தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 பிப்ரவரி, 2014

ரத சப்தமி; இது சூரியனுக்குரிய விரதம்!!


சிலருக்கு கொடுக்கும் மனம் இருக்கும்; ஆனால், பணமிருக்காது. அப்போது, உதவ முடியாமல் போயிற்றே... என்ற, ஆதங்கம் ஏற்படும். கூடவே, தர்மம் செய்ய வழி இல்லாமல் போனதே... இதனால், நமக்கு சொர்க்கம் கிடைக்காதோ... என்ற, சந்தேகமும் எழும். இப்படி ஏங்குபவர்களுக்கென்றே ஏற்பட்ட விரதம் தான் ரத சப்தமி; இது சூரியனுக்குரிய விரதம். சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், பவனி வருகிறான். இந்த ஏழு குதிரைகள் என்பது, வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கும். ரதம் என்பது காலச்சக்கரம்; காலையையும், மாலையையும் அடையாளம் காட்டி, காலம் கடந்து கொண்டிருக்கிறதே... எப்போது தர்ம காரியங்களைச் செய்யப் போகிறாய்... என்று கேட்டு, உலக மக்களுக்கு நினைவூட்டியும், தர்ம காரியங்களைச் செய்ய இயலாத ஏழைகளை, எளிய விரதத்தின் மூலமாக, தன் உலகத்திற்கு, சூரியன் அழைத்துக் கொள்பவதாக ஐதீகம்.

ரத சப்தமி விரதம் மிக எளிமையானது; ஆண்களும், பெண்களும் இதை அனுஷ்டிக்கலாம். சப்தமியன்று, காலையில், பெண்கள் தங்கள் தலையில், ஏழு எருக்க இலைகளும், அதன் மேல் சிறிது அட்சதையும் வைத்து நீராட வேண்டும். புனிதத்தலங்களுக்கு சென்று நீராடுவது இன்னும் நல்லது. அவ்வாறு செல்ல முடியாவிட்டால், கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட புனித தீர்த்தங்களை மனதால் நினைத்து, அவை தாங்கள் நீராடும் நீரில் கலந்திருப்பதாகக் கருதி, நீராட வேண்டும். சூரிய பகவானுக்கு பழம் நைவேத்யம் செய்து, பூக்களை மேல் நோக்கி தூவி, வணங்குவதுடன், உபவாசம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் கஞ்சி, பால் எடுத்துக் கொள்ளலாம். இந்த விரதத்தை கடைபிடிப்போருக்கு, தர்மம் செய்யாததால் ஏற்படும் குறை நீங்குவதுடன், அவர்களது வம்சத்தில், ஊனமில்லாத குழந்தைகள் பிறப்பர்; சந்ததியினர் ஏழ்மையில் இருந்து விடுபடுவர். மறுபிறவியில், உத்தம குடும்பத்தில் பிறப்பர். இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் திருமணம் ஆகாதவருக்கு, அழகான வாழ்க்கைத்துணை அமையும்; வாகன வசதி கிடைக்கும்; புத்திசாலியான குழந்தைகள் பிறப்பர்.

கல்வி, இசை, விளையாட்டு, இன்னும் அவரவருக்கு விருப்பமான துறையில் சிறந்து விளங்க, இவ்விரதத்தை, வளர்பிறை சப்தமிகளில் அனுஷ்டிக்கலாம். ரதசப்தமியன்று செய்யும் தானத்திற்கு மிகுந்த பலன் உண்டு. அன்று தானம் செய்வோருக்கு, செல்வவளம் கிடைக்கும். குறிப்பாக, குடை மற்றும் செருப்பு தானம் வழங்கினால், சூரியனின் அருள் பூரணமாகக் கிடைக்கும். இவ்விரதம் குறித்து அறிந்தோர், மற்றவர்களுக்கு சொல்லித் தரலாம். அவ்வாறு சொல்வோருக்கு, தேவலோகம் மற்றும் பிரம்மலோகத்தில் இடம் ஒதுக்கி வைக்கப்படும் என்கிறது சூரிய புராணம். எளிமையான இவ்விரதத்தை மேற்கொண்டு, உங்களால் முடிந்த தானத்தை செய்தால், வாழும் காலத்தில் செல்வ வளமும், வாழ்வுக்குப் பின் தேவலோகம் கிடைக்க வாய்ப்புண்டு.

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக எல்லாம் வல்லவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன் ~ சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக