சோற்றுக்கற்றாழை:
தாவரவியல் பெயர்: Aloe typica = Aloe deltoideodonta
சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை. நமக்கும் அழகுதரும் மூலிகை. சோற்றுக்கற்றாழை = சோறு + கற்றாழை. பஞ்சகாலங்களில் உணவாகப் பயன்படுத்தப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குமரி என்று சொல்லப்படும் சோற்றுக்கற்றாழையை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பத்தை சாப்பிட்டு வருவதால் வியாதிகள் குணமாகும். சோற்றுக்கற்றாழை எனத் தமிழிலும் அலோவேரா(aloe vera) என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் அருமருந்து, பெருமருந்து, மானிடத்துக்கே அது ஒரு அரிய விருந்து.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பலவகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.
சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின்
சில குறிப்பான அணுக்கூறுகள் உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில ரிசெப்டர்கள் (விரும்பி வரவேற்கும்) மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகிறது. நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றன. இதனால் உடல் பலவிதத்தில் சுத்திகரீக்கப்படுகிறது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றன.
மருத்துவக் குணங்கள்
1. கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும்.
2. உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
3. கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
4. இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
5. கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்
6. காலை வெறும் வயிற்றில் சிறு துண்டுகள் தினம் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும்; உடல் பருக்காமலே.பலகீனம் மறையும் தாதுவிருத்தி ஏற்படும். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள்கூட இதை சாப்பிட்டு வந்தால் நாளடைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம்.
7. சோற்றுக்கற்றாழை + வெள்ளைப்பூண்டு + பனங்கற்கண்டு + எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து [தோராயமான அளவுகளில்] காய்ச்சி வடித்து எண்ணெயை குடல்; வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும்.
8. கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற சதையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
9. வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.
10. இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
11. சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
12. சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
13. வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
14. சோற்றுக் கற்றாழையின் சோறு 7முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச்சாறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறுந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும். நீடித்த மலச்சிக்கலைப் போக்குவதில் மிகவும் சிறப்பானது.
15. செரிமான சக்தியை அதிகரிக்கும். பசியை உண்டாக்கும்.
16. இதுமட்டும் அல்லாமல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
17. இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
18. எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும். வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.
19. வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக