தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 அக்டோபர், 2012

வள்ளலார் இராமலிங்க அடிகள் !!


வள்ளலார் இராமலிங்க அடிகள் பிறந்த நாள் (அக்டோபர் 5, 1823)


இராமலிங்க அடிகள்
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார்.


இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
சன்மார்க்கச் சிந்தனையாளர்

தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

வள்ளலாரின் கொள்கைகள்

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
புலால் உணவு உண்ணக்கூடாது.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
கருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக