தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 பிப்ரவரி, 2012

கண்ணன் - குசேலன் நட்பு!!



கண்ணன் - குசேலன் நட்பு பெரிய குடும்பம் என்பதால் குசேலன் கையில் இருந்த செல்வங்கள் முழுவதும் கரைந்தன. குசேலன் வீட்டில் வறுமை குடி புகுந்தது. அடுத்த வேளை உணவிற்கே வழியில்லாத அவலம் உண்டானது. மனம் நொந்துபோன குசேலனுக்கு மனைவி ஆறுதல் கூறி தேற்றினாள். செல்வந்த நண்பனான கண்ணனின் உதவியை நாடும்படி அவள் ஆலோசனை கூறினாள். ஆனால் குசேலனுக்கு இதில் உடன்பாடு இல்லை. கண்ணனோ மாபெரும் மன்னன். தானோ பரம ஏழை. கண்ணன் இப்போது தன்னை மதிப்பானா என்று குசேலனுக்கு ஐயம். எனினும் பசியால் அழும் குழந்தைகளின் குரல், குசேலனின் முடிவை மாற்றியது. தனது பால்ய நண்பனுக்காக, வீட்டில் கொஞ்சம் மீந்திருந்த அவலை, அழுக்குத் துணியில் முடிந்து கொண்டு கண்ணனை பார்க்கச் சென்றான். வயது எவ்வளவு ஆனாலும் நட்புக்கு வயது உண்டா? குசேலன் எண்ணியதற்கு மாறாக கண்ணன் செயல்பாடுகள் அமைந்திருந்தன. மனைவி ராதையுடன் வாசல்வரை வந்து வரவேற்ற கண்ணன், அவனது பாதத்தை கழுவி நட்பை புனிதமாக்கினான். மாமன்னன் கண்ணன் தன் காலை தூய்மைப்படுத்தியதை எண்ணிப் பூரிந்தான் குசேலன். தனக்கு என்ன வாங்கி வந்தாய் என்று கேட்ட கண்ணனுக்கு, தான் கொண்டு வந்த ஒரு பிடி அவலை கொடுக்க‌த் தயங்கினார். ஆனால், அதனை இன்முகத்துடன் வாங்கி கண்ணனும் ராதையும் சாப்பிட்டனர். தனது நண்பனின் வறுமையை அவனது தோற்றம் கொண்டே உணர்ந்த கண்ணன், தனது கிரீடத்தை குசேலனுக்குச் சூடி, மன்னனாக இருகும்படி கேட்டுக் கொண்டான். ஆனந்தத்தால் திக்குமுக்காடிய குசேலனின் கண்களில் நீர் வழிய, கண்ணனை மார்போடு அணைத்துக் கொண்டான். கண்ணனின் அன்புப் பரிசை உரிமையோடு ஏற்க மறுத்தான் குசேலன். இதையடுத்து தனது நண்பனை அரச மரியாதையோடு வீட்டில் போய் சேர்ப்பிக்கும்படி கண்ணன் உத்தரவிட்டான். அங்கு சென்ற குசேலனுக்கோ, தன் வீட்டையே அடையாளம் காண முடியவில்லை. கண்ணனி‌ன் அருளால் குசேலனின் வறுமை தீர்ந்தது. நட்புக்கு ஏழை, பணக்காரர் வித்தியாசம் கிடையாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இன்றைய உலகம் ஜாதியாலும், மதப் பாகுபாட்டாலும் பிரிந்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி உள்ளது. தூய்மையான நட்பும், சகோதரத்துவமும் இருந்தால் இவற்றுக்கெல்லாம் ஏது இடம்? எனவே, நாகரீக உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் தூய நட்பை வளரச் செய்வோம்! நட்பைப் போற்றுவோம்!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக