தமிழர்களின் வாழ்வியல், இயற்கையையும், ஒழுக்கத்தையும், மொழி மேன்மையையும் கொண்டது. எவ்வினத்தையும் விட தமிழினம் பிற இனங்களினபால் என்றும் வேற்றுமை காட்டியதேயில்லை.
அன்புத் தமிழ் உறவுகளே! வணக்கம்.
தமிழர்களின் வாழ்வியல், இயற்கையையும், ஒழுக்கத்தையும், மொழி மேன்மையையும் கொண்டது. எவ்வினத்தையும் விட தமிழினம் பிற இனங்களினபால் என்றும் வேற்றுமை காட்டியதேயில்லை. வந்தாரை வாழவைத்த ஒரு இனம், இன்று பலவாறான காரணிகளால் வாழ்வியலின் ஆதாரங்களை இழந்து அல்லது பிடுங்கப்பட்ட துயரங்களை சுமந்து கொண்டு தங்களின் ஊடேயும் தொடர்புகலற்று, உலகம் முழுதும் பரந்து, வேரற்ற மரத்தின் நிலையில் வாழ்ந்து வருகின்றது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு தேசங்களுக்கு அடிமைகளாயும் அல்லது வாழ்வியலின் அடிப்படையைத் தேடியும் சென்ற தமிழர்கள் அங்கேயே தங்கி அந்த தேசங்களின் குடிமகன்களாகி விட்டனர். மக்களாட்சியின் பெரும்பாண்மை எண்ணிக்கை பெறுமதிக் காரணமாக, தங்கள் மீது செலுத்தப்பட்ட மேலாண்மையைத் தொடர்ந்து, திட்டமிட்டு இரண்டாந்தர குடிகளாக்கப்பட்டு, நிலவுடமை பறிக்கப்பட்டு ஏதிலிகளாய் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்ற வகையினர்.
இவர்களும் ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாய் தாயக மண்ணில் கால் பதிய முடியாது போயுள்ளவர்கள். பலருக்கு வாழ்வளிக்கும் தேசங்கள் இன்று இரண்டாவது தாயகங்களாகும் நிலை. எனவே இவர்கள் இருசாராரும் தற்போதைக்கு தங்களின் தாயக மண்ணில் காலை ஊன்றுவது என்பது எளிதான காரியமில்லை. இவர்கள் வாழும் தேசங்கள்தான் வெவ்வேறானவை ஆனாலும் இனத்தால் தமிழர்கள். இவர்களுக்கு இன்றியமையாத அவசியத் தேவையெல்லாம் தங்கள் மொழியினூடே ஒருங்கிணைந்த சமச்சீர்க் கல்வியொன்றினை உருவாக்கி தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
1974ல் துவங்கி 64நாடுகளில் காணப்படும் உலகளாவிய இயக்கமாக உள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இன்று உலக முழுதுமான ஒரு தமிழியக்கம் ஒன்று உண்டு என்றால் அது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தான். பல்வேறு தேசங்களின் மூலை முடுக்குகளில் அடையாளமே தெரியாமல், ஆதரவற்று வாழும் பல நூறாயிரம் தமிழர்கள், மொழியை இழந்து அதனால் தங்கள் பண்பாட்டை அறியாது வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சிகளும் அரசியலும் மாறுபடினும், தமிழ் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களில் முழுமை பெற கல்வி மிக அவசியம். அதுவே அவர்களுக்கு வாழ்வின் அடிப்படைகளை என்றும் மேம்படுத்தும். அதனாலேயே உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தமிழ் படிக்க வாய்ப்பில்லா அனைத்து தமிழர் தலைமுறையினரின் வருங்கால இணைப்புக்கும், மேம்பாட்டுக்குமாக பொதுவானதொரு கல்வித் திட்டத்தை வகுக்க ஒரு சிறப்புக் கல்வி மாநாட்டை நடத்த முன்வந்துள்ளது. இவை அனைத்தும் பன்னாடுகளிலும் கிளைகளையுடைய ஒரு அரசியல் கலப்பற்ற, தொண்டுள்ளம் கொண்ட உலகத் தமிழ்ப் பண்பாடு இயக்கம் போன்ற உலக நிறுவனத்தால் மட்டுமே முடியும்.
இதற்கு முன்பே உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் பலமுறை தமிழகம் நீங்கலான உறைவிடங்களில் உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களுக்காக ஒரு பொதுக் கல்வித் திட்டத்தை தமிழகப் பல்கலைக் கழகங்களுடன் இனைந்து செயல்படுத்த முயற்சித்து வந்தாலும் எளிய முறையில் தமிழைப் படிக்க வாய்ப்பில்லா தமிழ்க் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பாடத் திட்டங்களை இதுவரை வகுக்க இயலவில்லை. அதே போல உயர் கல்வி வாய்ப்பை இழந்திருக்கும் அயலகத் தமிழர்களுக்கும் தமிழக பல்கலைக் கழகங்கள் போன்ற அமைப்புகளின் மூலம் அஞ்சல் வழிக் கல்வித் திட்டங்களையும் செயல் படுத்த வேண்டியத் தேவையுமுள்ளது. எனவேதான் உடனடியாக இக்குறைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இக்கல்வி மாநாட்டினை நடத்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமைப் பணிமனை இந்தியக் கிளையின் துணையுடன் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சீரிய முயற்சியால் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பேராதரவைப் பெற்று மொரிசியஸ் அரசின் துணையுடன் அங்கு வாழும் தமிழர்கள் ஓரளவிற்கு தமிழ்க் கல்வியைப் பெற முடிந்தது. சிதறிக் கிடக்கும் தமிழ் இனம் மொழியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓரினம் மொழியினை மறந்தால் எதிரிகள் இன்றியே தானாக அற்றுவிடும் என்பதை அறிவோம். இந்த நிலையில் தமிழ் மொழியினை தொடர்ந்து கற்பிக்க வாய்ப்பில்லா தேசங்களில் வாழும் இளைய தலைமுறை மொழியை இழப்பின் அத்தேசங்களின் மொழிகளில் கலந்து அடையாளமின்றி போகக் கூடிய நிலையினால் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் உறுதியான, அவசரத் தேவையுடன் களத்தில் இறங்கியுள்ளது.
பண்பாட்டின் காரணிகளான மொழி, ஒழுக்கம், விருந்தோம்பல், வீரம், சிறப்பு வழிபாட்டு முறைகள் நிறைந்த வாழ்வியல் நெறி, வரலாற்று அடையாளங்கள் என்பவை போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை முன்னிறுத்தி இம்முடிவு எடுக்கப்படுகிறது. எண் எழுத்து இகழேல். பிச்சைபுகினும் கற்கை நன்றே என்ற கல்வியின் மேன்மை சொற்றொடர்கள் . நயம்பட உரைத்தல், மனித நேயத்தைக் காட்டும் கீழோராயினும் தாழ உரை.-ஏற்பது இகழ்ச்சி- ஈவது விலக்கேல் என்ற அறிவுரைகள் வேறு எம் மொழியிலும் காண முடியாது. தற்போது பண்டைய இலக்கியங்களின் ஆழ்ந்த நன்னெறிகளை அறிய இயலாத நிலையில் நமது இளைய தலை முறையினர் உள்ளனர்.
எனவே உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களை ஒருங்கிணைந்த தமிழ்வழி சமச்சீர்க் கல்வியினை உருவாக்கி அவ்வந்நாட்டு அரசுகளின் துணையுடன் செயல்படுத்துவதன் மூலம் ஒன்றிணைப்பதை இயலக்கூடியதாய் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தீர்மானமாகக் கருதுகிறது. அதன் பொருட்டு உலகெங்கிலும் வாழும் தமிழறிஞர்களையும், கல்வியாளர்களையும் அழைத்து இன்றுள்ள இளையத் தலைமுறையினருக்கு ஏற்றவகையில் எளிய பாடத் திட்டங்களை வகுக்க வரும் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4, 5 ஆம் தேதிகளில் தமிழகத் தலைநகரான சென்னையில் சிறப்பானதொரு கல்வி மாநாட்டினை நடத்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் செயலில் இறங்கியுள்ளது. இம்மாநாடு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக கல்விப் பொறுப்பாளர் திரு.வி.எஸ்.துரைராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைமையகத்தின் நெறிப்படுத்தலுடன் நடைபெறுகிறது.
மாண்பு மிகு செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராய் ஆட்சி புரியும் காரணத்தால், அவர்கள் அனைத்துத் தமிழர்களின் முதல்வராய் கருதப்படும் நிலையில், மறைந்த தமிழக முதல்வர் திரு.எம்.ஜி. ஆர். அவர்கள் எமக்களித்த பேராதரவினைப் போன்று இக்கல்வி மாநாட்டை தலைமை யேற்று துவக்கி வைக்க விழைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். மாண்புமிகு பன்னாட்டுக் கல்வி அமைச்சர்களும், கல்வியில் தேர்ந்த அறிஞர்களும் சென்னையில் கூடுகின்றனர். அரசியலின்றி, பொது நோக்கோடு தமிழின, மொழி அடிப்படையில் தமிழர்களை ஒன்றிணைக்க நாடுகளைக் கடந்து, அந்நாடுகளின் அரசியலையும் கடந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கல்வியாளர்கள் மேற்குறிப்பிட்ட பணிக்கு ஏற்புடைய ஆய்வுரைகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். தலைவர்கள், அறிஞர் பெருமக்கள் தங்களின் வாழ்த்துக்களையும் அளித்தருள வேண்டுகிறோம். இவை மாநாட்டில் வெளியிடப்படும் மலரிலும் இடம் பெரும். மாநாடு வெற்றியடைய தங்கள் மேலாதரவினை வேண்டுகிறோம். நன்றி.வணக்கம். இக்கல்வி மாநாடு பற்றிய தங்களின் மேலான கருத்துக்களையும், அறிவுரைகளையும் வரவேற்கிறோம்.
சிறப்புக் கல்வி மாநாடு நடைபெறும் இடம்: சர்.பிட்டி.தியாகராயர் மண்டபம், கோபதி நாராயண சாலை, தியாகராயநகர், சென்னை.
நாட்கள்: 2012 ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆம் தேதிகள்.
(விரிவான- முறையான அழைப்பிதழ் பின்னர் அனுப்பப்படும்)
(விரிவான- முறையான அழைப்பிதழ் பின்னர் அனுப்பப்படும்)
அன்புடன் தங்கள்,
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பில்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் சார்பில்
(த.கலைமணி)
மாநாட்டுத் தலைவர் &
தலைமை நிர்வாக இயக்குனர்.
இந்தியத் தொடர்புக்கு: Email: imtc1951@yahoo.in Cell: +919445925897
மாநாட்டுத் தலைவர் &
தலைமை நிர்வாக இயக்குனர்.
இந்தியத் தொடர்புக்கு: Email: imtc1951@yahoo.in Cell: +919445925897
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக