தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கணிகர் நீதி - ஆதிபர்வம் பகுதி 142 அ (நரிக் கதை)!


(சம்பவ பர்வத் தொடர்ச்சி)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டுவின் வீர மைந்தர்கள், பெரும் சக்தி கொண்டு பலத்தை பெருக்கி வருவதைக் கேள்விப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன் கவலையில் மூழ்கி மிகவும் பரிதாபமாக இருந்தான். பிறகு, அவன், அரசியலின் அறிவியலை நன்கு அறிந்தவரும், மன்னனுக்கு ஆலோசனை வழங்குவதில் நிபுணருமான, அமைச்சர்களில் முதன்மையான கணிகரை அழைத்து, "ஓ அந்தணர்களில் சிறந்தவரே, பாண்டவர்கள் தினமும் பூமியைத் தங்களது நிழலால் அதிகமாக மறைத்து வருகின்றனர். நான் அவர்களிடம் மிகுந்த பொறாமை கொண்டுள்ளேன். நான் அவர்களுடன் அமைதி காக்கவா? அல்லது போர் தொடுக்கவா? ஓ கணிகரே, இது தொடர்பாக உமது அறிவுரை நிச்சயமாக எனக்குத் தேவை. நான் நீர் சொல்வது போல நடந்து கொள்வேன்." என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த அந்தணர்களில் சிறந்தவர், மன்னனால் இப்படிக் கேட்கப்பட்டதும், கூர்மையான வார்த்தைகளல், அரசியலின் அறிவியல் ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசினார்.

ஓ பாவமற்ற மன்னா, உனக்கு விடையாக நான் சொல்லப் போவதைக் கேள். ஓ குரு மன்னர்களில் சிறந்தவனே, நான் சொல்வதையெல்லாம் கேட்ட பிறகு என்னிடம் கோபம் கொள்ளாதே. மன்னர்கள், உயர்த்திப்பிடித்த கதைகளுடனேயே {கதாயுதங்களுடனேயே} (தேவைப்படும்போது தாக்குவதற்கு) எப்போதும் {தண்டனை கொடுப்பதற்குத்} தயாராக இருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் தங்கள் வீரத்தை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் தாக்கத் தயாராக இருக்கும் மன்னனைக் கண்டு அனைவரும் அஞ்சுவர். ஆகையால் ஒரு மன்னன் எப்போதும், அவன் செய்யும் அனைத்தையும் விட தண்டனைக்கு தஞ்சமளிக்க வேண்டும் {தண்டனை கொடுக்க தயாராக இருக்க வேண்டும்}. தனது எந்த பலவீனத்தையும் எதிரி அறிந்து கொள்ளாத வகையில் அவன் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், தான் தனது எதிரியிடம் கண்டுபிடிக்கும் பலவீனத்தைக் கொண்டு (அவனது அழிவிற்காக) அவனைத் தொடந்து கொண்டேயிருக்க வேண்டும். அவன் {மன்னன்} எப்போதும், ஒரு ஆமை தனது உடலை மறைத்துக் கொள்வது போல, தனது செயல்களையும், அதன் முடிவுகளையும், தனது சொந்த பலவீனத்தையும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்து வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட செயலைத் தொடங்கி விட்டால், அதை அவன் முழுமையாக முடிக்க வேண்டும். ஒரு முள்ளைப் பார், அதை முழுமையாக எடுக்காவிட்டால், அது வளரும் புண்ணை {புண்} உற்பத்தி செய்யும். உனக்குத் தீங்கு செய்யும் எதிரியைக் கொல்வது எப்போதும் பாராட்டுக்குரியதே. எதிரி பெரும் வீரனாக இருந்தால், அவனது ஆபத்து {அழிவு} காலத்தை {கெட்ட நேரத்தை} எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். பிறகு, எந்த மன உறுத்தலும் இல்லாமல் அவனைக் கொல்ல வேண்டும். அவன் {எதிரி} பெரும் போர்வீரனாக இருந்தால், அவனது ஆபத்துக் காலத்தை {கெட்ட நேரத்தை} எதிர்பார்த்துக் காத்திருந்து, அவனை வானுலகிற்கு பறக்க வைக்க வேண்டும். ஓ தகப்பனே {மன்னா}, எவ்வளவு வெறுப்பூட்டும் வகையில் எதிரி இருந்தாலும் அவனை வசைபாடக் கூடாது. அருகருகே இருக்கும் பொருட்கள் ஒன்றின்மேல் ஒன்றுவிழுவதால் எளிதாகத் தீயைப் பரவ வைத்து ஒரு கானகத்தையே எரித்துவிடும் சக்தி ஒரு தீப்பொறிக்கு உண்டு.  மன்னர்கள் சில நேரங்களில் குருடர்களாகவும், செவிடர்களாகவும் நடிக்க வேண்டும். தங்களால் தண்டிக்க இயலாவிட்டால் {தண்டிக்க முடியாத காரணம் இருக்கும்போது}, தண்டனைக்குரிய குற்றம் எதையும் தான் காணாதது போல  நடிக்க வேண்டும். இது போன்ற நேரங்களில், அவர்கள் தங்கள் விற்களை {வில்} புல்லால் ஆனதாக மதிக்க வேண்டும். ஆனால், அவர்கள் எப்போதும் கானகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மான்கூட்டம் போல விழிப்புடன் இருக்க வேண்டும். உனது பகைவன் உனது ஆட்சிக்குள்ளிருக்கையில், அவனை வெளிப்படையாகவோ அல்லது ரகசியமாகவோ எந்தவகையிலாவது கொன்றுவிடு. அவன் உன்னிடம் பாதுகாப்புக் கோரினாலும், அவனிடம் நீ கருணையே காட்டாதே. உனது எதிரியையோ அல்லது உன்னை ஒருமுறை காயப்படுத்தியவனையோ,{தேவைப்பட்டால்} ஏராளமாகப் பணத்தை இறைத்தாவது கொன்றுவிடு. அப்படி அவனைக் கொல்வதால் நீ நிம்மதியாக இருக்கலாம். இறந்தவர்களால் பயமுறுத்தவே முடியாது. நீ உனது மூன்று, ஐந்து மற்றும் ஏழு (ஆதாரங்களை) பகைவர்களை {மூன்று: பிரபுசக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி - ஐந்து: மந்திரி, தேசம், அகழ், பொக்கிஷம், ஸேனை - ஏழு: ராஜா, மந்திரி, ஸ்நேகன், பொக்கிஷம், தேசம், அகழ், ஸேனை.} அழிக்க வேண்டும். நீ உனது எதிரியை வேரோடும் கிளைகளோடும் {வேரோடும் வேரடி மண்ணோடும் என்றே தமிழில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.} அழிக்க வேண்டும். அதன்பிறகு, நீ அவர்களின் கூட்டாளிகளையும் நம்பிக்கைக்குரியவர்களையும் அழிக்க வேண்டும். கருப்பொருள் அழிந்துவிட்டால், கூட்டாளிகளாலும், நம்பிக்கைக்குரியவர்களாலும் நிலைத்திருக்க முடியாது. ஒரு மரத்தின் வேர் கிழிக்கப்பட்டால் {அறுக்கப்பட்டால்}, அதன் கிளைகளாலும் {Branches}, குச்சிகளாலும் {twig} முன்பு போல நிலைத்திருக்க முடியாது.

உனது சொந்த செயல்களையும், அதன் முடிவுகளையும் கவனமாக மறைத்து, உனது எதிரிகளின் குறைகளையும் பலவீனத்தையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஓ மன்னா, உனது எதிரிகளை ஆவலுடன் கவனித்துக் கொண்டே உனது நாட்டை நீ ஆள வேண்டும்.  வேள்வி நெருப்பைத் தொடர்ந்து எரியவிட்டும், பழுப்பு {Brown} நிற ஆடை அணிந்தும், ஜடா முடி தரித்தும், மிருகங்களின் தோலை உனது படுக்கையாகக் கொண்டும், {நல்லவன் போல் வேடமிட்டு} உனது எதிரியின் நம்பிக்கையை முதலில் நீ பெற வேண்டும். அவன் நம்பிக்கையை நீ பெற்றதும், உடனே ஓநாயாக எழுந்து அவன் மேல் விழ வேண்டும். கனிந்த பழங்களைப் பறிப்பதற்காக, மரத்தின் கிளைகளை வளைக்க, கொக்கி மாட்டப்பட்ட தடியைப் பயன்படுத்துவது போல, செல்வத்தை அடைய தெய்வீக{காவி} உடையும் அணியலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் தேர்வுக் கொள்கையையே {பறிக்கப் போகும் கனிகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கொள்கை} நீ பின்பற்ற வேண்டும் ஆகையால் கனியை அடைய பின்பற்றப்படும் நடைமுறையே, உனது எதிரிகளை அழிப்பதிலும் பின்பற்றப்பட வேண்டும். காலம் வரும் வரை உனது எதிரியைத் தோளில் தாங்கிக் கொள், அப்போதுதான், நேரம் வந்ததும், மண்பானையை கடும் தரையில் வேகமாக தூக்கி வீசுவது போல, அவனை கீழே தூக்கி வீசி துண்டுகளாக உடைக்க முடியும். ஒரு எதிரி உன்னிடம் பரிதாபகரமாகப் பேசினால், நீ அவனை விட்டுவிடக் கூடாது. அவனிடம் எந்த கருணையும் காட்டாமல் அவனைக் கொன்றுவிட வேண்டும். அமைதியின் கலைகளாலோ அல்லது பணம் செலவழித்தோ ஒரு எதிரி அழிக்கப்பட வேண்டும். எதிரியின் கூட்டாளிகளிடம் ஒற்றுமையின்மையை வளர்த்தோ அல்லது படைபலத்தாலோ, உனது பலத்துக்கு உகந்த எந்தச் செயலைச் செய்தாவது நிச்சயமாக உனது எதிரியை அழிக்க வேண்டும்," என்றார்.

திருதராஷ்டிரன், "அமைதியின் கலைகளாலோ அல்லது பணம் செலவழித்தோ அல்லது ஒற்றுமையின்மையை ஏற்படுத்தியோ அல்லது படைபலத்தைப் பயன்படுத்தியோ ஒரு எதிரியை எப்படி அழிக்கலாம் என்பதை எனக்கு உண்மையாகச் சொல்வீராக," என்று கேட்டான்.

கணிகர், "ஓ ஏகாதிபதியே கேள், கானகத்தில் வசித்து வந்த, அரசியலின் அறிவியல் அறிந்த ஒரு நரியின் வரலாற்றைக் கேள். தனது நலனின் மட்டுமே அக்கறைகொண்ட ஒரு ஞானமுள்ள நரியானது, புலி, எலி, ஓநாய் மற்றும் கீரிப்பிள்ளை ஆகிய நான்கு சகாக்களுடன் வாழ்ந்து வந்தது. ஒரு நாள், கானகத்தில் ஒரு மான்கூட்டத்திற்கு தலைமையான வலுவான மான் ஒன்றை அந்த நண்பர்கள் கண்டனர். அந்த மானின் வேகத்தாலும், பலத்தாலும் அதை அவர்களால் அடிக்க முடியவில்லை.

அதனால் அவர்கள் அனைவரும் கலந்து யோசிக்க ஒரு கூட்டம் போட்டனர். நரி பேச்சைத் துவங்கி, "ஓ புலியே, நீயும் இந்த மானை அடிப்பதற்குப் பெரும் முயற்சி செய்தாய். ஆனால் இளமையான இந்த மானின் வேகத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் அது உன்னால் முடியவில்லை. இப்போது இந்த எலி சென்று, தூங்கிக் கொண்டிருக்கும் அந்த மானின் காலைக் கடிக்கட்டும். அந்த வேலை முடிந்ததும்,  நீ அதை அணுகி, அதை அடி. அதன்பிறகு, நாம் அனைவரும் பெரும் மகிழ்வோடு அந்த விருந்தை உண்போம்." என்றது. நரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவரும், அந்த நரி சொன்னது போலவே விழிப்புடன் வேலை செய்தனர். எலி சென்று அந்த மானின் காலைக் கடித்தது. எதிர்பார்த்தது போலவே புலி அந்த மானைக் கொன்றது. மானின் உடல் அசைவற்று தரையில் கிடப்பதைக் கண்ட நரி தனது சகாக்களிடம், "அருளப்பட்டவர்களே, உங்களைச் சுத்திகரித்துக் கொண்டு வாருங்கள். அதே வேளையில் நான் இந்த மானைப் பார்த்துக் கொள்கிறேன்," என்றது.

நரி சொன்னதைக் கேட்டு அனைவரும் நீரூற்றுக்குச் சென்றனர். நரி அங்கேயே காத்திருந்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழ்ந்து தியானித்தது. பெரும் சக்தி கொண்ட புலி, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு அந்த இடத்திற்கு முதலில் திரும்பியது. அங்கே நரி தியானத்தில் மூழ்கி இருப்பதைக் கண்ட புலி, நரியிடம், "நீ ஏன் வருத்தத்தில் இருக்கிறாய்? ஓ ஞானமுள்ளவனே, புத்திசாலி உயிரினங்களில் நீயே முதன்மையானவன். நாம் அனைவரும் இந்த விலங்கின் உடலை உண்டு மகிழ்வோம்." என்றது. அதற்கு அந்த நரி, "ஓ பெரும் பலம் கொண்ட கரமுடையவனே, எலி என்ன சொன்னான் தெரியுமா? விலங்குகளின் மன்னன் {புலியின்} பலம் கேவலமானது. இந்த மான் என்னால் கொல்லப்பட்டது. எனது கரத்தின் பலத்தால், அவன் {புலி} இன்று தன் பசியைப் போக்கிக் கொள்ளப்போகிறான் என்று அந்த எலி சொன்னான். அவன் {எலி} இப்படித் தற்பெருமையாகப் பேசியதால், நான் இந்த உணவைத் தொட விரும்பவில்லை." என்றது. அதற்கு அந்த புலி, "எலி அப்படிச் சொன்னது உண்மையானால், எனது உணர்வுகள் விழித்துக் கொள்ளட்டும். நான் இன்று முதல், இந்தக் கானகத்தில் உலவும் உயிரினங்களை எனது கரத்தின் பலத்தால் கொன்று, அதன் சதையை மட்டுமே உண்பேன்," என்று சொல்லி சென்றுவிட்டது.

புலி சென்றதும் அந்த இடத்தில் எலி வந்தது. எலி வருவதைக் கண்ட நரி, "ஓ எலியே, அருளப்பட்டிரு. ஆனால் கீரிப்பிள்ளை என்ன சொன்னான் என்பதைக் கேள். இந்த மானின் உடல் (புலியின் நகங்கள் பட்டதால்) விஷத்தன்மையுள்ளது. நான் இதை உண்ண மாட்டேன். ஆனால் மறுபுறம், ஓ நரியே நீ அனுமதித்தால், அந்த எலியைக் கொன்று, அவனை உணவாகக் கொள்கிறேன் என்றான்," என்றது. இதைக் கேட்ட எலி அஞ்சி, விரைவாகத் தனது பொந்துக்குள் நுழைந்தது. எலி சென்றதும் அந்த இடத்திற்கு, ஓ மன்னா,  தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு ஓநாய் வந்தது. ஓநாய் வந்ததைக் கண்ட நரி அதனிடம், "விலங்குகளின் மன்னன் {புலி} உன்னிடம் கோபமாக இருக்கிறான். உனக்கு நிச்சயமாகத் தீங்கு நேரப்போகிறது. அவன் தனது மனைவியுடன் இங்கு வருவான் என்று எதிர்பார்க்கிறேன். நீ உனக்கு விருப்பப்பட்ட படி செய்து கொள்." என்றது. மிருகத்தின் சதையை விரும்பும் ஓநாயும், {பந்தியிலிருந்து} நரியால் இப்படி விலக்கப்பட்டது. அந்த ஓநாய் தனது உடலை மிகவும் சுருக்கிக் கொண்டு வேகமாக ஓடிப் போனது. அதன்பிறகுதான் கீரிப்பிள்ளை வந்தது. ஓ மன்னா, அது வருவதைக் கண்ட நரி, "எனது கரத்தின் பலத்தால், நான் மற்றவர்களைத் தோற்கடித்தேன். அவர்கள் ஏற்கனவே ஓடிவிட்டார்கள். முதலில் நீ என்னிடம் சண்டையிடு, அதன்பிறகு நீ விருப்பப்பட்டபடி இந்த {மானின்} சதையைச் சாப்பிடு" என்றது. அதற்கு கீரிப்பிள்ளை, "வீரர்களான புலியும், ஓநாயும், மற்றும் புத்திசாலியான எலியும் உன்னால் தோற்கடிக்கப்பட்டனர் என்றால், நிச்சயமாக நீ அவர்களைவிடபெரிய வீரனாகத்தான் இருப்பாய். நான் உன்னுடன் சண்டையிட விரும்பவில்லை." என்று சொல்லி கீரிப்பிள்ளை சென்றுவிட்டது.

கணிகர் தொடர்ந்தார், "அவைகள் எல்லாம் அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நரி தனது கொள்கை முடிவுகளின் வெற்றியால் {suceess of his policy என்கிறார் கங்குலி} மிகவும் மகிழ்ந்து, தனியாக அந்த மானின் சதையை உண்டது. மன்னர்கள் எப்போதும் இதே போல {இந்த நரியைப் போல} நடந்து கொண்டால், அவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பர். தைரியமில்லாதவர்களை அவர்களின் பயத்தைத் தூண்டியும், வீரமானவர்களை அமைதியின் கலைகளைக் கொண்டும், பேராசைக்காரர்களுக்கு செல்வங்களைப் பரிசளிப்பதாலும், தாழ்ந்தவர்களிடம் வீரத்தைக் காட்டியும், அவர்களை நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும். நான் சொன்ன இதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, ஓ மன்னா, நான் சொல்லப்போகும் வேறு ஒன்றைக் கேள்."
- See more at: http://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section142.html#sthash.SPZGLvhd.dpuf
https://www.google.nl/search?newwindow=1&site=&source=hp&q=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&oq=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&gs_l=hp.3...2608079.2615859.0.2620126.8.8.0.0.0.0.2558.4569.2j2j1j5-2j9-1.8.0....0...1c.1j4.35.hp..4.4.1493.a6nCt_67e1w

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக