எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங்கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திறமையுள்ளவராகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்தாலும்கூட அதிர்ஷ்டத்தின்மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
அதிர்ஷ்ட யோகம் என்றால் என்ன? அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது வரும்? அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி வரும்? அதிர்ஷ்டம் பெறக்கூடிய ஜாதகர்களின் கிரகநிலை எப்படி இருக்கும்? என்பது பற்றி ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தியைக் கேட்டோம்.
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதில், அதிர்ஷ்டத்தின் அதிபதிகளான குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு.
நேர்மையான வழியில் அதிர்ஷ்டம் பெறுவதற்கு குரு; குறுக்கு வழியில் அதிர்ஷ்டம் பெறுவதற்கு சுக்கிரன் ஆகியோர் காரகத்துவம் வகிக்கிறார்கள்.
நியாயமான வழியில் கிடைக்கும் உயர்வு, நேர்மையான வழியில் கிடைக்கும் உயர்வு, நல்லவர்களின் உதவியால் கிடைக்கும் உயர்வு என்பதெல்லாம் குருபலம் இருப்பவர்களுக்கே கிடைக்கும்.
குரு ஆதிக்கம் உள்ளவர்களுக்குக் கூட அவர் தகுதியானவராக இருந்தால்தான் அதிர்ஷ்டம் தேடிவரும். குருபலம் உள்ளவர்கள் அதிர்ஷ்டத்தைத் தேடுவதை விட, அதிர்ஷ்டமே இவர்களைத் தேடி வரும். தகுதி, திறமை, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தைத் தருபவர் குரு.
சுக்கிரன் தரும் அதிர்ஷ்டம்
குறுக்கு வழியில் அதிர்ஷ்டம் தருபவர் சுக்கிரன். குறுக்கு வழி என்றால் தர்மத்துக்குப் புறம்பான வழி என்று பொருளல்ல.
ஒருவருக்கு எந்தத் தகுதியும், திறமையும் இல்லாமலேயே, சிறிதும் உழைக்காமலேயே வரக்கூடிய அதிர்ஷ்டம்தான் குறுக்கு வழியில் வரும் அதிர்ஷ்டம் என்பது. இப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தைத் தருபவர் சுக்கிரன்.
ஒருவருடைய அதிர்ஷ்டத்தைக் குறிப்பிடும் பாவங்களாக லக்னத்துக்கு 2-ம் இடமான தனஸ்தானம், 4-ம் இடமான சுகஸ்தானம், 9-ம் இடமான பாக்கியஸ்தானம், 11-ம் இடமான லாபஸ்தானம் ஆகிய பாவங்கள் விளங்குகின்றன.
இந்தப் பாவங்களும், அவற்றுள் அமைந்திருக்கும் கிரக அமைப்புகளும் ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை எப்படி ஏற்படுத்துகின்றன என்பதைப் பார்ப்போம்.
2 - ம் இடம் அதிர்ஷ்டம் பெறும் வழி, வரக்கூடிய நிலை. வரும் தன்மை. எப்படி, எங்கிருந்து வரும் என்பதைப் பார்க்கும் பாவம் ஆகும்.
4 - ம் இடம் அதிர்ஷ்டத்தால் பெறக்கூடிய சுகம், நன்மை, தீமை, விளைவு, அளவு, முன்னேற்றம் என்பனவற்றைக் குறிக்கும்.
9 - ம் இடம் அதிர்ஷ்டத்தால் பெறும் பாக்கியம், புண்ணியம். கட்டிக்காக்கும் சக்தி, பயன்படுத்தும் விதம் ஆகியவற்றைக் குறிக்கும்.
11- ம் இடம் அதிர்ஷ்டத்தின் பலன், லாபம், உயர்வுகள் போன்றவற்றை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கிரக நிலைகள்
- லக்னத்துக்கு 2, 4, 9, 11 - ஆகிய இடங்களில் ஏதேனும் சுபகிரகங்கள் இருந்தால், அதிர்ஷ்டத்தின் பலனைப் பெறலாம்.
- 9 - ம் இடத்தில் சுப கிரகங்கள் குரு, வளர்பிறைச் சந்திரன், புதன், சுக்கிரன் நின்று இருந்தால், அதிகப்படியான அதிர்ஷ்ட பலனைப் பெறக்கூடும்.
- 9 -ம் இடத்துக்குடைய கிரகம் சுபர்களின் சாரம் பெற்று இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டம் பெறக் கூடியவர்.
- லக்னத்துக்கு யோகாதிபதியானவர் சுபர் சேர்க்கை, சுபர் பாதத்தில் நின்றிருந்தால் அதிர்ஷ்டம் கிடைக்க வழி வகுக்கும்.
- குரு, சுக்கிரன் 9 - ம் இடத்தில் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ அதிர்ஷ்ட பலன்கள் நிச்சயம் பெறக்கூடியவர்.
- 2, 4, 11- ம் இடத்துக்குடையவர்கள் 9 -ம் இடத்தில் நின்றிருந்தால் அளவு கடந்த அதிர்ஷ்டப் பலனைப் பெறுவார்கள்.
- 9 -ம் இடத்துக்குடையவர் 2, 4, 11 -ம் இடத்தில் நின்றிருந்தால் அதிர்ஷ்டம் பெறும் பாக்கியம் கொண்டவர்.
- ராகு, கேது சனி 9 -ம் இடத்தில் நின்றாலும் 9 - ம் பாவாதிபதியுடன் தொடர்பு இருந்தாலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்.
- 2, 4, 9, 11-ம் இடத்துக்குடையவர்கள் ஜாதகரின் யோகாதிபதியுடன் தொடர்புஇருந்தால், அதிர்ஷ்டத்தின் அரவணைப்பு இருக்கும்.
- 2, 9 -ம் இடத்தில் சுபர்கள் இருந்தால், கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அதிர்ஷ்டம் தேடி வரும்.
- கேந்திரஸ்தானங்களான 1, 4, 7 மற்றும் 10 -ம் இடத்துக்குடையவர்கள், 9 -ம் இடத்தில் இருந்தாலும், அதிர்ஷ்டம் இஷ்டம் போல் வரும்.
- 9 - ம் இடத்தில் லக்னாதிபதி அல்லது 9-ம் இடத்துக்குடையவனே இருந்தால், அதிர்ஷ்டம் முண்டியடித்துக் கொண்டு வரும்.
- 11-ம் இடத்துக்குடையவர் 2, 4 -ம் இடத்தில் இருந்தால், திடீர் யோகம் உண்டாகும்.
ஜாதகரின் யோக திசை வரும்போது இதற்குரிய பலன்கள் உச்சத்தைத் தொடும்.
http://news.lankasri.com/astrology/03/127168?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக