தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 மே, 2012

ஒரு மனிதஉடம்பு பழுதின்றிச் சரியாக இயங்க வேண்டுமானால்


ஒரு இயந்திரம் பழுதின்றிச் சரியாக இயங்க வேண்டுமானால் அதன் பணிகள் தடையின்றி நடக்கவேண்டுமானால் அது நீண்டகாலம் நல்லபடி இயங்கவேண்டுமானால் அது நல்லபடி பராமரிக்கப்படவேண்டும். அதன் பாகங்கள் வலுவுள்ளதாகவும் தங்குதடையின்றி இயங்கவல்லதாகவும் இருக்கவேண்டும். மனிதஉடம்பு என்கிற இயந்திரமும் அப்படியே 

ஆக ஒட்டு மொத்தமான நமது உடம்பும் அங்க அவயங்களும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்யுமளவு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவை நிலைமாறும் போது உடல்நலம் கெடும். எனவே எல்லா உறுப்புகளும் சீராகச் செயல்பட அந்தந்த உறுப்புகள் பலம் வாய்ந்தவையாகவும் சீராக இயங்கக்கூடிய செயலூக்கம் உடையவையாயும் விளங்க வேண்டும். அதற்காக உடற்பயிற்சி அவசியமாகிறது.


நாம் நமது உடலமைப்பை வயதுக்கும் உடல்வாகுக்கும் ஏற்றபடி சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும் ஒன்றாகத்தான் கருதுகிறோம். ஆனால் ஒவ்வொரு கணமும் எண்ணற்றவை நமது உடலிலிருந்து வெளியேறுவதையும் எண்ணற்றவை உடம்பில் புதிதாகச் சேர்வதையும் சாதாரணமாக நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. அந்த இயக்கத்தில் கோளாறு நேரும்போது அது நோயாக உணரப்படுகிறது. அந்த இயக்கம் முற்றிலும் நின்றுபோகும்போது அதைத்தான் உயிர் போய்விட்டது அல்லது மரணம் நடந்துவிட்டது என்று கூறுகிறோம். எனவே உயிர்வாழ்வது சிறப்பாக இருக்கவேண்டுமென்றால் நோயற்ற வாழ்வு வாழவேண்டுமென்றால் நமது உடம்புக்குள் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத இயக்கங்கள் சிறப்பாக நடக்கவேண்டும். அப்படிச்சிறப்பான உடலியக்கத்தைக் கொண்டிருப்பதும் இல்லாதும் நமது உடலுக்குக் கொடுக்கும் பயிற்சியைப்பொறுத்தே அமையும்.

ஆதிமனிதன் வாழ்வின் ஆதாரமான உணவுக்கே உடல்ரீதியாகப் போராட வேண்டி இருந்ததால் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக இல்லை. அவன் வெய்யிலில் காய்ந்தான் மழையில்நனைந்தான்@ மரக்கிளைகளில் தொங்கினான் உணவின்றிப் பலநாள் பட்டினிகிடந்தான்@ கிடைத்த உணவை அப்டியே உண்டான். அதனால் இயற்கையாகவே மனிதனின் உடலமைப்பு மிக்க வலுவுள்ளதாகவும் எதையும் உண்டு செரிக்கும் குணமுள்ளதாகவும் இருந்தது. அவன் பார்க்க அழகற்றவனாக இருந்தாலும் மிக்க ஆரோக்கியமாக இருந்தான். இயற்கைச் சீற்றங்களும் கொடிய விலங்கினங்களும் கொள்ளைநோய்களும் மருத்துவ வசதி இன்மையும் தவிர அவனுடைய உடல்நலத்தைக் கெடுக்கவல்ல எந்தத் தீயபழக்கங்களும் அவனிடம் இல்லை.

ஆனால் மனிதன் நாகரிகத்தில் முன்னேற முன்னேற அறிவியல் வளர வளர உடலுழைப்பின் தீவிரம் குறைந்துகொண்டே வந்து தற்காலத்தில் உடலுழைப்பை நம்பி வாழ்வது தகுதிக்குறைவான நிலை என்றும் உடலுழைப்பு இல்லாமல் சொகுசான வாழ்வு வாழ்வு வாழ்வதுதான் உயர் தகுதிக்கு உரிய வாழ்வுமுறைஎன்றும் கருதப்படுகின்றது. மிகவும் சொகுசான உணவை உண்டு சொகுசான வாழ்வு வாழ்வதால் அவனுடைய உடம்பும் இயற்கையிலேயே வலுக்குறைந்ததாக ஆகிவிட்டது. ஆனால் வெய்யிலில் காய்வதும் மழையில் நனைவதும். பட்டினிகிடப்பதும் இல்லாத அழகிய உடலமைப்பைக் கொண்ட வாழ்வு வாழ்பவனாக இருக்கிறான். அதனால் நவீன மருத்துவ வசதிகள் மிகுந்திருந்தாலும் அதற்கும் மேல் எண்ணற்ற புதுப்புது நோய்களும் பெருகிவிட்டன. அதனைத் தொடர்ந்து மனிதனின் வாழ்வில் உடற்பயிற்சி என்பது அவசியக் கடமையாகிவிட்டது.

உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடல் உறுதிப்படுகிறது. சீராகத் தொடர்ந்து இயங்கி உறுப்புக்கள் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்ய ஊக்குவிக்கப் படுகிறது. உடற்பயிற்சி இல்லாவிட்டால் தசையமைப்புகள் தேவைக்கு மாறான விதத்தில் வளர்ந்து செயல்பாட்டுக்குப் பொருத்தமற்றதாக ஆவதோடு தேவையற்ற பழுவையும் உடம்பு பெற்றுவிடும். உடல் பலவீனமும் அடையும். அதுபோலவே இயங்;கும் உறுப்புகளும் வேகமாக செயல்பட இயலாமல் போவதுமட்டும் அல்ல இயல்பான இயக்கமே துன்பமான பணி ஆகிவிடும்.


அதுமட்டுமல்ல நமது உடல் ஆரோக்கியத்துக்குச் சாதகமான அல்லது பாதகமான சூழலில் வாழ்ந்துகொண்டு உள்ளோம். நாம் உண்ணும் உணவும் பருகும்நீரும் சுவாசிக்கும் காற்றும் சுத்தமானவையாக இல்லததுமட்டுமல்ல மாசு பட்டதாகவும் இருக்கிறது. அதுதவிர நாகரிகவளர்ச்சியின் பேராலும் பலருக்கு எல்லாவிதமான உணவும் உண்ணுமளவு வசதி இருப்பதாலும் பலநேரங்களில் தேவையற்றதையும் உண்ணும் பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உடல் ஆரோக்கியமாக இருக்குமளவு உறுப்புக்கள் தமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றதைப் புறக்கணித்து வெளியேற்றும் பணியைச் சிறப்பாகச் செய்யும.; ஆனால் உடல்நலன் கெடும்போது தேவையற்றதை உடல் அனுமதிப்பதோடு தேவையானதைப் பெறும் சக்தியைக்கூட இழக்கிறது. எனவே நோய் ஏற்படுகிறது.

எனவே நாம் அனைவரும் சிறியவர்முதல் பெரியவர் வரை வயதுக்கேற்ப உடலுழைப்பின் தன்மைக்கேற்ப உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. துவண்டுகிடக்கும் துணி தண்ணீரை அதிகமாக உறுஞ்சுகிறது. ஆனால் அதே துணியைக் கயிறுபோல் முறுக்கி வலுவானதாக்கி விட்டால் தண்ணீரை அதிக அளவு உறுஞ்ச முடியாது. அதுபோல் திடமான உடம்பில் தேவையற்றவை நுழைந்து தங்க முடியாது. ஆனால் திடமற்ற உடம்பில் தேவையற்றவை அனைத்தும் எளிதில் குடியேறிவிடும். பின் நோய்களுக்குப் பஞ்சமா என்ன? எனவே முறுக்கப்பட்ட துணியைப்போல திடமான கயிறு போல உடல் நலம் பேணப்பட வேண்டும்.

உடல் நலம் குன்றும் போது உடலமைப்பின் நுண்ணிய பகுதியான உடல் நலத்தை யொட்டியே நலம் பெறும் பகுதியான மனமும் பாதிக்கப்படும். இதை ஒரு பலவானின் நடத்தையையும் பலவீனனுடைய நடத்தையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். முன்னவன் தன்னுடைய தன்னுடைய பேச்சில் கருத்துச்செறிவும் நியாயமும் குறைவாக இருந்தாலும் அல்லது அது இல்லாவிட்டாலும் அதை வெளிப்படுத்துவதில் ஊக்கமுடையவனாக இருப்பான். அவனுடைய சொல்லும் செயலும் கூடுதல் மதிப்புப் பெறும். அதேசமயம் பலவீனனானவன் அவனுடைய பேச்சில் நியாயமிருந்தாலும் கருத்துநிறைந்தவனாக இருந்தாலும். அதை வெளிப்படுத்துவதிலும் பிறரைக் கவரும் விதத்தில் பேச்சாற்றலை வெளிப்படுத்துவதிலும் ஊக்கமற்றவனாக இருப்பான். ஆக அவனுடைய சொல்லும் செயலும் அதற்குண்டான மதிப்புப் பெறாது. மேலும் மனநலம் பாதிக்கப்படும் போது கட்டுப்பாட்டை இழக்கும் உடம்பு மேலும் மேலும் கெட்டு உடலும் உள்ளமுமான மனிதவாழ்வுக்கே இடையூறு ஏற்பட்டு நீண்ட காலம் நலமுடன் வாழவேண்டிய வாழ்வில் குறுகிய காலம் நோயுடன் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

எனவே உடல் நலம் பெற, மனம் நலம் பெற, நீண்ட வாழ்வு வாழ, நமது கடமைகளைச் சிறப்பாகச் செய்ய, இவ்வுலகை மேலும் மேலும் அழகுடையதாக்க, நமது சந்ததிகளுக்கு இன்னும் அற்புதமான உலகை விட்டுச்செல்ல நமது உடல் நலன் பேணல் மிக முக்கியம். அதற்கு உடற்பயிற்சி தவறாத கடமையாக இருக்க வேண்டும்.

நன்றி, ஐயா Subash Krishnasamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக