தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 ஏப்ரல், 2012

மர்மங்களின் பரமபிதா -- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் !!


மர்மங்களின் பரமபிதா -- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ..
குறிப்புகள் சில , மர்மங்கள் பல 

இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறியச் செய்தவர். இந்தியாவுக்கு என முதல் ராணுவத்தைக் கட்டமைத்தவர். காந்தியை எதிர்த்த காங்கிரஸ் கலகக்காரர். தன் மரணத்தையே மர்மமாக்கியவர். அவரது வாழ்க்கையின் திறந்த பக்கங்களில் இருந்து...

*ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!


*கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்துக்கான நேதாஜியின் முதல் அடி அது!
*லண்டனில் எனக்குக் கிடைத்த ஒரே சந்தோஷம் என்ன தெரியுமா? வெள்ளைக்கார சேவர்கள் எனது ஷீக்களுக்கு பாலீஷ் போட்டுக் கொடுத்துதான். அது ஓர் அற்ப மகிழ்ச்சியை அளித்தது. மற்றபடி வெள்ளையர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியவை எனக்குப் பாடமாக அமைந்தன!”-ஐ.சி.எஸ் தேர்வு எழுத லண்டன் சென்று திரும்பியதும் இப்படிச் சொன்னார் நேதாஜி!
*ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!
*சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!
*குருதியைக் கொடுங்கள். உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்!’ என்று இவர் உரக்கக் கூவிய பிறகுதான் இளைஞர்கள் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க ஆர்வமுடன் முன் வந்தார்கள்!
*நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!’ – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!
*போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்’ என்பது அர்த்தம்!
*ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!
*1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!
*பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!
*ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார் நேதாஜி `இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைகொள்கிறேன்!’ என்று ஹிட்லர் கை குலுக்க, `வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்!’ என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி!
*திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!
* ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!
*இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.`ஆசாத் ஹிந்த்’ என்றால் `சுதந்திர இந்தியா’ என்று பொருள்!
*காந்திக்கும் போஸீக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர். எப்படி சுபாஷ், காந்தியை `தேசப் பிதா’ என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை `தேச பக்தர்களின் பக்தர்’ என்று அழைத்தார்!
*சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
*தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த’.... அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!
*பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!’
*ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். `அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!’ என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி!
*பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!
*1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்!
*டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி,
*சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்’’ என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று!
*1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!
*ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக