தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

உலகிலேயே அழகான பெண்!


உலகிலேயே அழகான பெண்!

ஓர் அழகான கிராமம்;பச்சைக்கம்பளம் போர்த்தியது போல் வயல்கள்;பழங்கள் கனிந்து குலுங்கும் சோலைகள்.சல சல என ஓடும் தெளிவான நீர் நிரம்பிய ஆறு;ஒரு பூலோக சொர்க்கம்தான்.

அவ்வூரில் ஒரு திருவிழா .ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும் விழா.கடைகள், விளையாட்டுகள்,பாட்டு,நடனம் என ஊர் கோலாகலமாக இருக்கும்.பக்கத்து ஊர்களிலிருந் தெல்லாம் மக்கள் வந்து சேர,கூட்டம் ஜே ஜே என்று இருக்கும்.

ஒரு முறை விழாக் காண அண்டை ஊரிலிருந்து ஒரு சிறுவனும் அவன் தாயும் வந்தனர். அச்சிறுவனுக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.அவன் தாய் அவனுக்கு நிறையத் தின் பண்டங்கள் வாங்கித் தந்தாள்.தன் தாயின் கையைப் பிடித்துக்கொண்டே அக்கூட்டத்தில் அவன் சுற்றி வந்தான்.களைப்படந்த தாய் ஓரிடத்தில் சாய்ந்து அமர்ந்து கண்மூடச் சிறுவனும் அவளுடன் அமர்ந்தான்.

அப்போது ஒரு வண்ணமயமான பட்டாம்பூச்சி அங்கு பறந்து வரவே அதைப்பிடிக்கும் ஆவலில் அச்சிறுவன் அதைத்துரத்த ஆரம்பித்தான்.துரத்திக் கொண்டே வெகு தூரம் சென்ற பின் தாயைப் பிரிந்து வந்து விட்டதை உணர்ந்தான்.திரும்பிச் செல்லும் வழி அவனுக்குத் தெரியவில்லை.அழ ஆரம்பித்தான்.

அவ்வழியே வந்த ஒருவன் அவனை ஏன் அழுகிறாய் எனக்கேட்க சிறுவன் தாயைப் பிரிந்த வந்து விட்டதைச் சொன்னான்,அந்த மனிதன் கேட்டான்”உன் தாயிடம் நான் சேர்ப்பிக் கிறேன். உன் தாய் எப்படி இருப்பார்கள்?”

சிறுவன் சொன்னான்”மிக அழகாக இருப்பார்கள்”

மனிதன் சிறுவனை அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

எதிரில் ஓர் அழகான பெண் வருவதைப் பார்த்து அம்மனிதன் கேட்டான்”இவள்தான் உன் தாயா?”

சிறுவன் சொன்னான்”இல்லை .என் தாய் அழகாக இருப்பார்கள்”

அம்மனிதன் வியப்படைந்தான் ,அவ்வளவு அழகான பெண்ணா என்று.

சிறிது நேரம் தேடி அலைந்த பின் எதிரில் கவலை தோய்ந்த முகத்துடன் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும் சிறுவன் ஓடிச் சென்று அம்மா என்று கட்டிக்கொண்டான்.

அம்மனிதன் பார்த்தான்.

அந்தப் பெண் அழகாயில்லை.மாறுகண்.தூக்கிய பல் வரிசை என்று அழகற்றவளாயிருந்தாள்.

அம்மனிதன் கேட்டான்”இவளையா அழகானவள் என்று சொன்னாய்?”

சிறுவன் அழுத்தமாகச் சொன்னான்”ஆமாம்.
இவள்தான் என் அம்மா”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக