தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஜூன், 2017

அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ மூலிகைகள்

நம் வீடு விருத்தியம்சத்துடன் திகழ தெய்வீக மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, வேம்பு, வில்வம் போன்றவைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.
அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அபூர்வ மூலிகைகள்
பொதுவாக நமது வீடுகளில் மரம், செடி, கொடிகள் வளர்ப்பது வழக்கம். விருட்சங்கள் வளர்ந்தால் நம் வீடு விருத்தியம்சத்துடன் திகழும் என்பது நம்பிக்கை. அதனால் காற்றோட்டமும் நன்றாக இருக்கும். மன அமைதியான சூழ்நிலை உருவாகும். அப்படிப்பட்ட தாவரங்களில், தெய்வீக மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, வேம்பு, வில்வம் போன்றவைகளை கண்டிப்பாக வளர்க்க வேண்டும்.
வெற்றிலை என்பது ஓர் அபூர்வ மூலிகையாகும். இது மருத்துவ குணத்துடன், மகத்துவம் மிக்கதாகவும் விளங்குகிறது. பொதுவாக நம் இல்லத்தில் நடக்கும் எந்த சுபநிகழ்ச்சியாக இருந்தாலும் வெற்றிலை, பாக்கு வைத்து தான் தொடங்கு கிறோம். இது ஓர் சத்தியப் பொருளாகும். இதன் முன்னிலையில் நடை பெறும் நிகழ்வுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிப்படுத்துவதுதான் இந்த தாம்பூலத்தின் தனிச்சிறப்பாகும். யாரும் வெறும் வெற்றிலை கொடுக்க மாட்டார்கள். அதோடு பாக்கு இணைத்துத்தான் கொடுப்பார்கள்.
வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். ‘வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை’ என்பது பழமொழி. வெறும் வெற்றிலை கொடுத்தால் உறவு பகையாகி விடும் என்பார்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல, தாம்பூலம் இல்லாது எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை.
நிச்சயதார்த்த முகூர்த்தத்தில் மணப்பெண்ணை உறுதிப்படுத்த நிச்சயதாம்பூலம் என்றுதானே பெயர் சூட்டியிருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்ணை உறுதி செய்வதற்கு பெரியவர்கள் முன்னிலையில் இந்த வெற்றிலை பாக்கு வைத்துதான் ‘பெண் என்னுடையது, பொன் உன்னுடையது’ என்று மூன்று முறை உச்சரித்து நிர்ணயம் செய்து கொள்வார்கள்.
இப்படிப்பட்ட சத்திய வாக்காகத் திகழும் வெற்றிலை, அனைவர் வீட்டிலும், அனைத்துச் சூழ்நிலையிலும் எளிதில் வளராது. குளுமையான சூழ்நிலையில் தான் வளரும். ஒருவர் வீட்டில் வெற்றிலைக் கொடி நன்றாக வளர்ந்தால், அவர்கள் இல்லம் செல்வச் செழிப்போடு சிறப்பாக இருக்கும். வெற்றிலை... லட்சுமி கடாட்சமுடைய மூலிகை. அதனால் இதை காய வைத்து தூக்கி எறியக்கூடாது என்று சொல்வார்கள்.
பொதுவாக சனி பிடிக்காத தெய்வமாக விளங்கும் அனுமனுக்கு, வெற்றிலை மாலை அணிவித்து வந்தால் வெற்றிகள் வந்து சேரும். வெற்றிலையை மட்டும் மாலையாக்கி அணியக்கூடாது. அதனுடன் சீவல் அல்லது பாக்கு சேர்த்து மாலையாக்கி அணிவித்து வழிபட்டால் எப்படித் தடைபட்ட காரியமும் எளிதில் முடியும். இதற்கு என்ன காரணம் என்றால், சீதா தேவி வெற்றிலை இலையில் உள்ள இரண்டு காம்புகளைக் கிள்ளி அனுமனின் சிரசில் போட்டு சிரஞ்சீவி பட்டம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பதை பழக்கமாக்கிக் கொண்டு வந்தனர்.
வெற்றிலையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று கருப்பு வெற்றிலை. மற்றொன்று வெள்ளை வெற்றிலை. வெள்ளை வெற்றிலை.. காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை... காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும். வெற்றிலை பெரிதாகவும் இருக்கும். இது மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.
பொதுவாக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சரியான விதத்தில் கலந்து வெற்றிலை போட்டால் தான் நன்கு வாய் சிவப்பாக இருக்கும். அப்படி இருந்தால் நமது உடம்பில் கால்சியம் சத்து நன்றாக உள்ளது என்று அர்த்தம். இந்த தாம்பூலம் தரிப்பது என்பது ஆதி காலத்தில் இருந்தே கிராமப் புரங்களில் இருந்து வருகின்றது.
பெண்கள் கண்டிப்பாக வெற்றிலை போட வேண்டுமாம். பொதுவாக குழந்தைகளை மென்று சாப்பிடச் சொல்லி வெற்றிலைக் காம்பைக் கொடுப்பர். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதும், சளி, ஜலதோஷம் போன்றவற்றைப் போக்கவல்லதும் இந்த வெற்றிலை தான். நீர் கோர்த்திருக்கும் காயங்களின் மீது, வெற்றிலையை அரைத்துத் தடவினால் நீரை உறிஞ்சி விடும்.
தலைவலிக்கு மருந்து மாத்திரைகளை உபயோகிக்காமல், வெற்றிலையை அனலில் வாட்டி நெற்றிப் பொட்டுப் பகுதியில் ஒட்டிக் கொள்வர். இதனால் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம். குழந்தைகளின் நெஞ்சுச் சளி நீங்க, வெற்றிலையை அனலில் வாட்டி ஒத்தடம் வைப்பார்கள் வெற்றிலைச் சாறு மிக உன்னதமான மருந்தாகும்.
வெற்றிலையுடன், பாக்கு அல்லது சீவல் கலந்து போடலாம். புகையிலையைத் தவிர்ப்பது நல்லது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த மூன்றிலும் காரம், துவர்ப்பு, கால்சியம் ஆகிய மூன்று சத்துகளும் இணைகின்றன. பல்லுக்கு உறுதியை வழங்குகின்றன. வாய் துர்நாற்றம் அகல்வதற்கும் வழிகாட்டுகின்றன. வாயுத் தொல்லையைப் போக்கும் சக்தி வெற்றிலைக்கு உண்டு.
இப்படிப்பட்ட வெற்றிலையை வளர்க்க விரும்புபவர்கள், துளசி போன்று மிகவும் புனிதமாக அதை வளர்க்க வேண்டும். காம்புகளைக் கடினமாகக் கிள்ளாமல் மென்மையாகக் கிள்ள வேண்டும். மனத் தூய்மையும், உடல் தூய்மையும் அவசியம். தொட்டிகளில் வைத்து மேல்நோக்கிக் கொடியைப் படரச் செய்யலாம். அதிக நிழலும், தண்ணீரும் இது வளர்வதற்கு அவசியம் தேவை.
அற்புத மூலிகையான வெற்றிலையை வீட்டில் வளர்த்தால் மன அமைதி பெருகும். மருத்துவச் செலவும் குறையும். தினமும் வெற்றிலையைச் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை போன்ற நோய்கள் கூட குணமாகும் வாய்ப்பிருக்கிறது.
பிரச்சினைகள் ஏற்படுகின்ற பொழுது நாம் இறைவன் சன்னிதிக்குச் சென்று அர்ச்சனை செய்கிறோம். அப்போது பழம், தேங்காய் வெற்றிலை, பாக்கு, பூ, கற்பூரம் அல்லது நெய் வைத்துத் தான் இறைவனை அர்ச்சிக்கிறோம். அப்பொழுதுதான் அர்ச்சனை முழுமை பெறுகிறது. அத்தியாவசியம் மிகுந்த மூலிகையான வெற்றிலை, நமது அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
ஆகவே வெற்றிலைக் கொடி வளர்ப்போம்! வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக