பாக்டீரியாவிலிருந்து டீசல் எண்ணெய்:: விஞ்ஞானிகள்
ஒரு வகை பாக்டீரியாவிலிருந்து டீசல் எண்ணெயைத் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் பரீட்சார்த்த அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவ்விதம் புது வழியில் தயாரிக்கப்பட்ட செயற்கை டீசலுக்கும் வழக்கமாக பெட்ரோலிய குரூட் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் டீசலுக்கும் இடையே வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது என்ற அளவில் செயற்கை டீசல் உள்ளது.தவிர, இப்புது வகை டீசலானது கார் லாரி ஆகியவற்றின் எஞ்சின்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ. கோலி (E Coli) என்னும் பாக்டீரியா உள்ளது.இந்த பாக்டீரியாவில் பல வகைகள் உள்ளன். இவற்றில் குறிப்பிட்ட வகை பாக்டீரியா நமது அனைவர் உடலிலும் பெருங்குடலில் பெரும் எண்ணிக்கையில் உள்ளது. இது K2 என்னும் வைட்டமினைத் தயாரிக்க உதவுகிறது.
அதே சமயத்தில் தீங்கு வகை விளைக்கும் இ.கோலி பாக்டீரியாவும் உள்ளது. இது குடி நீர் அல்லது உணவு மூலம் உடலுக்குள் சென்றால் வயிற்றுப் போக்கு போன்ற கோளாறை உண்டாக்கும்
ஆராய்ச்சிக்கூடங்களிலும் இ.கோலி வகை பாக்டீரியாவை வளர்க்க முடியும். இந்த பாக்டீரியாவில் மரபணு மாற்றம் செய்வதன் மூலம் செயற்கை டீசல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள எக்சீட்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்க்ள் இச்சாதனையைப் புரிந்துள்ளன்ர்.
ஆனால் இப்போதையக் கட்டத்தில் அவர்களால் 200 லிட்டர் இ.கோலி பாக்டீரியாவிலிருந்து ஒரு ஸ்பூன் டீசலைத் தான் தயாரிக்க முடிந்துள்ளது.முதலில் இந்த அளவு கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். பின்னர் செயற்கை டீச்லைத் தயாரிக்க செலவு கட்டுபடியாகுமா என்பது தெரிய வர வேண்டும்.இந்த இரு கட்டங்களையும் தாண்டிய பிறகு தான் பெரிய தொழிற்சாலை அமைத்து பாக்டீரியா மூலம் பெரிய அளவில் டீசல் தயாரிப்பது சாத்தியமாகும். இதற்கு 10 ஆண்டுகள் ஆகலாம்.
டீசல் அல்லது பெட்ரோலுக்கு மாற்றாக எரிபொருளைத் தயாரிக்கும் திட்டம் நீண்ட நாட்களாக இருந்து வருவது தான். அதாவது சில வகைத் தாவரங்கள் அல்லது செடிகளின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை டீசலுடன் கலந்து பயன்படுத்துவது என்பது இவற்றில் ஒன்றாகும். உதாரணமாக ஜட்ரோபா எனப்படும் காட்டாமணக்கு விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை டீசலுடன் குறிப்பிட்ட அளவுக்குச் சேர்ந்து பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவின் ரயில்வே துறையினர் ஏற்கெனவே இதில் முன்னோடியாக உள்ளனர். தமிழகத்தில் குறைந்த தூரம் ஓடுகின்ற சில ரயில் வண்டிகளின் டீசல் எஞ்சினில் காட்டாமணக்கு எண்ணெய் சேர்க்கப்பட்ட டீசல பயன்படுத்தப்படுகிறது
கனடாவிலும் ஜெர்மனியிலும் எத்தியோப்பிய வகைக் கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை டீசலுடன் சேர்த்துப் ப்யன்படுத்துகின்றன்.இவ்வித
கனடாவில் 2012 அக்டோபரில் 15 பேர் ஏறிச் செல்லக்கூடிய விமானம் ஒன்று முற்றிலும் கடுகு எண்ணெயில் இயங்கி சாதனை படைத்தது.
ஆனால் இந்த ஏற்பாடுகளில் உயிரி எரிபொருட்களைத் தரும் தாவரங்களைப் பயிரிட ஏராளமான நிலம் தேவை. உணவுத் தானியங்களையும் காய்கறிகளையும் அளிக்கின்ற விவசாய நிலங்கள் உயிரி எரிபொருள் உற்பத்திக்குத் திருப்பப்படுகிற ஆபத்து உள்ளது.
இத்துடன் ஒப்பிட்டால் பாக்டீரியாவிலிருந்து டீசல் தயாரிக்கும் ஏற்பாட்டில் இவ்விதப் பிரச்சினை கிடையாது என்பது மிகவும் சாதகமான அம்சமாகும்.
- என்.ராமதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக