தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஜூன், 2017

தப்பை நியாயப்படுத்தும் தமிழ்ப்பண்டிதர்கள்!

நாங்கள் ஆங்கிலத்தையே தாயாக ஏற்ற மானம் கெட்டவர்கள் ,இதை ஏற்க மாட்டோமா என்ன?என்ன ஆங்கிலேயன் மட்டும் நம் நாட்டுக்கு வரவில்லை என்றால் நாம் பேச மொழியின்றி ஊமைகள் மொழியில்த்தான் உரையாடியிருப்போமோ!உன்னால் முடியவில்லை பக்கத்துவீட்டுக்காரன் சும்மாதானே இருக்கிறான்,ஒத்தாசைக்கு சேர்த்துக்கொள் என்கிறீர்கள்!சேர்க்கலாம்!சந்தேகம் வருமே!கவிதையில் அல்ல,தன மானத்தில்!

பாடினால் என்ன தப்பு?
ஒரு கவிஞர் வருங்காலத்தை உணர்ந்து தன் கவிதைகளில் ஆங்கிலச் சொற்களை அப்படியே கலந்து பாடினார். அவர் ஏதோ சாதரண கவிஞர் அல்ல. சாகித்திய மண்டலப் பரிசு வென்றவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் படித்துப் புலவராக வெளிவந்தவர்! அவர் இளவாலை மயிலங்கூடலைச் சேர்ந்த புலவர் பார்வதிநாதசிவம் அவர்கள்.
நாடியைப் பார்த்தார் இல்லை
நயனத்தைப் பார்த்தார் இல்லை
மாடியைப் பார்த்த வாறே
மருந்தினை எழுதித் தந்தார்
நாடியைப் பார்த்துத் தந்தால்
நன்றென்றேன் அயலில் நிற்கும்
லேடியைப் பார்க்க வேண்டும்
லேட்இப்போ செல்செல் என்றார்
புலவரின் இந்தப் பாடலைப் பாருங்கள். எளிமையான தமிழ். இலக்கணம் தவறாத செய்யுள். நோயென்று போன ஒருவரின் முகத்தை வைத்தியர் திரும்பிப் பார்க்கவில்லை. அவரின் நாடி நரம்பைக் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை. மாடியைப் பார்த்துக் கொண்டு மருந்து எழுதிக் கொடுக்கிறார். ஏன் கை நாடியைப் பிடித்துப் பார்த்து மருந்து தர மாட்டீர்களா என்று கேட்டால் பக்கத்திலே நிற்கிற பெண்ணைப் பார்க்க வேண்டும். ஏற்கனவே பிந்தி விட்டது நேரம். போங்கோ என்று சொல்கிறார் இது பாடலின் பொருள்.
இந்தக் கவிதையிலே லேடி லேட் என்ற இரு ஆங்கிலச் சொற்களைப் புலவர் பாட்டின் இடையிலேயும் அல்ல எதுகை மோனையாகவே பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். இது பாட்டின் எளிமையைக் கூட்டுவதோடு பொருளும் தெளிவாக புரியும் வண்ணம் இருக்கின்றது. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இன்னொரு பாட்டில் புலவர் சொல்லுவார்
அம்மியில் பலத்த ஓசை
எழுந்திட அரைப்பதாலே
மம்மியின் இதய நோய்கள்
வரவரக் கூடு தென்பார்
அம்மாவைப் பெரும்பான்மையான குழந்தைகள் இப்போ மம்மி என்று அழைப்பதால் தானும் அந்தச் சொற்பிரயோகத்தை அப்படியே பயன் படுத்துகிறார் புலவர். சமுதாயத்திலே அந்தச் சொல் புகுந்து விட்ட பிறகு அதை தூர வீசுவதால் என்ன பயன் என்று புலவர் நினைத்திருக்கலாம்.
கொழும்பு நகரில் ஒரு பொழுது என்ற கவிதையில் புலவரின் ஆங்கிலத்தைப் பாருங்கள்.
கல்லொடு மண்ணும் சேர்த்துக்
கடையிலே செய்த தோசை
பல்லொடு செய்த போரில்
பலத்ததோர் வெற்றி காண
மெல்லவே எழுந்து அந்த
இலைப்பொருள் எறிந்தே பிள்ளாய்
பில்லினைக் கொணர்க என்றேன்
பெற்றனன் கொடுத்தேன் வந்தேன்
பில்லினைக் கொணர்க. ஏன் பற்றுச் சீட்டு என்று பாட மாட்டீர்களா புலவரே என்று நாம் கேட்டால் நான் பாடுவது இருக்கட்டும். நீ பேசும் போது உன்வாயில் பற்றுச் சீட்டு என்ற தமிழ்ச் சொல்லா வருகிறது? இல்லையே. பில் என்று தானே கேட்கிறாய்? நான் அதைக் கவிதையில் பாடினால் என்ன தப்பு? இப்படித்தான் புலவரின் ஆத்மா கேட்கும்!
தமிழர் தகவல் 5.5.15 இதழில் வெளியான எனது கட்டுரையின் ஒரு பகுதி.
- இரா.சம்பந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக