ஐரோப்பிய நாடுகளில் காணப்படும், "ரோமா' பழங்குடிகள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்படும் "ரோமா' பழங்குடிகள், இந்நாள் வரையில், தீண்டதகாதவர்களாகவே கருதப்படுகின்றனர். இந்தியாவிலிருந்து, 1,500 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பாவுக்கு இவர்கள் குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது. சிந்துசமவெளிக்கு படையெடுத்து வந்த அரேபியர்கள், இவர்களை ஈராக்கில் குடியேற்றியதாகவும் வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.ஒரு சில நாடுகளில் இந்த பழங்குடிகள், குதிரைக்கு லாடம் அடிப்பது, கரடியை வைத்து வித்தை காட்டுவது, ஜோதிடம் சொல்லுவது, இசை கருவி மற்றும் பெண்களுடன் நடனமாடி பிழைப்பது போன்ற வேலைகளை செய்துள்ளனர்.ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு இணையாக, ஆயிரக்கணக்கான "ரோமா' பழங்குடிகளும் விஷ வாயு செலுத்தி கொல்லப்பட்டு உள்ளனர். ஆனால், யூதர்களுக்கு கிடைத்த அங்கீகாரம், "ரோமா' பழங்குடிகளுக்கு கிடைக்கவில்லை.
சமஸ்கிருத மொழியை கலந்து பேசும் இந்த பழங்குடிகள், ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்ததாகவும், இவர்கள் பயன்படுத்திய "ஸ்வஸ்திக்' சின்னத்தை தான் நாசி கட்சியினர் பயன்படுத்தி கொண்டதாகவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்."ரோமா' பழங்குடிகள் சோம்பேறிகள்; அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ முடியாதவர்கள் என, ஐரோப்பியர்களால் ஒதுக்கப்படுகின்றனர். செக் மற்றும் ஸ்லோவேவியா நாடுகளில், "ரோமா' மக்கள் வாழும் பகுதியை சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டு, மற்ற சமூகத்தவரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளனர்.இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தஞ்சம் புகுந்த இப்பழங்குடி மக்கள், விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். வறுமையின் காரணமாக ஒரு சிலர் திருடியதால், இந்த பழங்குடியினர்கள் "திருடர்கள்' என்று சில நாடுகளில் கருதப்படுகின்றனர்.
ஸ்காட்லாந்து அரச குடும்பத்தினரின் நோயை இந்த பழங்குடியை சேர்ந்த சிலர் குணப்படுத்தியதால், அந்நாட்டில் இவர்களுக்கு ஒரு காலத்தில் மதிப்பளிக்கப்பட்டது. இவர்களில் பலர், சுவீடனுக்கும் குடிபெயர்ந்தனர், இதனால், அங்கு இவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள "பிளெமிங்கோ' நடனம் "ரோமா' பழங்குடியினருக்கே உரியது.இந்த பழங்குடிகள், வெள்ளையர்களை விட நிறத்தில் குறைந்து, இந்தியர்களை போன்று இருந்ததால், இன்று வரை ஒதுக்கப்பட்டவர்களாக தான் உள்ளனர்.இவர்கள் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் என, நீண்ட நாட்களாக கருதப்பட்டது. ஆனால், தற்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய மரபணு ஆய்வில் "ரோமா' பழங்குடியினர், இந்திய வம்சாவளியினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள மரபணு ஆராய்ச்சி மையமும், எஸ்டோனிய ஆய்வாளர்களும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் இணைந்து, ஐரோப்பிய நாடுகளில் உள்ள, 1,000க்கும் அதிகமான "ரோமா' பழங்குடியினரின் குரோமோசோம்களை, இந்தியர்களின் செல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தது. "ரோமா' பழங்குடிகளின் "ஒய்' குரோமோசோமும், இந்தியர்களின் குரோமோசோமும் ஒரே மாதிரியாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, பிரிட்டன் ஜிப்சி கவுன்சில் நிர்வாகி ஜோசப் ஜோன்ஸ் குறிப்பிடுகையில், "நாங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விலாசமே இல்லாமல் இருந்தோம். இந்த ஆய்வின் மூலம் நாங்கள் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்து உள்ளது. எங்களை தீண்டதகாதவர்கள் என்று சொன்னாலும் பரவாயில்லை. இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரமே போதும்' என்றார்.
via Mohan Nallakannu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக