சோதிட அடிப்படையில் சனிப் பெயர்ச்சி என்பது மிக முக்கியமானது. கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்களும் கூட சிலவேளைகளில் சனி பற்றி அச்சம் கொள்வது உண்டு.
மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்த பின்னர் சிந்திக்கத் தொடங்கிய பின்னர் வானத்தினை அவதானிக்கத் தொடங்கினான். கிரகங்களை அவதானிக்கத் தொடங்கினான்.
ஒரு கிரகம் தென்படுகின்ற அதே இடத்திற்கு மீண்டும் சுற்றி வந்து சேர எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது எனக் கணக்கிட ஆரம்பித்து அதன்படி சோதிடம் வகுத்து, அதன் மீது நம்பிக்கை வைத்தான்.
அவை மூலமாகவே மனித வாழ்வு இயக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை கொண்டான். இன்று வரை அந்த நம்பிக்கை தொடருகின்றது. இதில் பிரதானமானது சனிக் கிரகமும், சனிப் பெயர்ச்சியுமே ஆகும்.
சனிப் பெயர்ச்சி என்றாலே சாத்திரம் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள், நடுநடுங்கிப் போவார்கள். நம்பிக்கை அற்றவர்களும் கூட என்னதான் இருக்கின்றது என சனியின் பலன்களைப் பார்ப்பது வழக்கம்.
சூரிய மண்டலத்தில் வியாழனுக்கு அடுத்த இடத்தில் உள்ளது சனிக்கிரகம். புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 5 கிரகங்களும் வானில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து செல்லும்.
இந்த 5 கிரகங்களிலும் சனிக் கிரகம் தான் மிக மிக மெதுவாக நகர்ந்து செல்கின்றது என கிரகங்களை அவதானித்த மனிதர்கள் கண்டு பிடித்தனர்.
இதனால் சனி கிரகத்துக்கு சனைச்சர என பெயர் வைத்தனர். இந்தச் சொல் சம்ஸ்கிருத மொழியாகும். மெதுவாகச் செல்கின்றவன் (செல்கின்றது)’ என்பதே இதன் பொருள்.
இந்தப் பெயர் காலப்போக்கில் சனைச்சரன் என மாறிப்போனது. பின்னர் அதுவே சுருக்கமாக சனி என்று அழைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
சனியானது சூரியனை ஒரு தடவை சுற்றி வர 29.5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றது. வியாழனானது சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11.86 ஆண்டுகளை எடுத்துக் கொள்கின்றது.
மேலும் கெப்ளர் (Kepler) எனப்படும் ஜெர்மன் வானவியல் ஆய்வாளர் கூறிய விதிகளின் அடிப்படையில், ஒரு கிரகமானது எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக தொலைவில் அமைந்து உள்ளதோ அதே அளவு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாக நகர்ந்து செல்லும்.
எமது சூரிய மண்டலத்தில் கிரகங்கள் நகர்ந்து செல்லும் பாதை வான்வீதி (zodiac) என அழைக்கப்படுகின்றது. வானவியல் ஆய்வாளர்கள் இதனை 12 இராசிகளாக பிரித்தனர் காரணம் அவதானிக்க இலகுவாக இருப்பதற்காக.
அந்த இராசிகள் அனைத்தும் நட்சத்திரங்களைக் கொண்டவை. இராசிகளின் எல்லைகள் கற்பனையில் உருவாக்கிக் கொண்டதாகும்.
கிரகங்கள் நகரும் போது இயல்பாகவே இடம் மாறிக் கொண்டிருக்கும். ஒரு கிரகம் சிம்ம ராசியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் அக்கிரகத்துக்குப் பின்னால் பல கோடி கிலோ மீட்டர்களுக்கு தொலைவில் சிம்ம ராசி நட்சத்திரங்கள் இருக்கும்.
(சனிப் பெயர்ச்சியைக் காட்டும் படம்) இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் சனிக் கிரகமானது. (அ) என்ற இடத்தில் இருந்து (ஆ) என்ற இடத்திற்கு நகர்ந்துள்ளது. இதுவே சனிப் பெயர்ச்சி எனப்படும்.
அதாவது வானில் கன்யாராசி எனப்படும் பகுதியின் வழியே இதுவரை நகர்ந்து கொண்டிருந்த சனிக் கிரகம் கன்யா ராசியின் (கற்பனையான) எல்லையைக் கடந்து சென்று துலா ராசி வழியே நகரத் தொடங்கியுள்ளது.
இதனையே சனிப் பெயர்ச்சி என கூறுகின்றனர். இதன் மூலம் எந்த கிரகமும் ஒரு ராசியில் ஒரே இடத்தில் நிலையாக நிற்பது இல்லை என்பது வெளிப்படை.
ரோமானியர்களின் புராணத்தில் சனியானது விவசாயத்தின் கடவுளாக வணங்கப்பட்டுள்ளார். இந்திய ஜோசிய முறையின் படி சனி பாபக் கிரகமாகவும், கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது.
சூரியனில் இருந்து 140 கோடி கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள சனியானது. அழகிய வடிவில் வலயங்களையும் 42 சந்திரன்களையும் கொண்டு அமைந்துள்ளது.
இன்று நிலவிலும் கால் பதித்து செவ்வாயிலும் தரையிரங்கி அறிவியலில் புதிய வளர்ச்சி கண்டு நகர்ந்து கொண்டு செல்கின்றது. இதில் சோதிடத்திலும், சாத்திரத்திலும் நம்பிக்கை கொள்வது அவரவர் விருப்பம்.
தனிப்பட்ட மனித வாழ்வில் தலையிட விஞ்ஞானத்திற்கும் சரி, சோதிடத்திற்கும் சரி எந்த உரிமையும் இல்லை. ஆனால் தொட்டது அனைத்திற்கும் சனிக் கிரகத்தை சொல்லியே திட்டித் தீர்ப்பது வேதனையே. “எல்லாம் சனீஸ்வரனின் கொடுமை...,”
http://www.tamilwin.com/special/01/147402?ref=home-feed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக