தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 2 ஏப்ரல், 2012

கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே.

கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே.
எவ்வளவு அருமையான வார்த்தை !

ஆண்டுதோறும் பட்டியலின மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிறப்பு உட்கூறு திட்டத்தின்படி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 2009-10 ல் ரூ.2615 கோடி, 2010-11 ல் ரூ.3828 கோடி, 2011-12 ல் ரூ.5007 கோடி, இந்த ஆண்டு 2012-13க்கு ரூ.6018 கோடி ! இந்த தொகையை முறையாக அனைத்து பட்டியலின மக்களுக்காக செலவு செய்திருந்தாலே இந்நேரம் நாம் எல்லோரும் பெரும் பணக்காரர்களாக மாறிப்போயிருப்போம். ஆனால் இந்த திராவிடத்தை சொல்லும் அரசுகள் செய்தது என்ன தெரியுமா? இவைகள் அறிவிக்கும் எல்லா இலவச கவர்ச்சி திட்டங்களுக்கும் இந்த சிறப்பு உட்கூறு திட்டத்தின் தொகையையே எடுத்து செலவு செய்து வருகிறது. சமத்துவபுரம், அனைவருக்கும் கல்வி திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், வீட்டு வசதி திட்டம், வண்ணத்தொலைக்காட்சி திட்டம், வேட்டி சேலை திட்டம், அனைத்து வேலையில்லா இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை, திருமண உதவித்திட்டம், இலவச ஆடு மாடு, இலவச வீடு, இந்திரா பசுங்குடில், இலவச கணிணி, இலவச செருப்பு, முத்துலட்சுமி மகப்பேறு, 108 ஆம்புலன்ஸ், போன்ற அனைத்து திட்டங்களுக்கும் இந்த சிறப்பு உட்கூறு திட்டத்தின் தொகையையே எடுத்து செலவு செய்து வருகிறது என்று நமது இயக்கங்களின் ஆய்வறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நிதி எவ்வாறு கையாளப்படவேண்டும்-இந்த சிறப்பு உட்கூறு திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படவேண்டும் என்று மைய அரசின் திட்டத்துறையின் மூலம் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தலித் மக்களின் எதிகால உயர்வுக்கான உயர்கல்வி, தொழிற்பயிற்சி, தொழில் முனைவோரை வளர்த்தெடுத்தல், வேலைவாய்ப்புக்களைப் பெருக்குதல் போன்றவைகளுக்காக திட்டமிடப்பட்டு இந்த நிதி செலவு செய்யப்பட வேண்டும். ஆனாலும் இந்த விதிகள் இந்த இலவச அரசுகளால் கடைபிடிக்கப்படுவதில்லை. எல்லா ஏழைகளுக்குமான வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் தலித் மக்களை ஏழைகள் பட்டியலில் சேர்த்து சிறப்புக்கூறு நிதியை அதில் சேர்த்து பொத்தாம் பொதுவாக அனைவருக்கும் வாரி இறைப்பது நெறிமுறை மீறிய செயலாகும்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டைமட்டும் கட்டாயமாக போடவேண்டும் அந்த கடமையைமட்டும் எல்லா தலித் மக்களும் கட்டாயமாக செய்ய வேண்டும். ஆனால் அதனால் கிடைக்கும் பலனை மட்டும் சிறிதளவும் எதிர்பார்க்கக்கூடாது என்பது பகவத் கீதை சொல்லும் 'புனித' வாசகம் நமக்காகவே எழுதப்பட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக