தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 18 பிப்ரவரி, 2017

'50 ஜல்லிக்கட்டுல என் கருப்ப யாரும் அடக்குனதில்ல!' - 'முரட்டுக் காளை' வளர்க்கும் 14 வயது அமுதா


'50 ஜல்லிக்கட்டுல என் கருப்ப யாரும் அடக்குனதில்ல!' - 'முரட்டுக் காளை' வளர்க்கும் 14 வயது அமுதா
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாம் குடி மஞ்சுவிரட்டுக்கு தனது காளையை 13 கிலோ மீட்டர் நடந்தே அழைத்து வந்தார் 9-ம் வகுப்பு மாணவி அமுதா. அந்த புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ்அப் என்று வைரல் ஆனது. நாம் போயிருந்தபோது பள்ளிக்குச் சென்றிருந்த அமுதாவுக்காக அவர் வீட்டில் காத்திருந்தோம்.
''அது மாடு இல்லண்ணே.. என் அண்ணன். அவன் பேரு கருப்பு. அவன் கலரும் கருப்பு" என்று சிரித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் அமுதா.
'' என் பேச்சுக்கு மட்டும்தான் கட்டுப்படுவாண்ணே. பயங்கர கோவக்காரன். என்னத்தவர வேற யார் என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்டான். அதனால எங்கின ஜல்லிக்கட்டு நடந்தாலும் சரி, நாந்தேன் அவன கூட்டிட்டு போவனும். நான் மட்டும் சத்தம் போட்டு அடக்கலினா அவனை எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது... புடிக்கவும் முடியாது.
அவனுக்கு நடந்து போறதுதான் புடிக்கும்ண்ணே. வேன்லயோ, லாரியிலேயோ கூட்டிட்டு போகனும்னு சொன்னா கூட வரமாட்டான். அதனால 20 கிலோமீட்டருக்கு உட்பட்ட தூரத்துல உள்ள ஊருக்கெல்லாம் நடந்துதான் கூட்டிட்டு போவேன். அதுக்கும் மேல தூரமா இருந்தா அவன்கிட்ட செல்லமா பேசணும். இல்லாட்டி படித்தியெடுத்திருவான். செல்லமா தாஜா பண்ணி கூப்டுட்டு போகனும்.
எனக்கு ஜல்லிக்கட்டு மாடு புதுசு இல்லண்ணா. நான் தவழ்ற வயசுல இருந்தப்பவே எங்க வீட்டுல மாடு இருந்துச்சு. அதனால எனக்கு பயம்னா என்னனே தெரியாது. நான் கறுப்ப ஜல்லிக்கட்டுக்கு கூட்டி போகும்போது மேலூர் ஜில்லாவே வெறிச்சு பாக்கும்.. நிறைய பேர் ஆச்சர்யமா பாப்பாங்க. இதுல ஆச்சர்யப்படவோ, சிரிக்கவோ என்ன இருக்குது? ஏன் பொண்னுங்க மாடு வளர்க்க முடியாத என்ன?" என்பவரின் பேச்சில் குழந்தைத்தனமே ஓங்கி நிற்கிறது.
''என் கருப்பு இதுவரைக்கும் 50 ஜல்லிக்கட்டுக்கு மேல கலந்துகிட்டு வந்துட்டான். இன்னமும் ஒரு தடவ கூட தோக்கலை. போன எடத்துல எல்லாம் அவனுக்கு வெற்றிதான். கொம்பு வைச்ச சிங்கம் மாதிரி இருக்கிற அவன் கண்ணப் பாத்தாலே எல்லாரும் பயந்து போயிடுவாங்க. இந்த வருசம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு கூட்டிட்டு போக முடியல. அந்த மூணு நாளும் நான் பழனி பாதயாத்திரை போயிட்டேண்ணா. ரொம்ப வருத்தமா இருக்குது. அடுத்த வருஷம் விட்ற மாட்டேன்ல.
ஜல்லிக்கட்டு மாடு வளர்க்குறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குண்ணா. நான் தெனமும் பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடி என் கறுப்ப கொஞ்சிட்டுதான் போவேன். என் கறுப்புக்கு குலாப் ஜாமூன்னா அவளோ இஷ்டம். சோளக்கருது, பருத்திக்கொட்ட, புண்ணாக்கு, வைகோல், புள்ளு சாப்பிடுவான். மத்தபடி எது கொடுத்தாலும் தொடவே மாட்டான்.
எங்க ஊரு கண்மாய்ல தண்ணியும், கிராமம் செழிச்சு இருக்கிறதுனால வைக்கோலும் நெறைய கிடைக்கும். அது போக அவனுக்கு தேவைப்படுறதை லீவு நாள்ல வெவசாய வேலைக்கு போயி சம்பாதிச்சு நாந்தான் வாங்கிக் கொடுப்பேன். எனக்கு ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி. அப்பா கூட பிரச்னையில இருக்கிறதுனால எங்க தாத்தா வீட்டுலதான் இருக்கோம்.
ஜல்லிகட்டுக்கு இருந்த தடைனால மாடு தளர்ந்து போச்சு. அதனால தாத்தா மாட்ட விக்க விலைபேசி 2 லட்ச ரூவா பணம் வாங்கிட்டாரு. கடைசியில மாமாதான் இது அமுதாவோட மாடுனு சொல்லி காப்பாத்தினாரு. 2 லட்சம் இல்ல... 2 கோடி குடுத்தா கூட கறுப்ப யார் கிட்டேயும் கொடுத்திராதீங்க தாத்தானு நான் அவர் காலை புடிச்சுகிட்டு அழுதுட்டேன். இப்ப தாத்தாவும் கறுப்போட ஃபேனாகிட்டாரு. அமுதா ஹேப்பிண்ணா.
என் கருப்புக்கு வெள்ளை சட்டயப் பாத்தா பிடிக்காது. கோவம் பொத்துகிட்டு வரும், சீறிப் பாயும். டேய் சும்மா இருடானு அதட்டுனாதான் அடங்குவான். முன்னலாம் நான் மாடு வளர்க்குறது பாத்து எல்லாரும் 'பொட்டப் புள்ளைக்கு என்னாத்துக்கு இந்த வேல'னு எல்லாரும் பேசுவாங்க. அப்புறமா நான் நெறைய போட்டிக்கு போய் ஜெயிச்சுட்டு வந்ததும் எல்லாம் பெருமையா பாக்குறாங்க. நான் பள்ளிக்கூடத்துல செம பேமஸ்ண்ணா... எல்லாம் என் கருப்பால" என்கிற அமுதாவின் முகத்தில் அத்தனை பிரகாசம்.
கருப்பு - அமுதாவின் அன்பு நிலைக்கட்டும்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக