தென் ஆப்ரிக்காவில் மட்டும் அல்லாமல் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் ஓர் வீரன்.
1918ஆம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி பழங்குடி இனத் தலைவருக்கு மகனாகப் பிறந்த நெல்சன் மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென் ஆப்ரிக்காவை மக்களாட்சியின் ஒளிமயமான பாதைக்குக் கொண்டு சென்ற மகத்தான தலைவர்.
பழங்குடியினத்தில் பிறந்திருந்தாலும், படிப்பறிவைப் பெறுவதில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார் மண்டேலா.
சொந்த மண்ணில் தன்னாட்டு மக்கள் அடிமையாகவும், மிகவும் கேவலமாகவும் நடத்தப்படுவதை கண்ட அவருக்கு சிறுவயதிலேயே சிறுபான்மை ஆங்கிலேயேரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.
பின்னர் இளம்வயதில் வீட்டை விட்டு ஜோஹனெஸ்பர்க் நகருக்கு ஓடிய அவர் வழக்கறிஞரானதோடு, நிறவெறி கொள்கைக்கு எதிராக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் நடத்திவந்த போராட்டத்திலும் தன்னை இணைத்து கொண்டார்.
தீவிரமாக ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் ஈடுபட்டதால் அவர்மீது தேசத்துரோகக் குற்றசாட்டு சுமத்தப்பட்டது.
பின்னர், "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" கட்சியின் தலைவராக முன்னேறிய நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் தீவிரமாக போராடினார்.
1961 ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படையை உருவாக்கியதோடு அதனின் தலைவனாகவும் மண்டேலா உருவெடுத்தார்.
இதையடுத்து, 1961 டிசம்பர் 16ம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலையடுத்து, அரசாங்கம் கெடுபிடி கடுமையானதால் 1961ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார்.
அந்த சமயத்தில் அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டதோடு, இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் அனைத்தும் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது.
பின்னர் 1962 ம் ஆண்டு ஆகஸ்ட் 05ம் திகதி மண்டேலா தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து சென்று காவல்துறை அவரை சுற்றிவளைத்து கைது செய்தது.
அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்று கூறி மண்டேலாவுக்கு 1964ம் ஆண்டு யூன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மண்டேலா ஏறத்தாழ 27 ஆண்டுகள் ஒரு தீவில் உள்ள தனிமைச் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் மிகத்தீவிரமாக எழுந்ததால், 11.2.1990 அன்று 71 வயதி மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
தென் ஆப்ரிக்காவின் முதல் ஜனநாயக தேர்தல் 1994 ஏப்ரல் 27ம் திகதி நடந்தது. அந்த நாளன்று முதல்முறை வாக்குரிமை பெற்ற கருப்பினத்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க அந்த மாபெரும் தேர்தலில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கருப்பின அதிபராக தெரிவு செய்யப்பட்டார்.
ஒரே ஒருமுறை மட்டுமே அதிபர் பதவிவகித்த அவர், 1999ல் தாமாகவே முன்வந்து பதவி விலகினார்.
பின்னர் 2004ம் ஆண்டு, தனது 85 வயதில் பொது வாழ்க்கையில் இருந்து விலகிய மண்டேலா, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்க திட்டமிட்டார்.
இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், 5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார்.
தன் வாழ்வின் கால் நூற்றாண்டை சிறை சுவர்களுக்கு மத்தியில் கழித்தாலும், விடுதலையாகி வெளிவந்த பிறகு வெள்ளையர்களின் மீது எந்த கோபத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் காட்டாமல் இன்முகத்தோடு அனைவரையும் சமமாக மதித்து, அனைவரையும் ஒன்றினைத்து நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட்ட உன்னத தலைவர் தான் நெல்சன் மண்டேலா.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக