அது வரம்பு மீறிப் பசி பட்டினி என்று போகும் போது தான் களைப்புத் தோன்றும். இப்படி நான் சொல்வது, உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு மட்டுமே. ஆசையிலும், பசியிலும் சில நாட்கள் அதிகம் சாப்பிட்டு விட்டால், அதைச் சமன் செய்யவே உண்ணாவிரதம்.
தெய்வ பக்தியுள்ள எந்த இந்துவுக்கும் இந்த விரதம் உண்டு. இந்துக்களில் அதிகமான பேர் கைக்கொள்வது முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம். இது மாதத்தில் இரண்டு நாள் வரும். வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டியைவிடப் பிரதானமானது. பக்தியுள்ள இந்துக்கள் ஒரு மாதத்தில் நான்கு வெள்ளி, இரண்டு சஷ்டி- ஆக ஆறு நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
இது மாதத்தில் ஐந்தில் ஒரு பங்கு. உடம்பு பலவீனம் அடையாமலும், அதே நேரத்தில் உடம்பு ஏறாமலும் இது காப்பாற்றுகிறது. இன்னும் சில அதிசய இந்துக்கள் உண்டு. அவர்கள் ஒரு மாதம் முழுக்க உப்புச் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். சிலர் நெய் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.`உண்ணா நோன்பு’ என்பது ஒரு தவம்.
சிறு வயதில் இருந்தே அதை ஒரு பயிற்சியாகக் கொள்ள வேண்டும். முப்பது வயது வரை கண்டதைத் தின்று விட்டால் வாய்வுத் தொல்லை வரும். அதன் பிறகு உண்ணாவிரதம் இருந்தால் வாய்வு அதிகமாகும். இளம் பருவத்தில் இருந்தே இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வாரத்தில் ஒருநாள் உண்ணாவிரதப் பயிற்சி, ஞானம் பெறுவதற்கான வழிகளில் ஒன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக