தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

திருமலை ஏழுமலையானின் மகிமை ரகசியம் மற்றும் வினோத வழக்கங்கள்!


திருப்பதி மூலவர் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் அடங்கியுள்ளன. அந்த சிலை 250 கோடி ஆண்டுகளுக்கு முந்திய பழமையான ஒரு அபூர்வ பாறையிலிருந்து வடிக்கப்பட்டது. 
திருப்பதி கோயிலின் வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், மகிமைகள் பற்றிய பல விஷயங்கள் அங்கு அடிக்கடி சென்றுவரும் பக்தர்களிலும் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட அரிய தகவல்களின் தொகுப்புதான் இந்த கட்டுரை.
கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ’சிலாதோரணம்’ என்ற பாறைகள் உள்ளன. இதன் வயது 250 கோடி. உலகிலேயே இங்கு மட்டும்தான் இந்த பாறைகள் இருக்கிறது. இந்த பாறையும் திருமலை மூலவர் சிலையும் ஒரே தன்மையானது.
பச்சைக்கற்பூரம் ஒரு அமில தன்மையுடைய ரசாயனம் அதை சாதாரண பாறைக்கல்லில் தடவினால் பாறை அரிக்கப்படும் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணம் பாறையில் தடவினால் எதுவும் ஆவதில்லை. திருமலை மூலவர் சிலைக்கு தினமும் பச்சைக்கற்பூரம் சார்த்தப்பட்டாலும் ஒன்றும் ஆகாமல் இருப்பது இந்த சிலாதோரண பாறை மகிமையே!
எந்த சிலையிலும் உளியால் செதுக்கப்பட்ட தடங்கள் இருக்கும் அப்படி எதுவும் இல்லாமல் நுட்பமான வேலைப்பாடுகளால் மெருகேற்றப்பட்டுள்ளது. மேலும் சிலையில் அணியப்பட்டுள்ள நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் பாலிஷ் போட்டதுபோல பளபளப்பாக இருக்கின்றன.
ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. 3000 அடி உயரத்தில் உள்ள குளிர் பிரதேசத்தில்தான் சிலை உள்ளது.
அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்தாலும் சிலை வெப்பமாகவே உள்ளது. சிலையின் வியர்வை பீதாம்பரத்தால் ஒற்றி எடுக்கப்படுகிறது. அபிஷேகத்துக்கு முன்னால் நகைகளை கழற்றும்போதும் நகைகள் சூடாக கொதிக்கின்றன.
அம்பாள், விஷ்ணு, சிவன் ஒன்றே:
கர்ப்பக்கிரக மூலவர் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும் இரண்டு நாட்கள் விஷ்ணுவாகவும் ஒரு நாள் சிவனாகவும் பாவித்து மந்திரங்கள் அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்படுகிறது.
ஏழுமலையானின் தல விருட்சகம் புளியமரம்.
ஏழுமலையானுக்கு படையல்:
திருப்பதி திருக்கோயில் சமையல் கூடம் மிகப்பெரியது. அங்கு பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம் அப்பம், போளி, மெளகாரம், லட்டு, ரபாயாசம், தோசை, ரவைகேசரி, முந்திரிப்பருப்பு கேசரி, பாதாம்பருப்பு கேசரி அனைத்தும் தயாரிக்கப்படுகிறது.
ஆனால், ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்கி அதில் தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியத்திற்காக கர்ப்பக்கிரகத்துக்குள் குலசேகரப்படியை தாண்டி செல்லும் வேறு எந்த உணவு மட்டுமல்ல, வைரம், வைடூரியம் தங்கப்பாத்திரங்கள் உட்பட எதுவும் உள்ளே செல்வதில்லை.
ஏழுமலையானுக்கு படைத்த தயிர்சாதமும் மண்சட்டியும் கிடைத்தால் பெரிய பாக்கியமாகும்.
ஏழுமலையான் உடைகள்:
ஏழுமலையான் உடை 21 முழம் நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டு பீதம்பரம். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமே வஸ்திரம் சாத்துவார்கள். இது கடையில் வாங்க முடியாது தேவஸ்தானத்திலே பணம்கொடுத்து சாத்த வேண்டும்.
மேல்சாத்து வஸ்திரத்துக்கு ரூ.12500 கொடுத்து மூன்று வருடம் காத்திருக்க வேண்டும். உள்சாத்து வஸ்திரத்துக்கு 20 ஆயிரம் கொடுத்து 10 வருடம் காத்திருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அரசு சீர்வரிசை வஸ்திரமும் அங்கு சாத்தப்படுகிறது.
வெளிநாட்டு அபிஷேக பொருட்கள்:
அபிஷேகத்திற்குரிய குங்குமப்பூ, ஸ்பெயின் மற்றும் நேபாளத்திலிருந்தும் கஸ்தூரி சீனாவிலிருந்தும் புனுகு பாரிஸிலிருந்தும் வரவழைக்கப்பட்டு தங்கதாம்பலத்தில் சந்தனத்தில் கரைக்கப்படுகிறது.
51 வட்டில் பாலபிஷேகம் நடத்த ஒரு லட்சம் செலவாகிறது. அதிகாலை 4.30 லிருந்து 5.30 வரையில் அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகத்தின் போது ஏழுமலையானின் மூன்றாவது கண் திறப்பதாக ஐதீகம். அபிஷேக நீர், குழாய் மூலமாக புஷ்கரணியில் கலக்கிறது. அதனால், புனிதநீராக கருதப்படுகிறது.
ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமிலிருந்து பதப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் வாங்கி விமானத்தில் அனுப்பிவைக்கப்படுகிறது.
மேலும் சீனாவிலிருந்து சூடம், அகில் சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருள்கள் வருகிறது.
ஏழுமலையான் நகைகள்:
ஏழுமலையானின் நகைகள் மதிப்பு ரூ.1000 கோடி, இந்த நகைகள் வைத்துக்கொள்ள இடம் இல்லாமல் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது.
ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. சூரிய கடாரி 5 கிலோ, பாதக்கவசம் 375 கிலோ. உலகில் எங்கும் இல்லாத ஒற்றைக்கல் நீலம் மதிப்பு ரூ. 100 கோடி.
மன்னர்கள் காணிக்கை:
ராஜேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் போன்ற மன்னர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையும் செலுத்தி அறக்கட்டளையும் நடத்தியுள்ளனர். இது கல்வெட்டுகளிலும் சேப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. அதில் 236 கல்வெட்டுகள் பல்லவ, சோழ, பாண்டிய காலத்தவை.
இடிக்கப்பட்ட பத்மாவதி கோயில்:
கி.பி. 1543 ம் ஆண்டில் விஜயநகர மன்னர் அச்சுதராயர் பத்மாவதி அம்மாளுக்கு திருப்பதியில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார். அந்த கோயில் 1764 ல் நிஜாம் தௌலா தலைமையில் வந்த முஸ்லீம் படைகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது. அந்த இடிபாடுகள் இன்னும் உள்ளன.
உண்டியல் வசூலில் இந்தியாவில் முதல் கோயிலாக திகழும் திருப்பதி, பக்தர்களை திருப்திப்படுத்தாமல் இருக்குமானால் அது நீடிக்க வாய்ப்பில்லை. திருப்தியை தருவது சிலையின் மகிமையா? மக்களின் நம்பிக்கையா? என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
-மருசரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக