திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன.
.
திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது
.
இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே
வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!
.......
மந்திரத் திருப்புகழின் பொருள்
"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"
.
தேவார முதலிகளால் பாடப்படாத முருகக் கடவுள்மீது பண்கனிந்த பாடல்களைப் பாடிய பெருமை அருணகிரிநாதரையே சாரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக