பகுபதம் 
*********************
நூற்பா: 132
(பகுபதம்)
பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே. (05)

பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் வருபெயர்-
பொருளும் இடமும் காலமும் சினையும் குணமும் தொழிலும்
காரணமாக வருகின்ற பெயர்ச்சொற்களும்

பொழுது கொள் வினை-
தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலத்தைக் கொள்ளும்
வினைச் சொற்களும்

பகுபதம்-பகுபதங்களாகும்.

பொருளும், இடமும், காலமும், சினையும், குணமும், தொழிலும், காரணமாக வருகின்ற பெயர்ச்சொற்களும்

தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலத்தைக் கொள்ளும்
வினைச் சொற்களும் பகுபதங்களாகும்.

பகுபதங்களின் வகைகள்
*************************
பகுபதங்களை முதல் நிலையில் பெரும்பாலும்
இரண்டு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.

** பெயர்ப் பகுபதம் (பெயர்ச்சொல்லாக அமையும் பகுபதம்)
** வினைப் பகுபதம் (வினைச்சொல்லாக அமையும் பகுபதம்)


பெயர்ப் பகுபதங்கள்
********************
பெயர்ப் பகுபதங்களை மேலும் ஆறு உபபிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அவையாவன வருமாறு.

** பொருட்பெயர்ப் பகுபதம்
** இடப் பெயர்ப் பகுபதம்
** காலப் பெயர்ப் பகுபதம்
** சினைப் பெயர்ப் பகுபதம்
** குணப் பெயர்ப் பகுபதம்
** தொழில் பெயர்ப் பகுபதம்

பொருட்பெயர்ப் பகுபதம்
*************************
ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைவனவாகும்.

(எ.கா)
பொன்னன்

பொன்னை உடையவன் என்பது பொருள்.
இதைப் பிரித்தால் பொன்+அன் என்று பொருள் தருகிறது.

இடப்பெயர்ப் பகுபதம்
**********************
இடத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைவனவாகும்.

(எ.கா)
அகத்தான்

‘அகம்‘ என்னும் இடப்பெயரின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது.

காலப்பெயர்ப் பகுபதம்
**********************
நாள், திங்கள், ஆண்டு எனவரும் காலப் பெயர்களின் அடிப்படையில்
இவை அமைகின்றன.

(எ.கா)

கார்த்திகையான்
கார்த்திகைத் திங்களில் பிறந்தவன் என்று பொருள்படும்.

ஆதிரையாள்
ஆதிரை நாளில் (நட்சத்திரத்தில்) பிறந்தவள் என்று பொருள்படுகிறது.

சினைப்பெயர்ப் பகுபதம்
************************
சினை என்பது உறுப்பு என்று பொருள்தரும்..
உறுப்பின் பெயர் அடிப்படையில் இவை அமைகின்றன.

(எ.கா)
கண்ணன்

இங்கே ‘கண்‘ என்பது உடலின் உறுப்பு (சினை).
இதனை கண் + அன் என்று பிரித்தால் ‘கண்‘ என்பது பொருள்தரும் சொல்லாக அமைகின்றது.

எனவே இது சினைப் பெயர்ப் பகுபதம் ஆகின்றது எனலாம்.

குணப்பெயர்ப் பகுபதம்
************************
இது ஒரு பண்பைக் (குணம்) குறிக்கும் சொல்லின் அடிப்படையில்
அமைகின்றது.

(எ.கா)
கரியன்

இச் சொல் கருமை என்னும் பண்புப் பெயரின் அடிப்படையில் அமைந்துள்ளது.


தொழிற்பெயர்ப் பகுபதம்
************************
இரு தொழிலின் பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைவன
தொழிற் பெயர்ப் பகுபதங்கள் ஆகும்.

(எ.கா)
தட்டான், தச்சன், உழவன்

எனவரும் பெயர்ச் சொற்கள் தொழிற்பெயரால் அமைந்தவை.

வினைப் பகுபதங்கள்
********************
தெரிநிலை (வெளிப்படையாக)யாகவும், குறிப்பாகவும்
காலத்தைக் காட்டும் வினைச் சொற்கள் வினைப் பகுபதங்கள் ஆகின்றன.

இவற்றை முதலில் இரு வகையாகப் பிரித்துக் நோக்கலாம்.
** வினைமுற்றுப் பகுபதம்
** வினையாலணையும் பெயர்ப் பகுபதம்

இவற்றையும் மேலும் உபபிரிவுகளாகப் பிரிக்கலாம்.

வினைமுற்றுப் பகுபதங்கள்
***************************
** தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்
** குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்


தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்
************************************
ஒரு வினைப் பகுபதம் காலத்தை வெளிப்படையாகக் காடுமேயானால்
அது தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எனப்படும்.

(எ.கா)
நடந்தான், நடக்கின்றான், நடப்பான்

எனவரும் வினைமுற்றுகளில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன.

இவ்வாறு வினை நிகழ்ந்த காலம் வெளிப்படையாகத் தெரிவதனால்
இவை தெரிநிலை வினைமுற்றுகள் ஆகின்றன.

தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையாகவும் வரும்.

(எ.கா)
நடவான்

குறிப்பு வினைமுற்றுப் பகுபதம்
********************************
ஒரு வினைப் பகுபதம் காலத்தைக் குறிப்பால் உணர்த்துமேயானால்
அது குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் ஆகிறது.

குறிப்பு வினை என்பது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறுவகைப் பெயர்களின் அடிப்படையாகத் தோன்றி,
வினைச்சொல்லின் பொருளைத் தருவன எனலாம்.

(எ.கா)
பொன்னன், ஊணன், அற்று, இற்று எனவரும் சொற்களில்
காலம் தெரிநிலையாக வெளிப்படவில்லை.

ஆனால் இச்சொற்களில் காலம் குறிப்பால் உணர்த்தப்படுகின்றது.

அவன் பொன்னனாக இருந்தான்,
பொன்னனாக இருக்கிறான்,
பொன்னனாக இருப்பான்

எனப் பொருள் வரும் போது காலம் குறிப்பாக உணர்த்தப்படுவதை அறியலாம்.

எனவே இவை குறிப்பு வினை முற்றுகள் எனப்படுகின்றன.

இத்தகைய குறிப்பு வினைமுற்றுப் பகுபதம் எதிர்மறையிலும் வரும்.

(எ.கா)
அவன் இல்லாதவன்.

பெயரெச்சங்களும் வினையெச்சங்களும்
****************************************
தெரிநிலையாகவும் குறிப்பாகவும் காலம் காட்டும் பெயரெச்சங்களும்
வினையெச்சங்களும் வினைப் பகுபதங்களே.

பெயர் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம்.

(எ.கா)
உண்ட பையன்
ஓடாத குதிரை

இத் தெரிநிலை வினைகள் பையன், குதிரை என்ற பெயர்ச்சொற்களைக் கொண்டு பொருள் முடிவு பெறுகின்றன.

எனவே, இவை தெரிநிலைப் பெயரெச்சப்பகுபதம் என வழங்கப்படும்.
இன்னொரு வினைமுற்றைக் கொண்டு பொருள் நிறைவடையும் வகையில் அமையும் எச்சம் வினையெச்சப் பகுபதம் ஆகும்.

(எ.கா)
உண்டு வந்தான்
உண்ண வருகின்றான்

உண்டு, உண்ண எனவரும் வினைகள், வந்தான், வருகின்றான்,
ஆகிய வினைமுற்றுகளைக் கொண்டு பொருள் முடிவைப்
பெறுகின்றன.

குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம்
இவை காலத்தைக் குறிப்பாகக் காட்டுவன.

(எ.கா)
பெரிய பையன் – பெயரெச்சம்
மெல்ல வந்தான் - வினையெச்சம்

வினையாலணையும் பெயர்ப் பகுபதம்
**************************************

வினையாலணையும் பெயர்ப் பகுபதங்களும் இருவைகைப்படும்.

** தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம்

(எ.கா)
நடந்தானைக் கண்டேன்
நடந்தவனைக் கண்டேன்
இவை காலத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றன

** குறிப்பு வினையாலணையும் பெயர்ப் பகுபதம்:

(எ.கா)
பொன்னனைக் கண்டேன்
இது காலத்தை குறிப்பாகவே காலம் உணர்த்துகிறது.

பகுபத உறுப்புக்கள்
*******************
ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள்
பகுபத உறுப்புகள் எனலாம்.

இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

** பகுதி
** விகுதி
** இடைநிலை
** சாரியை
** சந்தி
** விகாரம்
என்பனவாகும்.

நூற்பா: 133

(பகுபதவுறுப்புக்கள்)
பகுதி விகுதி யிடைநிலை சாரியை
சந்தி விகார மாறினு மேற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும். (06)

நன்நூலார் இவ்வாறு வகுத்துக் காட்டுகிறார்.

பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும்-
முதனிலையும் இறுதிநிலையும் இடை நிலையும் சாரியையும்
சந்தியும் விகாரமும் ஆகிய இவ்வாறு உறுப்பினுள்ளும்,

ஏற்பவை முன்னிப் புணர்ப்ப –
பொருளமைதிக்கு ஏற்பவைகளை நினைத்து
அறிவுடையோர் கூட்டி முடிக்க

எப்பதங்களும் முடியும்-
எவ்வகைப் பட்ட பகுபதங்களும் முடிவு பெறும்.

இந்த ஆறு உறுப்புகளையும் அறிவுடையோர் கூட்டிச் சேர்த்தால்
எல்லாவிதமான பகுபதங்களும் அமையும் என்பது பொருள்

பகுதி
*****
ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும்.
எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம்.
உண்டான் என்னும் பகுபதத்தில்
(உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.

விகுதி
******
பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால்
இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு.

உண்டான் என்னும் பகுபதத்தில்
(உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும்.
இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டி நிற்கும்.


இடைநிலை
************
முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது.
வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும்.
உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் –

உண் - முதனிலை
ட் - இடைநிலை
ஆன் - இறுதிநிலை

‘இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.

சாரியை
*********
இது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.

சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.

வந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘
வா - பகுதி
த் - சாந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி

‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.

சந்தி
*****
இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும்
இடையில் வரும்.

பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும்.

உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி.

நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.
நட - பகுதி
த் - சந்தி
தல் - விகுதி

பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.

விகாரம்
********
விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை.
பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம்.
அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம்.
இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர்.

வந்தனன் - வா+த்+த்+அன்+அன்
வா - பகுதி
த் - சந்தி
த் - இடைநிலை
அன் - சாரியை
அன் - விகுதி

இதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும்,
த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன.


*********************
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக