மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத
விஷயம்... காதல். கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து...
லேட்டஸ்ட் இணையதளங்கள் வரை காதல் எங்கேயும் இடம் பிடித்திருக்கிறது.
இலக்கியம், புராணங்கள், இசை, ஓவியம், சிற்பம் என்று காதலைப் பற்றிப் பேசாத கலைகளே இல்லை.
காதல், நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது.
பழைய குடிசையில் வாழும் ஏழை விவசாயிக்கும் காதல் உண்டு.
அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ், ஜென்னி -
மார்க்ஸ் என்று புகழ் பெற்ற ஜோடிகள் சரித்திரத்தில் இருந்தாலும், பாடப்படாத
காவிய காதல்கள் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன.
காதல் என்பதற்கு திட்டவட்டமான விளக்கமே கிடையாது.
மனிதனின் ஆதார இனப்பெருக்கத்துக்காக ஆண் - பெண்ணிடையே இயற்கை தோற்றுவிக்கும் இனக்கவர்ச்சிதான்... காதல்.
அறிவியல், காதலைப் பற்றி என்ன சொல்கிறது? ஒரு ஆணும் பெண்ணும்
சந்திக்கும்போது காதல் தோன்றுவதற்கு முன்னால் அட்ரினலின் போன்ற ரகளையான
நரம்பு வழி ரசாயனம், ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது (இதைத்தான்
'ஒரு வித்தியாசமான ஃபீலிங் என்கிறார்கள் காதலர்கள்). ஃபினைல்தைலமைன்
என்கிற ரசாயனம் (காதலர்களின் ஃபேவரைட்டான சாக்லேட்டில் இது நிறைய உண்டு),
அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகிறது.
இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும்
கைகோத்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து, இதயம் ஏகாந்தமாக உணர்ந்து,
படபடவென்று அடித்துக்கொள்கிறது. ஆண் - பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து
நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது.
இதெல்லாம் அறிவியல் பார்வை.
இதைத் தாண்டி இலக்கியப்பூர்வமான, கவிதைத்தனமான, இதிகாசத்தனமான காதல்கள் உண்டு.
எந்தவித விளம்பரமும் இல்லாத சாதாரண மனிதர்களின் காதல்தான் உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!
நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும்போது உங்களால் தூங்க முடியாது.
ஏனென்றால், காதலின் நிஜம் என்பது நீங்கள் தூக்கத்தில் காணக்கூடிய
கனவுகளைவிட சுகமானது, ஆச்சரியமானது!
காதலுக்கு இனிமையான முடிவு என்பது கிடையாது. ஏனென்றால் காதலுக்கு முடிவு என்பதே கிடையாது!
இப்படி காதலைப் பற்றி எத்தனை எத்தனையோ பார்வைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன!
வாழ்க்கையின் அடிப்படை சூட்சமம் என்னவென்று தெரிகிறதா? ரொமான்ஸ்!
அது இல்லாமல் வாழ்க்கை இல்லை.
அது உங்கள் கண்ணீரில் ஆனந்தத்தை வரவழைக்கும். இதயத்தின் ரத்த ஓட்டத்தைச்
சரிப்படுத்தும். துன்பங்களை விரட்டியடிக்கும் துணிவைத் தரும். தனிமையை
தலைதெறிக்க ஓடவிடும். உங்கள் மனம் மற்றும் உடல் பிரச்னைகளை அற்புத
மருத்துவமாகிக் காப்பாற்றும்.
காதலில்லாத மனித சரித்திரம் இல்லை. இலக்கியம், கலைகள் இல்லை. உலகத்தின் அச்சு சுழல்வதே காதல் என்னும் அச்சாணியில்தான்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக