முற்குறிப்பு:
1. இது மகவே வேண்டாம் என்று எண்ணுவோருக்கல்ல; இப்போதைக்கு வேண்டாம் என்று நினைப்போருக்காக
2. நானும் இரண்டு வளர்ந்த பிள்ளைகளின் தகப்பன்; இன்னம் ஆறேழு வருடங்களில் குறைந்த பட்சம் இரண்டு பேரப்பிள்ளைகளையாவது காணும் பாக்கியம் செய்ய வேண்டியவன்.
3. கொஞ்சம் நீளமானது என்பதால் இன்று பதிக்கிறேன்.
தடுப்பது நம்மால் முடியும்.
கொடுப்பதை ஈசன் மட்டுமே செய்ய முடியும்.
__________________________
சிலர், திருமணம் செய்து கொண்ட புதிதில், 'இப்போ குழந்தை வேண்டாம். ரெண்டொரு வருஷம் ஜாலியா இருக்கலாம்' என்ற எண்ணத்தில் எதாவது எச்சரிக்கை முறைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகளற்ற வாழ்வு ரசனையானதா என்பது அவரவர் மனப்போக்கு. ஆனால், இதில் சில சிக்கல்கள் உண்டு.
குழந்தை பிறப்பதைத் தடுப்பது அவர்கள் பயன்படுத்தும் எச்சரிக்கைகளா அல்லது இயல்பாகவே அது உருவாக வாய்ப்பு குறைவாக இருக்கிறதா - என்பதை இதன் காரணமாக அறிய முடியாது போகிறது.
இரண்டொரு வருடம் கழித்து, 'சரி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்' என்று எண்ணி எச்சரிக்கைகளை கைவிடுகின்றனர். பின்னரும் வாராதபோது, சற்று கவலை கொள்கின்றனர். 'சரி வராமயோ போகும்' என்று இன்னொரு இரண்டொரு வருடம் செல்கிறது.
இது போல, எதோ பிரச்சினை இருக்கு போலிருக்கு என்று அடையாளம் கண்டு கொள்வதற்குள் ஒரு ஆறேழு வருடமாகி விடுகிறது.
அதற்குள் உற்றத்தின், சுற்றத்தின் கிண்டல்களையும், சமயத்தில் ஏச்சுப் பேச்சுகளையும் அனுபவிக்க நேர்கிறது.
மருத்துவரிடம் போனாலும், அவ்ர் என்ன பிரச்சினை என்று கண்டு கொண்டாலும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த விஷயத்தில் உடனடித் தீர்வு, கியாரண்டியான ரிசல்ட்டு என்று ஏதும் கிடையாது.அவரவர் பாக்கியம், அவ்வளவே.
இதை விட வேதனை அளிக்கும் இன்னொரு விஷயம்:
எப்படியோ நமது காப்புகளையும் மீறி, விரும்பாத நேரத்தில் குழந்தை உருவாகி விட்டால் அதைக் கருக்கலைப்புச் செய்வது.
அது கொடிய பாவம் என்னும் சாஸ்திரம் சார்ந்த வாதம் வேண்டாம்.
.
ஆனால், அப்படிக் கலைப்பதற்கும் சிலர் முறையான வழிகளைப் பயன்படுத்தாமல் தனக்குத் தோன்றியபடியோ யாராவது கூறியபடியோ பலனில்லாத வழிகளைப் பின்பற்றி, பின்னர் அக்குழந்தைகள் அரைகுறையாகவோ, உடல் அல்லது மூளை வளர்ச்சி இல்லாமலோ பிறப்பது பெருங்கொடுமை.
பிறபபதற்கு முன்னால் கொன்று போடும் மனங்கொண்டவர்க்கும், பிறந்து விட்ட குழந்தையை ஏதும் செய்ய மனம் வருவதில்லை (இதற்கும் விதி விலக்குகள் உண்டு என்பது வேறு விஷயம்).
அது போன்ற குழந்தையைப் பெற்றவர்களுக்கு அவர்கள் இறக்கும் வரை அக்குழந்தை ஒரு பிரச்சினை.
அந்தக் குழந்தைக்கோ வாழ்வே பிரச்சினை.
இது ஏதோ படிப்பறிவு அவ்வளவு இல்லாத சாமானியர்கள் நிலை என்று எண்ணிக் கொள்ளவேண்டாம். எனக்குத் தெரிந்த, ஒரு பெரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரும் அவரது மனைவியும் (அவரும் ஒரு பொது மருத்துவர்தான்) செய்த தவறு இது.
இருவரும் இன்று வயது முதிர்ந்த நிலையில், வளர்ந்தும் வளராத தங்கள் ஒரே மகனைப் பார்த்து அல்லும் பகலும் நெஞ்சுருகிக் கொண்டிருக்கின்றனர்.
திருமணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் இளைஞர்/ யுவதிகளுக்கும் புது தம்பதிக்கும் என் வேண்டுகோள்:
முதல் குழந்தையை தள்ளிப் போடாதீர்கள்.
அதன் பிறகு இரண்டாவதை நீங்கள் எப்போது விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது ஒன்றே போதுமென்றாலும் சரிதான். இப்போது பல வீடுகளிலும் அவ்வாறுதான் இருக்கிறது.
வாழ்க்கையை ரசிக்க வேண்டும்தான்.
ஆனால், அது முதல் இரண்டு வருடங்களில் மட்டுமல்ல; வாழும் காலம் முழுவதுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக