
மகா சிவன் ராத்திரிக்கு முதல் நாள்!திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக் கோவிலுக்கு சென்றிருந்தேன் மனைவி மற்றும் உறவுகளுடன்!
நல்ல கூட்டம்.விடுமுறை நாள் என்பதால் இருக்கலாம்.அன்று கடல் அலைகளும் சீற வில்லை.
சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கினால் சுலபமாக ஆண்டவனை சந்திக்கலாம் என்று அங்கு நின்றிருந்த குருக்கள் ஆளாளுக்கு வற்புறுத்தவே அவரிடம் முன்னூறு ரூபாய் வீதம் பத்து டிக்கட் வாங்கப் பட்டது.ஆனால் வி.வி.ஐ.பி.,வி.ஐ.பி.க்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கப் படவில்லை.உதாரணமாக அன்று பாலிமர் தொலைக் காட்சியில் இருந்து 15 பேர் வந்திருந்தனர் .அவர்களுக்கு அந்த தொலைக் காட்சி நிறுவனம் கொடுத்திருந்த கடிதத்தை அங்கிருந்த அதிகாரிகளிடம் காட்டவே பவ்யமாக அவர்களை அழைத்து சென்றனர் .சுவாமி தரிசனம் அவர்களுக்கு மிக சுலபமாகியது.
ஆனால் கட்டணமில்லா பொது சேவை தரிசனத்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் வரிசையில் நிக்கிறார்கள்.கட்டண டிக்கட் வாங்கியவர்களும் தனி வரிசையில் நிற்கிறார்கள்.மொட்டை அடித்த குழந்தைகள் நெருக்கடி காரணமாக அழுகின்றன.எம்.எல்.ஏ.,காவல்துறை அதிகாரிகள்,அறநிலையத் துறை அதிகாரிகள்,பத்திரிகை,மீடியா ஆட்கள் என கடிதம் கொண்டு வருகிறவர்களுக்கு நோகாமல் நொங்கு தின்ன முடிகிறது.ஆண்டவன் தரிசனம் அவர்களுக்கு சுகமாக ,சுலபமாக கிடைக்கிறது.
ஆண்டவன் சந்நிதானத்தில் அனைவரும் சமம் என்பது பொய்தானே?
ஏமாற்றுவேலை தானே?
கூட்ட நெருக்கடி காரணமாக கட்டணம் நிர்ணயிக்கிறோம் என்கிறார்கள்.வசூலுக்கு இப்படி ஒரு காரணம்.ஆனால் நடப்பதென்ன?தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த எல்லா ஆலயங்களிலும் இத்தகைய கொள்ளை நடக்கவே செய்கிறது.பக்தர்களும் உண்மையான பக்தியுடன் அவர்களே வரிசையாக செல்ல முடிவெடுத்தால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாது போய்விடும்.சுலபமாக தரிசம் செய்து வைக்கிறோம் என்று பக்தர்களை அழைத்துக் கொண்டு போகும் குருக்களை ஆலய நிர்வாகம் தடை செய்யுமானால் மக்களுக்கு நல்லது.ஆனால் அவர்களை தடை செய்ய முடியாதாம்.சுப்பிரமணிய சுவாமிக்கும் அவர்களுக்கும் இடையில் 'கனெக்சன்' இருக்கிறதாம்.
இப்படி சொல்லி அந்த தமிழ்க் கடவுளையும் கேவலப் படுத்துகிறார்கள்.
ஆலய வளாகத்தில் உள்ள விடுதிகளில் மது அருந்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகங்கள் இருக்கின்றன.ஆனால் நடப்பதென்னவோ,வேறு!வளாகத்தில் உள்ள விடுதிகளில்தானே சரக்கு அடிக்கக் கூடாது,அங்கு நிறுத்திவைக்கப் படுகிற வேன்களுக்குள் இருந்து கொண்டு சரக்கு அடிக்கலாமா?
மணியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக