தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூலை, 2015

பௌத்தமும் உபகண்டமும்



மறைக்கப்படும் தமிழர்கள் வரலாறுகளை நினைவு படுத்தவும் புதிய இளையவர்கள் அறிந்து கொள்ளவும் தொடர்ந்து வரலாற்றுக் குறிப்புகளை தொடர்ச்சியாக எனது முகநூலில் தருவது என எண்ணியுள்ளேன். எனது வரலாற்று முதற்குறிப்பாக பூம்புகார் பற்றிய தகவல்களைத் தேடித்தந்துள்ளேன். இது எனது இரண்டாவது குறிப்பு.

இது தொடரும்
நோர்வே நக்கீரா:- வரலாற்றும் குறிப்பு 2:-

பௌத்தமும் உபகண்டமும்
தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர். பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின. இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன.
எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. இல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து.
இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே. அவர்களுக்கு முன்பே அதாவது சக்கரவர்த்தி அசோகர் காலத்திலேயே பௌத்தமும் சமணமும் தமிழகத்துக்கு அறிமுகமாகி இருந்தாலும், இவர்கள் மூலமாகவே தமிழகத்துக்குள் பௌத்த சமண மதங்கள் ஆழமாக ஊடுருவின. தமிழர் பண்பாட்டை பாதித்தன. அப்படியானால் இதற்கு முன் எந்த மதமும் தமிழகம் வந்ததில்லையா?
வந்திருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது. மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன.
பௌத்தமும் சமணமும் அப்படிப் பரவக் காரணம் என்ன? மக்கள் தொண்டு. புத்த, சமண துறவிகள் தமிழகமெங்கும் பரவினர். தீண்டாமை களைந்தனர். பிறரை/பிறவற்றை இம்சிக்காத அவர்களது எளிமை மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர். சுருக்கமாகச் சொன்னால், பௌத்தமும் சமணமும் சாமானியர்களையும் அறிவில் சிறந்தோரையும் ஈர்த்தன. இவ்விரு மதங்களிலும் மக்கள் திரள் திரளாக இணைந்தனர். காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது. மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிருந்தும் பயணிகள் இங்கு வரலாயினர். தமிழகத்தில் பௌத்தம் தழைத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக