தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 மார்ச், 2012

இலங்கைக்கு எதிராக ஒன்றுபட்ட தமிழகம் -வரலாற்று அதிசயம்,நிலைக்குமா??


ஜெயலலிதா: (அதிமுக)
ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அந்த நாட்டுக்கு எதிராக இந்தியா செயல்படாது’ என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. இந்த நடவடிக்கை, இலங்கைக்கு நேரடியான ஆதரவை இந்தியா தருவது போலாகி விடும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கருணாநிதி: ( திமுக)
இறுதிப் போரின்போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை மத்தியில் ஆட்சியில் இருப்போர் ஒரு முறை பார்த்தாலே, தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படும் இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

விஜயகாந்த்: (தேதிமுக)
அமெரிக்காவின் தீர்மானம் முழுஅளவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், இதை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள இனவெறி அரசை உலக அரங்கின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும். நடுநிலை வகிப்பதையோ, தீர்மானத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதையோ இந்தியா மேற்கொண்டால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வைகோ: (மதிமுக)
இலங்கைக்கு ஆயுதங்களும், ஆயிரக்கணக்கான கோடிப் பணமும் அள்ளிக் கொடுத்து முப்படைத் தளபதிகளை அனுப்பியும் யுத்தத்தை நடத்தியது இந்தியா. இந்திய அரசின் துரோகம் அம்பலத்துக்கு வந்துவிட்டது. இதற்கு மேலும், ஐ.நா-வின் கவுன்சிலில் தமிழர்களுக்குத் துரோகம் விளைவித்தால், எந்தக் காலத்திலும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) :
யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. இதுபற்றி மத்திய அரசும் இலங்கையை நிர்ப்பந்திக்கவில்லை. மனித உரிமை மீறல்கள் மீது, நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேசத் தரத்திலான விசாரணை நடத்தப்பட்டு, போர்க் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராமதாஸ்: (பாமக)
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்):
இலங்கையின் குற்றத்தை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மகிந்த ராஜபக்சவை இன அழிப்புப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

திருமாவளவன்: (விடுதலைச்சிறுத்தைகள்)
மிகவும் நீர்த்துப்போன இந்தத் தீர்மானத்தைக்கூட இந்திய அரசு ஆதரிக்காமல், வழக்கம்போல சிங்கள இனவெறியர்களுக்குத் துணை போனால், அது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஞானதேசிகன் (காங்கிரஸ்):
இலங்கையில் கால் ஊன்றுவது குறித்து சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு நடந்து வரும் போட்டி காரணமாகவே, இந்தத் தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்திருக்கிறது. இருந்தாலும், இலங்கையில் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்து இருக்கின்றன என்பதால், அமெரிக்கா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.

பழ.நெடுமாறன்: (தமிழர் இயக்கம்)
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா நடந்து கொள்ள வேண்டும்.

சீமான்: (நாம் தமிழர் கட்சி)
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தயங்குவதற்குக் காரணம்... 'இந்தப் போரை நடத்தியதே நீங்கள்தானே?’ என்று ராஜபக்ச கேட்பார் என்பதுதான்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பி.ஜே.பி):
இலங்கையில் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களுக்கு, மத்திய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உதவி செய்தது போலவே, ஐ.நா-விலும் உதவி செய்யும் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. இலங்கைக்கு ஆதரவு நிலையை மத்திய அரசு எடுத்தால், ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று தி.மு.க. அறிவிக்க வேண்டும்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி):
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல் பட்டால், அது இனத்துரோகம். எனவே, அமெரிக்க தீர்மானத்தை காங்கிரஸ் அரசு வழி மொழிய வேண்டும்.

இப்படி தமிழகத்தில் தேசிய, திராவிட, கம்யூனிஸ, தமிழினக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துள்ளது. சோனியாவும் மன்மோகனும் என்ன செய்யப்போகிறார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக