தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மூதறிஞர்,ஒப்பற்ற தலைவர் செல்வநாயகத்தின் 39வது நினைவு நாள் இன்று (26-04-2016)



தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடிய மூதறிஞர்,ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 39வது நினைவு நாள் இன்று (26-04-2016)
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் தந்தை செல்வா எனப் பல இலங்கைத் தமிழர்களால் குறிப்பிடப்படுபவர். அவர் இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவராவார்.செல்வநாயகம் சிலை
ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்தது அவரது தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார்.

வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பளையைச் சேர்ந்த தந்தை செல்வநாயகம் மலேசியாவில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் படித்தவர். கொழும்பில் உள்ள புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே பதவி விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றார். தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக