தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 மே, 2013

உங்களை உளவு பார்க்கும் உங்கள் மொபைல் போன்கள் !

இப்போது எல்லா தரப்பினர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. பழைய போன்கள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி எறிந்த நாங்கள், இப்போது ஸ்மாட்போன் அடிமைகளாக மாறிவிட்டோம் அல்லவா ? கடந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே சாதா போன்களின் விற்பனையை ஸ்மார்ட் போன் மிஞ்சிவிட்டதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள். ஆனால் இந்த போனை பாக்கெட்டில் வைத்திருப்பது, ஒரு உளவுத்துறை அதிகாரியை கூடவே அழைத்துச் சென்று, உங்கள் அந்தரங்கங்களைக் கொட்டுவது போன்ற ஆபத்தான விஷயம் என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு ‘எஸ்’ சொல்வது போல, கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் இருந்து சமீபத்தில் 70 ஆப்பிளிகேஷன்களை தூக்கியிருக்கிறது. அவை வாடிக்கையாளர்களின் பர்சனல் விஷயங்களை உளவு பார்த்ததுதான் இந்த நடவடிக்கைக்குக் காரணம்!

"உங்கள் மகளின் பழக்கவழக்கங்களைக் கண்காணிக்க வேண்டுமா" ?
"உங்கள் மனைவியை உளவு பார்க்க வேண்டுமா" ?
"துரோகம் செய்யும் கணவரை ஆதாரத்தோடு பிடிக்க வேண்டுமா" ?

எங்களின் ‘ஸ்பைவேரை’ பயன்படுத்துங்கள். சம்பந்தப்பட்டவரின் மொபைலில் இது இருக்கும் இடமே தெரியாமல் ஒளிந்துகொள்ளும். அவர் யார் யாரிடம் எவ்வளவு நேரம் பேசுகிறார் ? எந்த இடத்துக்கெல்லாம் செல்கிறார் என்றெல்லாம் அவருக்கே தெரியாமல் இது உங்களுக்குத் தகவல் அனுப்பும். அவர் பேசுவதைக் கூட ரெக்கார்டு செய்து கொள்ளலாம்’’ - இப்படியான விளம்பரங்கள் இணையத்தைத் திறந்தால் நூற்றுக்கணக்கில் கொட்டுகின்றன. 
இந்த போனைக் கையில் வைத்திருப்பது பூனையை மடியில் கட்டிக்கொண்டு அலையிற மாதிரியே இருக்கு ! என சமீபத்தில் சிம்பு கூட ஒரு பேட்டியின்போது சொல்லியிருந்தார். அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் ‘உளவு ரிஸ்க்’ இளைஞர்களுக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

மார்க்கெட்டில் மலிவாகக் கிடைக்கும் இந்த உளவு ஆப்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி, நம் பர்சனல்களுக்குள் பாம் வைக்கலாம். நம் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருந்து நம்பர்களைத் திருடலாம், நம் ஸ்வீட் நத்திங் எஸ்.எம்.எஸ்களை காப்பி எடுத்து படிக்கலாம். இந்த டெக்னிகல் சாத்தியத்தைத்தான் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது மேற்படி கூகுளின் அதிரடி நடவடிக்கை. 

அப்படியானால் ஸ்மார்ட் போன் வைத்திருப்பது அவ்வளவு ரிஸ்க்கா ?

மொபைல் செக்யூரிட்டி துறையில் இயங்கி வரும் ‘க்விக் ஹீல் டெக்னாலஜி’ நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளர் சூரிய பிரகாஷிடம் இது குறித்து கேட்டபோது...

‘‘தூங்க வைக்க ஒரு ஆப்பிளிகேஷன், எழுப்பிவிட ஒரு ஆப்பிளிகேஷன் என்று ஆகிவிட்டது இன்று. அடிப்படையில் எல்லா ஆப்பிளிகேஷனுமே நம் பர்சனல் தகவல்களைப் பயன்படுத்தும். ஆனால், திருடாது. உதாரணத்துக்கு, பிரபல ஃபேஸ்புக் ஆப் கூட நமது கான்டாக்ட் லிஸ்டைத் தொடர்புகொள்ள அனுமதி கேட்கும். ஆனால், அதை வெளியில் யாருக்கும் அது தருவதில்லை. நாம் ஆச்சரியமான ஆப், அதிசயமான ஆப் என்று ஆசைப்பட்டு எங்கிருந்தோ டவுன்லோடு செய்யும் ஆப்கள் இந்த நேர்மையைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த இடத்தில்தான் பிரச்னை வருகிறது. பொதுவாக, நமது ஆப்கள் என்ன செய்கின்றன என்பதோடு, அது நம்பகமான நிறுவனத்திடமிருந்து வருகிறதா என்பதையும் பார்த்துத்தான் இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

ஆண்ட்ராய்டு போன்களைப் பொறுத்தவரை அது, ‘கூகுள் ப்ளே’ எனப்படும் அதிகாரபூர்வமான மார்க்கெட்டில் இருந்து மட்டுமே ஆப்களைப் பெறும். அதன் செட்டிங்ஸ் மெனுவுக்குள் சென்று ஒரு சின்ன அனுமதியை க்ளிக் செய்தால் மட்டுமே வெளியில் இருந்து டவுன்லோடு செய்த ஆப்களை அது ஏற்கும். தங்கள் பிரைவஸி திருடப்படுவதன் ஆபத்து புரியாத பலர், இந்த அனுமதியை கிளிக் செய்து வைக்கிறார்கள். சில கடைகளில் போன் வாங்கும்போதே இந்த அனுமதியை கிளிக் செய்து கொடுப்பது இன்னும் வேதனையானது. கூகுள் ப்ளேயில் கூட ஒரு ‘ஆப்’ டவுன்லோடு செய்யும்போது, நமக்கு முன் அதை டவுன்லோடு செய்தவர்கள் அதற்கு என்ன ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள், அது பற்றி நல்லவிதமாக விமர்சனம் சொல்லியிருக்கிறார்களா என்பதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் ‘அக்ஸப்ட் அண்டு டவுன்லோடு’ பட்டனை அழுத்த வேண்டும். இன்ஸ்டால் ஆகும்போது, ‘இந்த ஆப் உங்கள் போனில் கீழ்க்கண்ட அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கிறது’ என்று ஒரு பட்டியலைக் காட்டும். அதில் உங்கள் போன் புக், கால் லாக், ஜி.பி.எஸ் என்று சம்பந்தமில்லாதவை எல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த ஆப் வேண்டாம் என்று முடிவெடுப்பதே நல்லது.

ஆண்ட்ராய்டு போன்களில் இருப்பது போலவே ஆப்பிள் போன்களுக்கும் ஸ்பைவேர் ஆபத்து உண்டு. ஆனால், குழந்தைகளைக் கண்காணிக்கவும், கணவன் - மனைவிக்குள் வேவு பார்க்கவும் இணையத்தில் விற்கப்படுபவை அனைத்தும் உண்மை என்று சொல்ல முடியாது. இதில் போலிகளும் உண்டு. உதாரணத்துக்கு, ‘போனில் பேசக் கூட வேண்டாம்... அது பக்கத்தில் இருந்தாலே சம்பந்தப்பட்ட நபர் அப்போது என்ன பேசுகிறார் என்பதை ரெக்கார்டு செய்ய முடியும்’ என்கிறார்கள். இதெல்லாம் டெக்னிகலாக சாத்தியம்தானா என்பதே இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அதீத பயமும் வேண்டாம்... அசட்டையும் வேண்டாம்’’ என்றார் அவர். காசையும் கொடுத்து ஒரு நிரந்தரப் பிரச்னையை பாக்கெட்டில் வைத்துத் திரிய வேண்டுமென்பது நம் தலையெழுத்து. அட, நிஜமாகவே மொபைல் போனும் காதலியும் ஒன்றுதான் போலிருக்கிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக