கடந்த 2007ம் ஆண்டு நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் போது நிக்கோலஸ் சர்கோசிக்கு லிபியா முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபி தேர்தல் நிதியுதவி செய்ததாக பிரான்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அரேபியா வளைகுடா நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த வருடம் ஏற்பட்ட புரட்சியில், நேட்டோ படைகளால் அந்நாட்டு ஜனாதிபதி முஅம்மர் கடாபி படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு பிரான்ஸ் தேர்தலின் போது நிக்கோலஸ் சர்கோசிக்கு, கடாபி 50 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்கியதாகவும், இந்த நிதியை திருப்பிக் கேட்டு அவரது மகன் சைஃப் அல்-இஸ்லாம் யூரோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் வங்கி மூலமாக வழங்கப்பட்ட நிதி விபரங்களை ஊடகத்திற்கு அளிக்கப் போவதாகவும் இஸ்லாம், சர்கோசிக்கு மிரட்டல் விடுத்தார்.
தற்போது பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் சர்கோசி ஈடுபட்டு வரும் நிலையில், இந்த பிரச்சினை எரிமலையாக உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து பிரெஞ்சு ஊடகம் தெரிவித்துள்ளதாவது, தனக்கு இந்தத் தேர்தல் நிதி பற்றிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், அவை ஒரு நீதிபதியின் புலனாய்வில் தற்போது இருப்பதாகவும் விரைவில் வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளது.
மேலும் இந்த ஆவணங்களில் கடாபி கொடுத்த நிதியின் அளவு, கொடுக்கப்பட்ட இடம், கொடுத்த நாள் ஆகிய விபரங்கள் துல்லியமாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் சர்கோசி, லிபியாவின் ஜனாதிபதியும், தம் நண்பருமான கடாபியை பாரிசுக்கு அழைத்து தன் ஜனாதிபதி மாளிகையான எலிசீ அரண்மனைக்கு மிக அருகில் அரேபிய முறையில் அழகிய கூடாரமிட்டு ஆடம்பரமாகத் தங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக