தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 பிப்ரவரி, 2014

வெற்றி தரும் வீரபத்திரர் .............................................


சிவபெருமானின் மூர்த்தங்களில், அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திரர். தவறு செய்தவனுக்குத் தண்டனை தந்து நீதியைக் காக்கும் நீதி தேவனாக அவதரித்தவரே வீரபத்திரர். அளவற்ற ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அகந்தை கொள்ளலாகாது. ஆணவமே மனிதனை அழிக்கும். வேறு ஒரு பகையும் வேண்டாம். இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழிந்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர் வடிவம். அட்ட வீரட்டம் என்று அழைக்கப்படும் எட்டுத் தலங்களுள், ஆறு தலங்களில் ஈசனே நேராகச் சென்று அசுரர்களை அழித்தார். இரண்டில் மட்டும் தான் நேராகச் செய்யாமல், தனது அருட்பார்வையில் உண்டான வீரபத்திரர், பைரவர் ஆகியோரை அனுப்பி, தட்சன், பிரம்மன் ஆகியோரைத் தண்டித்துப் பின்னர் அருள் புரிந்தார். அதில், வீரபத்திரரை அனுப்பிப் பெற்ற வெற்றி தனி வீர வரலாறாகவும் உன்னதமான வெற்றியாகவும் கருதப்படுகிறது. ஏழு வீரட்டங்களில், தேவர்களுக்கு உதவிடவே எம்பெருமான் போர் புரிந்துள்ள நிலையில், தட்ச சங்காரத்தில் மட்டும் தேவர்களையே எதிர்த்துப் போரிட்டு அவர்களை நிலைகுலையச் செய்து, கடுமையாகத் தண்டித்தான். தேவர்கள் ஒவ்வொருவரும் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட விதம், தனித்தனி வீர பராக்கிரமமாகவும் போற்றப்படுகிறது. கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருமந்திரம், திருவாசகம், திருவிசைப்பா ஆகியவற்றோடு சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரங்களிலும் வீரபத்திரரின் சாகசங்கள் போற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளன.

புராணங்களில் வீரபத்திரர்: கச்சியப்ப சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட அரிய நூல் கந்தபுராணம் ஆகும். ஆறு காண்டங்களை உடையது. ஆறாவது காண்டமே தக்க காண்டம். இதில் வேள்விப்படலம், உமைவருபடலம், வீரபத்திரர் படலம், யாக சங்காரப் படலம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வீரபத்திரர் படலத்தின் அறுபது பாடல்களும், யாக சங்காரப் படலத்தின் நூற்று எழுபத்தாறு பாடல்களும் வீரபத்திரர் புகழ்பாடும் செய்திகளைக் கொண்டவை ஆகும்.

உலகம் உய்வதற்காக, உமையம்மை திருக்கயிலையிலிருந்து காஞ்சிக்கு வந்து 64 அறங்களை வளர்த்து, கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கத் திருமேனியை அமைத்து, பூசனை செய்த வண்ணம், தவமிருந்த பெருமை காஞ்சித் தலத்திற்கே உரியதாகும். அதன் காரணமாகவே, தேவருலகம் முழுவதுமே திரண்டெழுந்து, ஏகம்பரை வழிபாட்டுப் பெரும்பேறு பெற்றனர். சிவஞான முனிவரால் இயற்றப்பெற்ற காஞ்சிப்புராணம், இலக்கிய நயம் மிகுந்து விளங்குவதாகும். தல புராணங்களில் தலையாய நூல் ஆகும். 68 படலங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் தக்கேசப் படலம் எழுபத்தேழு பாடல்களைக் கொண்டதாகும். அதனுடன் முப்பத்தொன்று பாடல்களைக் கொண்ட விடுவச் சேனப்படலமும், வீரபத்திரரைப் பற்றிக் கூறுபவை ஆகும். வேதங்களில் கூறப்பட்டுள்ள வேள்விகளில் சிறந்ததை, சிவபெருமானையே தலைவராகக் கொண்டு செய்யவேண்டும். பிறரைக் கொண்டு செய்வோர் அழிவார்கள். சிவபரம்பொருளை இகழ்வோரும், அதற்கு உடன்பட்டோரும் வருந்தவேண்டிவரும். சிவ அபராதம் எனும் குற்றம், சிவ பூஜையால் மட்டுமே நீங்கும். வேள்விச் சாலையில் தேவர்களோடு நிகழ்ந்த போரில், திருமாலும் கருடாரூடராக வீரபத்திரரை எதிர்த்த நிலையில், திருமால் ஏவிய சக்கரத்தை வீரபத்திரர் மார்பில் அணிந்திருந்த கபாலம் ஒன்று கவ்விக்கொண்டதும், விசுவச்சேனப் படலத்தில், அதனைத் திருமால் மீண்டும் பெற்றார் என்பதும் விளக்கப்படுகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில் வீரபத்திரரை வீரன், வில்லி, செஞ்சடையான், பத்திரனார் என்று பல பெயர்களால் குறிப்பிடுகிறார். மணிவாசகரின் திருவாசகத்தில் திருஉந்தியார் பகுதி, வீரபத்திரரின் சாகசங்களை, மகளிர் உந்திக் குதித்து விளையாடும்போது பாடும் 20 பாடல்களாகத் தொகுத்துள்ளார்.

சாடிய வேள்வி சரிந்திடத்
தேவர்கள் ஓடியவா பாடி - உந்தீ பற!

என்று தக்கனின் யாகசாலையே சரிந்ததாக, தேவர்கள் ஓடி ஒளிந்ததைக் கூறுகிறார். இந்திரன் குயிலாக மாறி ஓடி ஒளிந்தான். அக்னி தேவனோ கரங்களை இழந்து கிளியாக மாறி மறைந்தான். அவிர்ப்பாகம் உண்ணத் துடித்த பகன் கண்களை இழந்தான். பகலவனின் பற்கள் நெறித்ததும், குதித்துக் குதித்து மகளிர் பாடும் எக்காளப் பாடல்களாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கவை ஆகும்.

தட்சனை வதம் செய்த வீரபத்திரர்: பிரம்மதேவனின் புதல்வனான தட்சன், தன் மகளான தாட்சாயனியை எப்பெருமானுக்கே தாரைவார்த்துத் தந்தபோதிலும், தனது அகந்தையால் சிவபெருமானைப் பகைத்துக் கொண்டான். நித்தமும் சிவ நிந்தனையையே சிந்தையில் கொண்டான். சிவபெருமானை அவமதிப்பதற்காகவே, முப்பதினாயிரம் மகரிஷிகளைக் கொண்டு பெரியதொரு வேள்வியைத் துவக்கினான். தன் மகளை மணந்த மகேசுவரனுக்கு மட்டும் அழைப்பினை அனுப்பாமல், பிரம்மா, விஷ்ணு, அஷ்டவசுக்கள், நட்சத்திர தேவதைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி மகேசனை அவமானப்படுத்திட எண்ணினான். பதியின் சொல்லை மீறி, தந்தை தட்சன் நடத்தும் வேள்விக்கு வந்த தாட்சாயனி, தட்சனின் கொடுஞ்சொற்களால் மகேசனுக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் தாங்காமல், அந்த வேள்விக் குண்டத்திலேயே பாய்ந்து மறைந்தாள். தேவியின் மறைவு கேட்டுச் சினங்கொண்ட முக்கண்ணனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவரே வீரபத்திரர்.

சிவபெருமானின் அம்சமாகவே, அக்னிச்சடையுடனும், மூன்று கண்களுடனும், எட்டுக் கரங்களிலும் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாலம், திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியபடி, தேள்களினாலான மாலையணிந்து, நாகத்தை உபவீதமாகக் கொண்டு, கால்களில் பாதுகையணிந்தபடி, கண்களில் வீசும் பொறி வெங்கனலாகக் கிளம்பியபடி தோன்றினார் வீரபத்திரர். சிவபெருமானை மதிக்காமல், சிவநிந்தனையையே குறிக்கோளாக அந்த யாகத்திற்கு வந்தோர் அனைவருமே தண்டிக்கப்பட்டனர். தட்சன் தலையை முதலில் வீரபத்திரர் வெட்டி வீழ்த்தினார். மான் வடிவம் கொண்டு ஓடிய யாகபுருஷனை வதம் செய்தார். சூரியனின் கண்களைப் பிடுங்கி, பற்களை உதிர்த்தார். அக்னிதேவனின் கரம் கெடுத்தார். சரஸ்வதியின் மூக்கை அறுத்தார். இந்திரனின் தோள் நெரித்தார். பிரம்மதேவன் தலை இழந்தான். வேள்விச்சாலை முழுவதும் அழிந்திட, தேவர்கள் திசையெட்டிலும் ஓடிட, திருமால் வீரபத்திரரை எதிர்த்தார்.

திருமாலின் சக்கரத்தை, வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் ஒரு முகம் கவ்விக்கொண்டது. தீயோன் தக்கனோடு இணைந்தோர் அத்தனை பேருமே வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டனர். எல்லோரும் ஈசனுக்கு அடிபணிந்து பிழைபொறுக்குமாறு வேண்டிட, இடபாரூடராய் பெருமான் காட்சியளித்தார். வேள்விக் களத்தில் இறந்த அனைவருமே உயிர்பெற்றனர். தட்சனுக்கு ஆட்டுத்தலையே பொருத்தப்பட்டது. ஈசனின் பாதம் பணிந்து மன்னித்தருளக் கோரினான் தட்சன். தான் செய்த பிழை பொறுத்து, அவிர்ப்பாகத்தை ஏற்பதோடு வேள்விச்சாலை அமைந்த இடத்திலேயே எழுந்தருளி, பூவுலகோர்க்கு அருள்புரிய வேண்டுமென மண்டியிட்டான் தட்சன். அந்தத் தலம்தான் பாரிஜாத வனமாகவிருந்த பறியலூர். இன்று திருப்பரசலூர் என்று அழைக்கப்படுகிறது.
-சக்தி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக