ஆர்டிக் சமுத்திரத்தின் புதிய சைபீரிய தீவுப் பகுதியில் பனியில் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட இராட்சத மெமத் உயிரினத்தின் உடலினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி வடக்கு கரையோர சைபீரியாவின் லியநொவோசிபேர்ஸ்க் ஆர்கிபிலாகோ எனவும் அவ்வேளையில் அப்பகுதியில் வெப்பநிலை -7 முதல் -10 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது 10,000 வருடங்கள் பழைமையானதாகக் கருதப்படும் குறித்த விலங்கின் உடலிலிருந்து குருதி மாதிரியை வெற்றிகரமாக ஆராய்ச்சிக்கென பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தனை வருடங்கள் குருதி உறையா நிலையில் இருந்தமை அனைவரையும் அதிரவைத்துள்ளது. குறித்த மெமத் 60 வயதாக இருக்கும் போது உயிரிழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஆராய்ச்சியாளர் செம்யொன் கிரிகோர்யெவ் தலைமையிலான ரஸ்ய மற்றும் கொரிய நாட்டுக் குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.
தென்கொரியாவும், ரஸ்யாவும் அழிந்து போன மெமத்தினை மீண்டும் உருவாக்கும் கூட்டு ஒப்பந்தமொன்றில் கடந்த வருடம் கையெழுத்திட்டிருந்தன.
மெமத்தின் உடலை மூடியிருந்த பனிக்கட்டியை அகற்றியதும் அதன் வயிற்றிலிருந்து இருண்ட நிறத்தில், கனமான இரத்தம் வடிந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்.
இரத்தம் திரவ நிலையிலேயே இருந்தமை, அதன் தசை இழையமும் புதிய இறைச்சியைப் போல சிகப்பு நிறத்திலேயே இருந்தமையும் தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக செம்யொன் கிரிகோர்யெவ் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் வாழும் சில உயிரினங்கள் பனியில் தமது உடல் இழையங்கள் உறைவதைப் பாதுகாக்கும் பொருட்டு கிரயோபுரடெக்டன்ட் 'cryoprotectant' எனும் இரசாயனத்தை உடலில் சுரக்கும் இயல்பினைக் கொண்டுள்ளன.
மெமத்தின் குருதியிலும் கிரயோபுரடெக்டன்ட் இராசயனம் அடங்கியிருக்கக் கூடுமெனவும் அதன் காரணமாகவே தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மெமத்தில் குருதி உறையாமல் திரவ நிலையில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இரத்தத்திற்கு மேலதிகமாக பற்கள், எலும்புகள், தசை இழையங்கள் ஆகியவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.
இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் மெமத்தை குளோனிங் முறையில் மீண்டும் உருவாக்கும் முயற்சிக்கு புத்துணர்வு அளிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமன்றி 'மெமத்' இனை குளோனிங் முறையில் தம்மால் உருவாக்க முடியுமென ஜப்பானிய விஞ்ஞானியொருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
ஜப்பானிய கொயாட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகிரா இரிடானியே ஒரு மெமத்தினை வெறும் 4 வருடங்களிலேயே உருவாக்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்காக சிதைவடையாத நேர்த்தியான மெமத்தின் கருவை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் இதனை ஆபிரிக்க யானைகளின் கரு முட்டைகளில் செலுத்துவதன் மூலம் உருவாக்கமுடியுமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாராய்ச்சிக்கு பொருத்தமான கருவினைத் தேடி சைபீரியாவிற்கு செல்லவுள்ளதாகவும் அகிரா அப்போது தெரிவித்திருந்தார்.
மேலும் 1990 ஆம் ஆண்டு இத்தகைய ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சைபீரிய நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இறந்துபோன மெமத்தின் உடல் தோல் மற்றும் தசை இழையத்திலிருந்து கருவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியானது தோல்வியடைந்தது. கடும் குளிரினால் கருவானது சிதைவடைந்திருந்தமையே அதற்கான காரணமாகும்.
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாக விஞ்ஞானிகளால் கூறப்படும் இந்த இராட்சத விலங்கினம் பின்னாளில் முற்றாக அழிந்துபோனமை குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக