ஐயனாரும்,ஐயப்பனும் ஒன்றா?
--------------------------
ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
ஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.
காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்
ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.
ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும்.
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
என்னை பொருத்த வரை இரண்டு தெய்வங்களுக்கும்,சற்றே வித்தியாசங்கள் இருந்தாலும்,இரண்டு தெய்வங்களால் கிடைக்கும் அருள் ஒன்றுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக