தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 பிப்ரவரி, 2014

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வரலாறு.......

இது கி.பி 789ம் ஆண்டிலே நடைபெற்றது.
கந்தபுராணம், இராணமயணம் முதலாய் புராண இதிகாசங்களிலே புகழ்ந்துரைக்கப்படுவது ஈழம். இவ்வீழத்தே தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைவாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. அவ்வீழத்தின் வடபால் சிரசென சைவமும் தமிழும் தனிநடமாடுதற்கிடமாகியது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கடல் மருங்கில் “கண்டகி” என் முற்காலத்தே அழைக்கப்பெற்ற கீரிமலை புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பிணிகள் பல நீக்கினோர் பலர்.

அத்தீர்த்தத்து மருங்கில் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார் திருத்தம்பலேசுவரி சமேத திருத்தம்பலேஸ்வரப்பெருமான்.இவ்வாலயம் போர்த்துக்கேயரினாலே அழிக்கப்பட இப்போதுள்ள ஆலயம் சைவமும் தமிழும் வளர்த்த நாவலர் பெருமானின் கருத்தின் படி அமைக்கப்பெற்றது.

குன்மநோயும் குதிரைமுகமும் கொண்டவளாகிய திசையுக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லி என்னும் அரசிளங்குமாரி சோழநாட்டினின்றும் இங்கு வந்து தங்கி, தீர்த்தமாடி சிவாலய தரிசனம் செய்யும் நியமம் பூண்டு அதன் பயனாய் நோயும் நீங்கி முகம் மாறப்பெற்றாள் என்பது வரலாறு. அவள் தங்கியிருந்த இடம் “குமாரத்தி பள்ளம்” என இன்றும் வழங்கப்படுகின்றது. எவ்விடத்தில் அவள் குதிரை முகம் நீங்கியதோ அவ்விடம் இன்று மாவிட்டபுரம் என அழைக்கப்படுகின்றது.

முகம் மாறிய இடத்தே முருகப்பெருமானுக்கு கோயில் எடுக்க விரும்பிய அவள் தந்தைக்கு தெரிவிக்க அவன் மகிழ்ந்து, ஆலய அமைப்பிற்கு தேவையான விக்கிரகங்களையும், தொழிலாளர்களையும், அந்தணர்களையும் அனுப்பி வைத்தான். ஆலயம் சிவாகம முறைப்படி அமைக்கப்பெற்றது. இது கி.பி 789ம் ஆண்டிலே நடைபெற்றது.


ஆலயத்தே நித்திய பூசைகளும், வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் பொருந்திய நாள் ஆகிய காலங்களில் விசேட பூசைகளும், வருடந்தோறும் ஆடி அமாவாசையன்று 25ம் திருவிழாவாகிய தீர்த்தத்திருவிழா அமைய 25 திருவிழாக்களும் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன.

மாவைக்கந்தன் மேல் ஏராளமான பக்தி நூல்கள் எழுந்துள்ளன. அவற்றுள் சுன்னாகம் முத்துக்குமார கவிராயரின் மாவைச் சுப்பிரமணியர் தோத்திரம் இருபாலை சேனாதிராச கவிராயரின் மாவைப் பதிகம், மாவை ஊஞ்சல், சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரின் மாவைப் பதிகம், மாவை இரட்டை மணிமாலை, மாவைக் கலிவெண்பா, நல்லூர் சரவணமுத்துப் புலவரின் மாவை ஊஞ்சற் பாடல், சபாபதி நாவலரின் மாவை அந்தாதி, தெல்லிப்பழை பொன்னம்பலப்பிள்ளையின் மாவையமக அந்தாதி, மாவை திருவிரட்டை மணிமாலை, ஆறெழுத்துப் பத்து என்பன குறிப்பிடத்தக்கன.

-சக்தி-
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக