உப்பு நீரில் விழக்கெரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துடன் தொடர்புடைய, தொன்மைவாய்ந்த பனிச்சை மரத்திற்கு அருகாமையில் புதிய வேலியொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சுமத்தினர்.
கோவலன் கண்ணகியின் வரலாற்றை சுமந்த காப்பியக் கதையில் கண்ணகி மதுரையினை எரித்துவிட்டு பாத்தாவது இடமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் இயற்கையின் எழில்கொஞ்சும் ஒரு பக்கம் நந்திக்கடல் கடல் நீரேரியம் மறுபக்கம் வயலும் வயல்சார்ந்த இடங்களுமாகக் காட்சிதரும் வற்றாப்பளைக் கிராமத்தில் வந்தமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றாள்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தில் வரும் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு திருவிழா எடுத்து வருகின்றார்கள். அதற்கு முதல் இரண்டு திங்கட்கிழமையில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் ஏழுவீடுகளில் பாக்கு எடுக்கப்பட்டு காட்டாவிநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு பூசைகள் நடைபெற்று அடுத்த திங்கட் கிழமை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுப்பதற்காக தீர்த்தக்குடத்துடன் பக்தர்கள் முல்லைத்தீவு தீர்த்தக்கரைக்கு செல்வார்கள்.
அவர்கள் அங்குள்ள கடற்கரையில் பறைஅடிக்க தீர்த்தக்குடத்துடன் கடலில் இறங்கும் பூசகர்,பறையின் ஓசையில் அலைகள் பொங்கிவரும் அந்த அலைகளில் மூழ்கி தீர்த்தம் எடுத்து வருவார்கள் வரும் வழிகளில் எல்லாம் தீர்த்த குடத்திற்கு சிதறு தேங்காய்அடித்து மக்கள் வழிபடுவார்கள்.
இவ்வாறு எடுத்துவரப்படும் தீர்த்தம் முள்ளிவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு ஏழுநாட்கள் விழக்கெரிக்கப்பட்டு படையல் வைத்து பூசை நடத்துவார்கள். இதன்போது கண்ணகியின் வரலாறு ஏடுகளில்இருந்து படிக்கப்படும்.
ஏழாவது நாள் ஞாயிற்றுக்கிழமை காட்டாவிநாயகர் ஆலயத்தில் பெரிய பொங்கல் இடம்பெற்று விழக்கு எரிக்கப்பட்ட தீர்த்தத்துடன் பொங்கல்பூசைகளுக்கா மறுநாள் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி செல்வார்கள்.
அன்றுதான் வைகாவி விசாகம் முழு பௌர்ணமி அன்று அம்மனுக்கு பொங்கல் பொங்கி சிறப்பாக மக்கள் தங்கள் நேர்திக்கடன்களை முடிப்பார்கள்.
இந்த அம்மன் ஆலயத்திற்கும் பனிச்சை மரத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால் பனிச்சை மரம் அதிகமாக காணப்படும் வற்றாப்பளை அம்மன் ஆலய வளாகத்தில் வைகாசி கொட்டும் வெய்யிலிலும் மக்கள் ஆற அமர்வதற்கு அங்கு இவ் மரங்களே நிழல் கொடுக்கின்றன இதற்கு வரலாற்று கதையும் ஒன்று உள்ளது.
வெள்ளைக்காரன் ஆட்சிக்காலத்தில் இந்த பகுதியில் இருந்த அம்மனை குதிரையில் சென்ற வெள்ளைக்காரர்கள் ஏழனம் செய்ய அம்மன் அருளால் வெள்ளைக்காரர்கள் மீது பனிச்சங்காய்கள் வீழத்தொடங்க வெள்ளைக்காரன் குதிரைகளுடன் ஓடியதாக சுருக்கமான வரலாறு அங்கு இப்போதும் உண்டு.
இப்படிப்பட்ட பனிச்சை மரம்தான் வற்றாப்பளை அம்மனின் அருளினை சொல்லி நிக்கின்றது. இதற்குத்தான் இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது….. ஏ 34 வீதியின் வற்றாப்பளை சந்தியிலுள்ள இந்த பனிச்சை மரம் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாற்றுடன் தொடர்புபட்டுள்ளது.
இந்த மரத்தின் கிளையொன்று கடந்த வருடம் செப்டம்பர் மாதமளவில் சிலரால் வெட்டப்பட்டதை அடுத்து, மரத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் தீர்மானித்திருந்தனர். இதற்கமைய, மரத்தை சுற்றி மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அடையாளம் தெரியாத சிலர் அத்திவாரத்தை சிதைத்ததுடன், இந்த சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, தொன்மைவாய்ந்த பனிச்சை மரத்திற்கு அருகிலுள்ள காணியின் உரிமையாளர் குறித்த கட்டுமானப் பணிகளுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறாயினும், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதியுடன் ஆலய நிர்வாகத்தினர் இந்த கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதால், அதனைத் தடுக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்ததாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், நேற்றிரவு குறித்த காணியின் உரிமையாளர் பனிச்சை மரத்திற்கு அருகில் புதிய வேலியொன்றை நிர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக