தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, October 31, 2012

சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?


சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?


"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து 
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே"
- சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் 

ஈராக்கிய பிரதேசத்தில் உருவான முதலாவது வெள்ளையின சாம்ராஜ்யம், ஆர்மேனியர்களுடையது. (இது பற்றி பின்னர், இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.) ஆர்மேனியர்களின் பூர்வீகத்தை குறிப்பிடும் புராணக்கதை ஒன்று இங்கே முக்கியமானது. ஆர்மேனியா என்ற தேசத்திற்கு, ஆர்மேனிய மொழியில் "ஹய்" என்று பெயர். ஹய்க் என்ற ஆர்மேனிய இனக்குழுத் தலைவன் உருவாக்கிய நாடு என்று அர்த்தம். ஆர்மேனிய மக்கள், ஒரு காலத்தில் பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்குள் வாழ்ந்த  சிறுபான்மை இனமாக இருந்திருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் பாபிலோனியாவை ஆண்ட, நிம்ருட், அல்லது பேல் என்ற சக்கரவர்த்திக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அவனை போரில் வென்று தான், ஆர்மேனிய தேசம் உருவானது. நிம்ரூட் என்ற பெயர் மட்டுமல்ல, பேல் (பார்க்க: வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்) என்ற பெயரும், பாபிலோனிய மன்னர்களின் விருப்பத்திற்குரிய தெரிவாக இருந்துள்ளது. ஆகவே, இவ்விரண்டு பெயர்களும், தெய்வங்களை மட்டுமல்ல, பாபிலோனியாவை ஆண்ட மன்னர்களையும் குறிக்கலாம். பெயர் ஒரே மாதிரியாக இருப்பதால், பல விதமான கதைகள் எம்மைக் குழப்புகின்றன. எது எப்படி இருப்பினும், என்றோ ஒரு காலத்தில் நிம்ரூட் என்ற வீர புருஷர் ஒருவர் வாழ்ந்திருக்க வேண்டும். அவருக்குப் பின்னர், அவரின் பெயர் தாங்கிய மன்னர்களின் காலத்தில் நடந்த கதைகளும், "நிம்ரூட் கதைகளாக" மக்களால் பேசப் பட்டு வந்திருக்கலாம்.

ஆர்மேனியர்களின் பூர்வீகம் பற்றிய கர்ணபரம்பரைக் கதையில், அவர்களின் தலைவனான ஹய்க் எதிர்த்துப் போராடிய, நிம்ரூட் (அல்லது பேல்), ஒரு ராட்சத தோற்றம் கொண்டவனாக வர்ணிக்கப் படுகின்றான். இந்து புராணங்களின் நம்பிக்கையின் படி, அசுரர்கள் ராட்சத தோற்றம் கொண்ட மனிதர்கள் ஆவர். இது இன்றைக்கும் காணப்படும், ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பற்றிய பொது அபிப்பிராயத்துடன் ஒத்துப் போகின்றது. ஒரு காலத்தில், இன்றைய ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த மக்கள், ஆபிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்த கறுப்பினவர்களாக இருக்க வேண்டும். சுமேரியர்கள், அக்காடியர்கள், பாபிலோனியர்கள் எல்லோரும் கறுப்பர்கள் தான். ஆகவே அவர்களின் மன்னனும் ஒரு கறுப்பனாகவே இருந்திருக்க வேண்டும். இந்து மதத்தில், சிவன், விஷ்ணு, காளி ஆகிய கடவுளரும் கறுப்பாகவே உள்ளனர்.

இந்துக்களின் காளி, துர்க்கை ஆகிய பெண் தெய்வங்கள், பாபிலோனியாவில் இஷ்தார் (அல்லது இனானா) என்ற பெயரில் வழிபடப் பட்டு வந்ததை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையில், பண்டைய சுமேரியர்கள் சிவனையும் வழிபட்டு வந்தனரா என்று பார்ப்போம். சுமேரியர்கள்/பாபிலோனியர்கள் பல தெய்வ வழிபாடு கொண்ட மதத்தை பின்பற்றினார்கள். இருப்பினும், எயா அல்லது என்கி என்ற கடவுளுக்கு தனி மரியாதை கிடைத்து வந்தது. பல இடங்களில் முழுமுதற் கடவுளாக கருதப் பட்டார். அதை விட, தம்முஸ் (அல்லது தமுசி) என்ற தெய்வமும் பிரபலமாக இருந்ததை நாம் ஏற்கனவே பார்த்தோம். தம்முஸ், எயா கடவுளின் மனித அவதாரம் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனால், இவ்விரண்டு தெய்வங்களுக்காகவும் கட்டப்பட்ட கோயில்கள் ஒரே மாதிரியாக இருந்ததில் வியப்பில்லை.

எயா/என்கி கடவுளின் தோற்றம் பற்றிய கதை, ஆப்பிரிக்காவின் பண்டைய இறை நம்பிக்கையை பறை சாற்றுகின்றது. இரண்டு கொம்புகளுக்கு நடுவில் சூரியனை வைத்துள்ள எருதின் சிலை, ஆப்பிரிக்கர்களால் கடவுளாக வழிபடப் பட்டு வந்தது. ஒரு காலத்தில் யூதர்களும் அந்த எருமைக் கடவுளை வழிபட்டதாகவும், அதனால் கோபமுற்ற மோசேஸ் ஆண்டவர் அருளிய பத்துக் கட்டளைகளை கொண்ட களிமண் தட்டுகளை போட்டு உடைத்ததாகவும், பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ஆப்பிரிக்கர்களின் அதே எருமைக் கடவுள், சுமேரியர்களாலும் வழிபடப் பட்டது. எருதின் கொம்புகளுக்கு நடுவில் உள்ள சூரியன், சூரியக் கடவுளைக் குறிக்கும். ஹீபுரு, அரபு மொழியில் சூரியனுக்குப் பெயர் ஷாம்ஸ். பாபிலோனியர்கள், குறிப்பாக செமிட்டிக் மொழி பேசிய அக்காடியர்கள், ஷாமாஸ் கடவுள் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். எயா, என்கி ஆகிய பெயர்களும், சூரியக் கடவுளைக் குறிக்கும்.

தம்முஸ் சூரியக் கடவுளின் புதல்வனாகவும் நம்பப் பட்டார். தம்முசின் தாய், கன்னியாகவே மகனை ஈன்றெடுத்த கதையை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இது இயேசு கிறிஸ்து, கன்னி மரியாளுக்கு பிறந்த கதையை ஒத்திருக்கின்றது. மேலும், அக்காடிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சார்கோன் மன்னன் பிறந்த கதையும் ஒரே மாதிரியாக உள்ளது. சார்கொனின் தாய், சூரியதேவனின் அருளால் கருத்தரித்ததாக அந்தக் கதை கூறுகின்றது. மகாபாரதத்தில் வரும் கர்ணன் கதையும் ஒரே மாதிரி இருக்கின்றது. கர்ணனும், கன்னியான குந்திதேவிக்கு,  சூரியதேவன் அருளால் பிறந்த குழந்தை தான். குழந்தை ஏசுவும், குழந்தை சார்கொனும், குழந்தை கர்ணனும் அநாதை போன்று வேறு இடத்தில் வளர்க்கப்பட்டு, வளர்ந்த பின்னர் ஆட்சியாளர்களுக்கு சவாலாக விளங்கினார்கள். இங்கே நாங்கள், சில உண்மைகளை மறந்து விடக் கூடாது.

பண்டைய சமுதாயத்தில் சூரியக் கடவுள் முக்கியமான பாத்திரம் வகித்தது. அந்த சூரியக் கடவுளின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ளது. சூரியதேவனும், எருமையும் சேர்ந்திருக்கும் தெய்வச் சிலையை வழிபடும் மரபு, சூடான், எகிப்து, இஸ்ரேல், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் எல்லாம் பரவியிருந்தது. ஆப்பிரிக்கர்களின், குறிப்பாக எகிப்தியர்களின் மத நம்பிக்கைகளை சுமேரியர்களும் பின்பற்றியதை ஏற்கனவே பார்த்தோம். பெரும்பாலும் ஒரே மாதிரியான புராணக் கதைகளும் அந்த தொடர்பை வலுப் படுத்தின. உதாரணத்திற்கு, இசிஸ், இசிரிஸ் தெய்வங்களின் பெயர்கள், சுமேரியரால் இனன்னா, துமுசி என்று மாற்றப்பட்டது. ஆயினும், புராணக் கதை கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளது.

இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், சில தெய்வங்களைப் பற்றிய கதைகளும், ஆன்மீக விளக்கங்களும் சுமேரியர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டன. ஆப்பிரிக்கர்கள் சூரியனை ஏந்திய எருமையை முதன்மையான  கடவுளாக நம்பி வழிபட்டார்கள்.  சுமேரியர்கள், சூரியனை தனியான முழுமுதற் கடவுளாக்கினார்கள். 
சூரியன், என்கி, எயா, தம்முஸ்... இவை எல்லாம் ஒரே கடவுளைக் குறித்தன. சூரியக் கடவுளின் கோயில் வாசலில் எருமைகளின் சிலைகள் வைக்கப் பட்டிருந்தன.
சுமேரியர்களால் டில்முன் என்று அழைக்கப் பட்ட பாஹ்ரைன் நாட்டில், பாபர் எனும் இடத்தில் இருந்த புராதன கோயிலின் இடிபாடுகளை நீங்கள் இப்போதும் பார்க்கலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் அந்தக் கோயில் எப்படி இருந்தது என்ற வரைபடத்தை, அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றனர். அந்தக் கோயிலின் மூல மூர்த்தி,  எயா/என்கி என்பதும், வாசலில் எருமைகளின் சிலைகள் காணப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. இன்று இந்து மதம் கோலோச்சும் இடங்களில், சிவன் கோயில்களுக்கு முன்னால், நந்தி என்ற மாட்டின் சிலை இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

அப்படியானால், அரேபியாவிலும், ஈராக்கிலும் வாழ்ந்த மக்கள் ஒரு காலத்தில் சிவனை வழிபாட்டு வந்தனரா? ஆம், நிச்சயமாக. ஹரப்பாவில் கண்டெடுத்த முத்திரை ஒன்றில், "மகாதேவா" என்ற சிவனின் உருவம் இருந்த தகவல் பலருக்கு தெரியும். அதை சுட்டிக் காட்டி, "ஹரப்பா நாகரீகம் தமிழர்களுடையது" என்று பெருமைப் பட்டுக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்களின் முன்னோர்களே ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கினார்கள் என்று கூறிக் கொள்கிறோம். அப்படியானால், ஈராக்கில், அரேபியாவிலும் இருந்த புராதன நாகரீகங்களையும் தமிழர்கள் தானே உருவாக்கி இருக்க வேண்டும்? அதே போன்று, எகிப்திய நாகரீகமும் தமிழர்களுடையதாக இருக்க வேண்டும். தமிழர்கள், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்கா சென்றனரா? அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தனரா? அப்படியானால், அரேபியர்கள், ஈரானியர்கள் எல்லோரும் தமிழர்களா? இப்படியான கேள்விகள், இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களின் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும். மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதால், அவர்கள் வெவ்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் என்று நினைப்பது தவறு. ஒரு மொழியை யாரும் பேசக் கற்றுக் கொள்ளலாம். அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினர் ஆங்கிலத்தை தாய்மொழி போன்று பேசுகின்றனர். அதற்காக அவர்களை யாரும், "ஆங்கில இனத்தவர்கள்"  என்று கூறுவதில்லை. ஆனால், 500 வருடங்களுக்குப் பின்னர் அப்படி நடந்தாலும் அதிசயப் பட எதுவுமில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த மக்களால் வழிபடப்பட்ட முழுமுதற் கடவுளுக்கும், சிவபெருமானுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சிவனின் வாகனமான நந்தி மட்டும் ஒரேயொரு ஒற்றுமையல்ல.
சிவன் தலையில் இருக்கும் பிறைச் சந்திரன், என்கி கடவுள் படம் பொறித்த பாபிலோனிய முத்திரைகளில் காணப்படுகின்றது. சிவனின் கழுத்தை சுற்றியிருக்கும் பாம்பு, என்கியின் காலின் கீழ் உள்ளது. சிவனின் தலையில் இருந்து கங்கை ஆறு ஊற்றெடுக்கின்றது. ஈராக்கில், எயுபிராத், தீக்ரிஸ் ஆகிய நதிகளின் மூலம், என்கி கடவுள் என்பது சுமேரியரின் நம்பிக்கை ஆகும்.

என்கியின் அவதாரமான தம்முஸ்/துமுசி, இஷ்தார்/இனானா என்ற பெண் தெய்வத்தை திருமணம் செய்யும் கதை, சிவன்-பார்வதி கதையை நினைவுபடுத்துகின்றது. சிவராத்திரி பற்றிய கதையில், சிவனை நினைத்து விரதம் இருக்க வேண்டுமென பார்வதிதேவி  சிவபக்தர்களை கேட்டுக் கொள்கிறாள். அதே போல, தம்முசின் மறைவை நினைத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று, இஷ்தார் தனது பக்தர்களை கேட்டுக் கொள்கிறாள். சைவ சமயத்தை பின்பற்றுவோர், சிவனைக் குறிக்கும் விபூதி என்ற சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வார்கள். அதே போன்று, தம்முஸ் கடவுளை வழிபட்ட சுமேரிய/பாபிலோனிய மக்கள், சாம்பலை எடுத்து நெற்றியில் சிலுவைக் குறி வைத்துக் கொண்டார்கள். இவ்வாறு சிவ வழிபாட்டில் உள்ள பல அம்சங்களை, நாங்கள் சுமேரியர்களின் வழிபாட்டிலும் காணலாம்.

சிவபெருமான் இடையில் புலித்தோலை உடுத்தி இருப்பதாகத் தான் படங்களில் வரைகின்றார்கள். புலித்  தோலை உடுத்திய சிவன் படம், வேடுவர்களாக இருந்த நமது முன்னோர்களை ஞாபகமூட்டுகின்றது. மனிதர்கள் வேட்டையாடி வாழ்ந்த காலத்தில், மிருகங்களின் தோலை ஆடையாக அணிந்து கொண்டார்கள். அந்த வழக்கம், இன்றைய நாகரிக காலத்திலும் சில இடங்களில் தொடர்பின்றது. உதாரணத்திற்கு, ரஷ்யாவிலும், ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் துருவத்தை அண்டிய வட பிரதேசங்களில் வாழும் மக்கள், இன்றைக்கும் துருவ மான்களின் தோலை பதப்படுத்தி ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். சிவன் வேட்டைக்கு செல்வதாக, சைவப் புராணக் கதைகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. வேட்டையாடி விட்டு வீட்டுக்கு வந்த சிவன், உமாதேவியாரின் அழுக்கில் இருந்து உருவான பிள்ளையார் தடுத்ததால் கோபமுற்று தலையை வெட்டியதாக ஒரு கதை உண்டு.

சைவ மத நம்பிக்கையிலும், சிவபெருமானை ஒரு வேட்டைக்காரனாக சித்தரிப்பதை காட்டவே, அந்தக் கதையை இங்கே குறிப்பிட்டேன். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நிம்ரூட் மன்னனின் கதையை, இப்போது மீண்டும் ஞாபகப் படுத்த விரும்புகின்றேன். நிம்ரூட் மன்னன் ஒரு சிறந்த வேட்டைக்காரன் என்று, சுமேரியர்களின் புராணக் கதைகளில் எழுதப் பட்டுள்ளது. நிம்ரூட் என்ற பெயரைக் கொண்ட மன்னர்கள் பற்றிய கதைகள், வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த, வெவ்வேறு மொழிகளைப் பேசிய மக்களால் பேசப் பட்டு வந்துள்ளன. சுமேரிய, பாபிலோனிய, அக்காடிய, ஹீபுரு, அரபு மொழிகளைப் பேசிய மக்களின் "நிம்ரூட் கதைகளில்", அந்த மன்னன் ஒரு வேட்டைக்காரனாகவே சித்தரிக்கப் படுகின்றான். அப்படியானால், "நிம்ரூட் கதை" மேற்கு ஆசியாவில் உன்னத நாகரீகங்கள் தோன்றுவதற்கு முன்னர் வாழ்ந்த வீர புருஷர் ஒருவரின் வரலாற்றுக் கதையாக  இருக்க வேண்டும். ஒரு காலத்தில் ஆபிரிக்காவில் இருந்து அழிந்து போன புராதன நாகரீகத்தின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

இன்றைய சூடானில், நுபியாவில் இருந்த நாகரிக சமுதாயம் ஒன்றைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். (பார்க்க: முதலாம் பாகம்: நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!) நுபிய மன்னர்கள், இடுப்பில் புலித்தோலை உடுத்திக் கொள்வது வழக்கம். சிவபெருமான் போன்று அவர்களும், புலித் தோல் ஆடையினால், இடுப்பையும், மார்பையும் மூடி உடுத்தி இருப்பார்கள். பிற்காலத்தில், ஆப்பிரிக்க நாடுகளை ஆண்ட மன்னர்கள், தமது ஆடைக்கு மேலே புலித்தோலை உடுத்திக் கொள்ளும் சம்பிரதாயத்தை பின்பற்றினார்கள். ஆப்பிரிக்க மன்னர்கள் புலித்தோல் உடுக்கும் சம்பிரதாயம், இருபதாம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருந்தது.

தென் ஆப்பிரிக்காவில், சூளு அரச பரம்பரையை சேர்ந்தவர்கள், விசேட தினங்களில் புலித்தோல் அணிந்தது வருகின்றனர். பண்டைய காலத்தில், நுபியர்களின் சம்பிரதாயத்தை பின்பற்றி, எகிப்திய பாரோ மன்னர்களும் புலித்தோல் அணிந்த படங்கள் காணப்படுகின்றன. பண்டைய ஈராக்கில், அரேபியாவில் வாழ்ந்த மக்களும் கறுப்பினத்தவர்கள் என்பதால், அவர்களது மன்னர்களும் புலித்தோல் ஆடை அணிந்திருப்பதற்கு சாத்தியமுண்டு. அப்படியானால், பிரபலமான நிம்ரூட் மன்னனும் இடுப்பில் புலித்தோல் அணிந்து, மக்கள் முன்  காட்சி தந்திருக்க வேண்டும். அக்காடிய, ஹீபுரு மொழிகளில் "நிம்றி" என்றால், புலி வேட்டையாடும் மக்கள் என்றும் அர்த்தம் உள்ளது. நிம்றி என்ற சொல்லில் இருந்து, நிம்ரூட் என்ற பெயர் வந்திருக்கலாம். இது குறித்து மேலதிக விபரம் தேவைப்படுவோர், Henry Rawlinson (http://en.wikipedia.org/wiki/Sir_Henry_Rawlinson,_1st_Baronet) எழுதிய அகழ்வாராய்ச்சிக் குறிப்புகளை வாசிக்கவும்.

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்

No comments:

Post a Comment